| தீபச்செல்வனின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ சிதிலமாகி உறைந்த காலம் கருணாகரன் எழுதிய குறிப்பு 'வெளிக்களம்' பகுதியில் இடம்பெறுகிறது |போரும் வாழ்வும் உயிர்மையில் எழுதும் கதைத் தொடரில் நவம்பர் மாதம் இதழில் 'நகர் மீள் நாட்கள்' வெளி வந்திருக்கிறது |தீபம் ஆங்கிலத் தளத்தில் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த 'THE EMPEROR’S CITY, PALACE & THE SEA-SHORE' இடம்பெறுகிறது. |'பதுங்கு குழியில் பிறந்த குழந்தை' கவிதைப் புத்தகம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது, தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

Tuesday, November 10, 2009

மழைக்கிராமத்தில் நனைந்து ஊறிப்போன சொற்கள்

தீபச்செல்வன்
____________________
சொற்கள் விறைத்துப்போயிருக்க
மழை சனங்களில் குளித்துக்கொண்டிருக்கிறது.

மலக்குழியில் புதைந்து இறந்த
சிறுமியின் உடலை
மீட்டு வைத்திருக்கிறர்கள்.
கல்லாற்றில் மிதந்துகொண்டிருக்கிறது
தண்ணீர் நிரப்பும் கலன்கள்.
முழுமையாக
நிவாரணக் கிராமத்தை
நனைத்துக்கொண்டிருக்கிறது மழை.
கூடாரங்களுக்குள் தண்ணீர் நிறைய
குழந்தைகள் மிதந்துகொண்டிருக்கின்றன.

மழைக்காடாகிறது
ஒதுக்குப்புறமாக இருக்கிற காட்டுக்கிராமம்.
அள்ளுண்டு போகிறது முட்கம்பிகள்.
களைத்த முகத்தை கழுவி
நிரப்பிக்கொண்டிக்கிறது பெருமழை.

திறந்த வெளியில் விளையாடிக்கொண்ருந்த
சிறுவர்கள்
மழையில் ஒதுங்கி நிற்கிறார்கள்.
குளித்துக்கொண்டிருக்கிறது கூடாரங்கள்.
சோற்றுப்பானை உடைந்து விழ
அடுப்பு கரைந்து முடிகிறது.

விறைத்துப்போயிருக்கிறது மனம்.
பள்ளத்தை நோக்கிச் செல்லுகிறது கூடாரம்.
கால்வாயில் போகும் பாத்திரங்களுக்கு
பின்னால்
ஓடிச்செல்லும் அம்மாவின் கால்கள்
மணலில் புதைகின்றன.

நிலத்தை கழுவிய நீர்
முட்கம்பிகளுக்குள் அலைந்து
கிராமத்தை குளமாய் நிரப்பியிருக்கிறது..
சொற்கள் நனைந்து நீருரிப்போய்க்கிடக்கிறது.
சேற்றில் புதைந்துகொண்டிருக்கிறது
ஆறு கிராமங்களும்.
--------------------------------
(13.09.2009 செட்டிக்குளம் தடுப்புமுகாம் கிராமங்கள்)

0 கருத்துகள்: