Blogger இயக்குவது.
|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது? - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

சனி, 16 மே, 2009

மணலில் தீருகிற துயர்

---------------------------------------------------------
தீபச்செல்வன்
---------------------------------------------------------------
மண்மேடுகள் ஒவ்வொன்றாய் விழுகிறது
துயர் கொண்டலையும்
பிணதேசத்தின் குழந்தைகள்
மரணங்களின் கொடு எல்லையில்
நின்று இழப்பின் பெருவலிகொண்டனர்.
எங்கும் கண்டதில்லை இந்த அழுகைகளை.
மிஞ்சியிருக்கிற குழந்தைகள்
என்ன சொல்லி அழுகின்றனர்
எல்லோருக்கும் கேட்கிறது.

கடல்கரையோரமாய் பெயர்ந்தலைந்து
மீள அதே இடத்திற்கு
திரும்புகிறபோது
விழுந்துகொண்டேயிருக்கிறது உயிர்கள்.
அதிகாரம் இன்னும் கொளுக்க
வானம் சுருங்கி பெயர்ந்து விழுகிறது.

யார் கருணைகொண்டு வந்தனர்.
குழந்தைகளின் உலகம் மறுக்கப்பட்டு
அதிகாரங்களால் அழிவுதானே
கொண்டு வரப்படுகிறது.
இன்றும் ஆயிரம் பிணங்கள்
மண்மேடுகளின் பின்பக்கமாய் விழுந்திருந்தன.
மீற்றர்களினால் முன்னேறுகிற
படைகள் பிணங்களின் குழந்தைகளை
மீட்டு படம் பிடித்தனர்.

கீழே வைக்கப்பட்ட ஆயுதங்களை
எடுத்து காட்சிப்படுத்தி
சுற்றிக்கொண்டிருக்கிற தாக்குதல்களில்
அடைந்த வெற்றியின் களிப்பில்
கிலோமீற்றர்கள் மேலும் சுருங்குகின்றன.
மண் சுருங்கிறதை
எல்லோரும் அறிவார்கள்.
கைப்பற்றப்பட்ட மண்ணரணால்
மூடுப்படுகிறது உயிரிருக்கிற பிணங்கள்.

எனினும் மண் விழுகிறது.
குழந்தைகள் மீளமீள
மணலில் வந்து மோதுகின்றனர்.
இங்கில்லை பெருந்துயர்.
அதிகாரம் கொள்ளுகிற வெற்றி
இறுதிக் கட்டத்தில் நின்றுகொண்டு
துயரின் கழுத்தை நெறிக்கிறது.

இரண்டு இராணுவ அணிகள்
சந்திக்கின்றன.
குழந்தைகள் யாருமற்று அநாதைகளாகி
அழுகிய பிணங்களை பற்றிப்பிடித்தனர்.
அதிகாரங்கள் கூத்தாடுகின்றன.
இன்னும் சற்று நேரத்தில் ஓய்ந்தடங்கும்
மணலில் மோதுகிற துயர்.
சனங்கள் தீருகின்றனர்.
மண்மேடுகள் ஒவ்வொன்றாய் விழுகிறது.
-------------------------------------------------------------------------------
15.05.2009

1 கருத்துகள்:

உமா சொன்னது…

//சுற்றிக்கொண்டிருக்கிற தாக்குதல்களில்
அடைந்த வெற்றியின் களிப்பில்
கிலோமீற்றர்கள் மேலும் சுருங்குகின்றன.//

இன்று ஒரு பிரபாகரனைப் பிடித்துவிடலாம் அதற்காக பல்லாயிரம் பேரை பலியிடலாம் ஆனால் மிஞ்சியிருக்கும் ஒவ்வொறு அணுவும் ஓராயிரம் பிரபாகரனையல்லவா உருவாக்கிவிடும். எனது வருத்தமெல்லாம் இலங்கை ஈராக்கைப் போன்று இன்னொரு நிரந்தர யுத்த பூமியாகிவிடக்கூடாதே என்பதுதான். யுத்தத்திலேபிறந்து யுத்தத்திலே பிழைத்து வளரும் குழந்தைகள் மனதில் அன்பை யார் விதைப்பது. இன்றய தினம் இங்கு அவரவர் தங்கள் நாற்காலியைப் பிடித்துவிட்டார்கள். அவர்கள் கவனம் இலங்கைப் பக்கம் திரும்ப எவ்வளவு நாட்களாகும்? திரும்புமா?

வரலாறு திரும்பும்,சக்கரம் சுழலும்,துவக்கப்பட்ட எதற்கும் முடிவு உண்டு என்ற நம்பிக்கையில் மட்டும் நம்பிக்கைக்கொண்டு நெஞ்சில் பாரத்தோடு...

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...