Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 8 செப்டம்பர், 2008

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்

-----------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு
திரும்பிக்கொண்டிருந்த
அம்மாவை அக்கராயனில்
நான் தேடிக்கொண்டிருந்தேன்
ஷெல்களுக்குள்
அம்மா ஐயனார் கோயிலை
விழுந்து கும்பிட்டாள்
ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.

நேற்று நடந்த கடும் சண்டையில்
சிதைந்த கிராமத்தில்
கிடந்தன படைகளின் உடல்கள்
கைப்பற்றப்பட்ட
படைகளின் உடல்களை
கணக்கிட்டு பார்த்தபடி
சிதைந்த உடல்கள்
கிடக்கும் மைதானத்தில்
பதுங்குகுழியிலிருந்து
வெளியில் வந்த
சனங்கள் நிறைகின்றனர்.

பக்கத்து வீட்டில்
போராளியின் மரணத்தில்
எழுகிற அழுகையுடன்
இன்றைக்கு நாலாவது தடவையாக
திடுக்கிட்டு எழும்பிய அம்மா
முறிகண்டி பிள்ளையாரை
கும்பபிட்டபடி ஓடுகிறாள்
பூக்களும் மண்ணும்
கைகளில் பெருகுகிறது.

02
போன கிழமை விட்டு வந்த
கிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது
குசினிக்குப் பக்கத்தில்
கிடந்த பதுங்குகுழியில்
படைகளின் ஏழு சடலங்கள்
மூடுண்டு கிடந்தன.

போராளிகள் கைப்பற்றிய
ஆயுதங்களில் மீட்கப்பட்டிருந்த
கிளைமோர்களைக் கண்டும்
எறிகனைகளைக்கண்டும்
சனங்கள் பெருமூச்செறிந்தனர்.

போர் வாழ்வை அழித்தபொழுது
கிராமங்கள் போர்க்களமாகின
அக்கராயன்குளம் காடுகளில்
ஒளிந்திருக்கும் படைகளிடம்
நாச்சிக்குடா வீதியே அகப்பட்டிருந்தது

03
அகதிகள் வீடாயிருந்த
ஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன
அகதிக்குடியிருப்புகள் நிறைந்த
மணியங்குளம் கிராமம்
எரிந்து சாம்பலாய்க் கிடந்தது.

நிலத்தில் பதுங்கமுடியாதபொழுது
வெளியில் வந்து விடுகிறேன்
தலைகளில் விழும் எறிகனைகளை
ஏந்தும் பிள்ளைகளை
நினைத்து துடிக்கிற
தாய்மார்கள் வெளியில் நின்றனர்.

செஞ்சிலுவைச்சங்கம்
கொண்டு வந்த போராளியின் உடல்
மேலும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு சிங்களத்தாய்
துடித்தழுகிறாள்
ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய்
துடித்தழுகிறாள்
சிதைந்த கிராமங்களில்
பரவிக்கிடந்தன
படைகளின் உடல்கள்
மதவாச்சியை கடந்து
படைகள் வரத்தொடங்கியபொழுது
வவுனியாவைக்கடந்து
போராளிகள் போகத்தொடங்கினர்.

தெருமுறிகண்டி மடங்களில்
கிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.

புதுமுறிப்பில் வீழ்ந்த
ஏறிகனைகளில் இறந்த
குழந்தைகள்
வரிச்சீருடைகளை அணிந்த
காட்சிகளை
ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

படைகளை நோக்கி சுடுகிற
போராளிகளின் மனங்களில் இருந்தன
பசுமையான கிராமங்களும்
அங்கு நடமாடித்திரிகிற சனங்களும்.
-------------------------------------------------------
04.09.2008
-----------------------------------------------------

2 கருத்துகள்:

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

வலிமிகுந்த வேதனைகளை ரணமான வார்த்தைகளால் நிரப்பி எழுதியிருக்கிறீர்கள்.

உண்மையில் உணர்வுமிக்க கவிதையால் கண்களுக்குள் விளையும் காட்சிகள் நெஞ்சை நனைக்கின்றன.

என்னசொல்வதென்றே தெரியவில்லை.

(பின்னூட்டங்களில் Word Verification ஐ நீக்கிவிடுங்கள்)

Theepachelvan சொன்னது…

deeஅன்புள்ள இறக்குவானை நிர்ஷன்

உங்கள் கருத்துக்கு நன்றி.
மலையகத்திலிருந்தான உங்கள் வருகை
மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்கள் உணர்வுகளை பகிர்வது
உறவுகளை முன்னேற்றவது என்பன
மிகவும் அவசியமாக இருக்கிறது.

தொட்ர்ந்து இணைந்திருங்கள் கருத்துக்களை பரிமாறலாம்.

நன்றி

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...