Tuesday, January 15, 2008

யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்.

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

தூங்க மறுக்கும் குழந்தைமீது
தாயின் பாடல்
மிக மெல்லியதாக படர்கிறது.

நள்ளிரவு அதிர
கூவுகிற
வெளுறிய கொண்டையுடைய
சேவலின்
தொண்டைக்குழியில்
எறிகனைபோய்
சிக்கிக்கொள்கிறது.

தறிக்கப்பட்ட
பனைமரங்களில் வழியும்
சொற்களை
சூன்யப்பிரதேசத்தில்
திரியும்
குட்டையடைந்த நாய்
முகர்ந்து பார்க்கிறது.

குழந்தைகள்
தூக்கி எறியப்பட்ட
நாட்டிலிருந்து
சூரியன் விலகுகிறது.

திசைகளை விழுங்கும்
இராணுவ
தொலைத்தொடர்பு கோபுரத்தில்
திடுக்கிட்டு எழும்பும்
குழந்தையின்
அதிர்வு நிரம்பிய பாடல்
பதிவாகிக்கொண்டிருந்தது.

அதில் குரல் பிடுங்கி
எறியப்பட
பேசும் பறவையின்
வேகமும் சிறகுகளும்
காயப்பட வீழ்கிறது.

இடைவெளிகளில் மிதக்கும்
நாற்காலிகளில்
இருள் வந்து குந்தியிருக்கிறது.

கருவாடுகளை குத்தி குருதி
உறிஞ்ச முனையும்
நுளம்புகளை
பூனைகள் பிடித்து சாப்பிடுகின்றன.

தலைகளை பிடுங்கி
எறிகிற
அதிவேகத்தோடு
மக்களின் குடிமனைகளிற்குளிருந்து
எறிகனைகள்
எழும்பி பறக்கின்றன.

முழு யுத்தத்திற்கான
பிரகடனமாக
குட்டையடைந்த நாய்
பெரியதாய் ஊழையிடுகிறது.

வீட்டு வாசலில்
வந்து நின்ற போர்
கதவை சத்தமாக தட்டுகிறது.

குழந்தை ஒலி அடங்கி அழுகிறது.
----------------------------------------------------------------------------------
16.01.2008 இன்று இரவு ஏழு மணியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திறிகும் இடையில் இருந்த-வெற்று வார்த்தையில் அடைக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை ஒருதலைப்பட்டசமாக முறித்துக்கொள்கிறது. தமிழ்மக்கள்மீது பாரிய போர் ஒன்றை இலங்கை அரசு பிரகடனத்துடன் திணிக்கத்தொடங்குகிறது. இந்தப்போரினால் தமிழர்களுடன். அப்பாவி முஸ்லீம்மக்கள்,அப்பாவிசிங்களமக்கள் கூட பாதிக்கப்படப்போகிறார்கள். பங்கரவாதத்திற்கு எதிரானது என்ற போர்வையில் இந்தப்போரை மேற்குலகம் ஆதரிக்கிறது என்றே கருதுகிறோம்.
தீபச்செல்வன்.

Tuesday, January 8, 2008

காந்தீபன் கவிதைகள்

எழுதியவர்___________________________
--------------------------காந்தீபன்
________________________________________

------------------------------------------------------------------



வன்னி மண் -------------ஒளிப்டம்:நிலவன்

வந்தோரை வாழவைக்கும் வன்னி வளநாடு
வஞ்சகத்தை வெம்பகையை வேரறுத்த நாடு
சூழ்ச்சிகளும் கொடுமைகளும் சூழ்ந்திருகக்க
வீழ்ச்சிகளை கண்டிருராத வீரமிக்க நாடு.

செந்தமிழும் முத்தமிழும் தேசம் பரவிட
சங்கத்தமிழ் கவிபாடும் நாடு
வீரத்தமிழனின் வீரம் வெளிப்பட்டு
வீரம் விளையாடும் தாயக நாடு.

மருதமும் முல்லையும் நெடிய நெய்தலும்
மானத்தை உயிராய் மதித்திடும் மனமும்
தமிழனின் இருப்பை உலககு காட்டி
தரணியில் அவனை நிமிர்திய மண் இது.

வளமொடு வவுனியா மலர்ந்துள்ள மன்னார்
வசந்தம் வீசி வாழ்த்துகின்ற முல்லையும்
கெடுதல் இல்லாத கிளிநொச்சி மண்ணும்
வன்னி என்பதில் பெருமிதம் கொள்ளும்.

வயலோடு வரம்புகளும் கடலோடு படகுகளும்
கயலோடு விளைமீனும் வரால் மீனும்
கரும்போடு கருங்காலி கற்பகத்தருவும்
இரும்பான மனமும் கொண்ட இருதயநாடு.

பாலோடு தேனும் வீரமும் கொடையும்
நாளும் கொழும் நியாயமும் நீதியும்
தாயகம் முழுதும் தீவென அன்றி
தூணென நிமிர்ந்த வன்னி மாநாடு.

எதிரியும் துரோகியும் காதகம் செய்திடும்
படுபாவ குழுவையும் எதிர் நின்று போர்செய்யும்
எந்தவோர் அரசையும் எதிர் கொண்டு
எதிர் கொள்ளும் வீரமிகு மண்இது.

பண்டார வன்னியனின் வீரம் முதல் கண்டு
பிரபாகரனின் வீரம் வரை கொண்டு
தலைவணங்காத்தலைவர்களை தாயகம் காட்டி
தமிழ் மண்ணின் வீரத்தை நிலைநாட்டியது.

வெள்ளையனை எதிர்த்த கடைசி மன்னன்
களையென அவனை அழித்த மன்னன்
பண்டார வன்னியனின் படைநடந்த
பார் போற்றும் வீரத்தின் பிறப்பிடமே.

வெள்ளைக்காரனின் வெடிகுண்டு கண்டும்
வெடவெடத்துப்போகாத வேங்கையின் மண்
பீரங்கி துப்பாக்கி எறிகனை எல்லாம்
வாளொடு வேலினாலட் அடக்கி மண்

காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பையும்
கருணாவின் துரோகச்செயலையும்
களையென பிடுங்கி கடாசி எறிந்து
கம்பீரமாகக் கொண்ட தாயக மண் இது.

வன்னிக்காட்டின் வலுவான வீரத்தை
உறுதி கொண்ட கொள்ளையின் திறனையும்
எpதிரியை அழிக்கும் வலிமையின் போக்கையும்
இந்தியப்படையிடம் இன்றும் கேட்கலாம்.

தலைவயங்காத மதிழனின் தன் மானமும்
தற்துணிவு கொண்டு தாயகம் காக்கும் வீரமும்
பண்பாடும் என்றும் நிலைக்கும்
வன்னியின் பெயரினை சரித்திரம் அழைக்கும்.

கடலிலும் தரையிலும் எதிரியின் குகையிலும்
காவியம் படைக்கும் மாவீர மண்இது.
துணிவுடன் எழுந்து தூணென நிற்கும்
வீரப்புலிகளை பெற்றெடுத்த மண்இது.

தரைப்படை தந்து கடல்படை கண்டு
தப்பாமல் இன்று வான்படை பார்க்கும்
வீரத்தின் விளைவிடமே வெற்றியின் உறைவிடமே
பாரதம் வந்து பணியாத தாயகம்.

தாயகம் காத்த மண்ணினை மீட்க
தற்கொடைப்படையாய் தம்மையே மாற்றும்
கரும்புலி வேங்கை தரணிக்க தந்த
பெரும்புலி சேனையை வளத்திடும் மண் இது.

கந்தகம் சுமந்து காற்றிலே கலந்த
நெஞ்சினில் கயிற்றிலே நஞ்சினை அணிந்த
வஞ்சுரம் படைத்த நேஙஞ்சினை உடைய
வீரத்தை படைத்த வன்னி மண் இது.

வன்னியின் வீரம் வாங்கியவன் அறிவான்
வன்னியின் பெருமை வந்தவன் அறிவான்
வன்னி மண்ணை கண்ணென காணும்
வாழும் மக்களை அணைவரும் அறிவார்.

அன்றும் போல் இன்றும் போல் அதேபோல்
என்றும் வன்னி மண்ணின் வீரத்தின் பெருமை
குன்றென இன்றி மலையென உயர்ந்து
நன்றென பரவி நாநிலம் போற்றும்
----------------------------------------------------------------------------------
காந்தீபன் இந்தக் கவிதைகளை எனக்கு அனுப்பிவைத்தார்। வவுனியாவை சேர்ந்த இவர் இப்படிஎழுதிய தனது கவிதையை தொடங்குகிறார்। கவிதையில் ஆர்வமுடைய இவரை ஊக்கப்படுத்துமுகமாக இந்தக் கவிதையை இங்கு போட்டிருக்கிறேன்। காந்தீபன் கவிதையின் ஆழமான பரப்புகளுக்க சென்று நல்ல கவிதைகளையும் புரிதல்களையும் முன் வைக்க அவரை ஆர்வப்படுத்துகிறேன்। சிலரின் இவ்விதமான தொடக்கங்களை ஆர்வப்படுதம்துவதன் மூலம் பண்பட்ட கவிதைகள் பின்நாளில் பெறப்படுவதுமுண்டு.
தீபச்செல்வன்

Wednesday, January 2, 2008

பயங்கர வாதிகளும் பதுங்குகுழிகளும்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

01
காலாவதியான ஒரு
கொக்கக்கோலாவை சுற்றி
எறும்புகள் சூழ்ந்திருந்தன.

எனது வஸ்திரங்கள் கரைய
அதிகாரத்தின் முன்
நிருவாணமாய் நின்றிருந்தேன்
அது என்னை அடிமையாக்கி
பயங்கரவாதி என அழைத்தது.

புரட்சி ஒன்றின் விளிம்பில்
அடிமை பீடிக்கிறதை
நான் உணர்ந்தேன்
கூச்சலிட்டு சொல்லி உதருகிறேன்.

சனங்கள் நிறைந்த
எனது கிராமத்தின் மேலாக
வேக விமானம் ஒன்றை
உக்கிரேன் விமானி ஓட்டுகிறாள்.

பயங்கரவாதிகளுக்குள்
பதுங்குகுழிகள் பதுங்குகின்றன.

குழந்தைகள்
தாய்மார்கள்
முதியவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்
என ஜநா அறிவித்தது.

நான் பயங்கரவாதி என்பதை
உரத்து சொல்கிறேன்.

என்னை அமெரிக்காவின் நேர்மை
தேடிவருகிறது
ஜநா படைகளும்
அமெரிக்காப் படைகளும்
இந்தியப் படைகளும்
இலங்கைப்படைகளைப்போல
எனது தெருவுக்கு வர
ஆசைப்படுகிறார்கள்.

நான் அப்பிள் பழங்களை
புசிப்பதற்கு ஆசைப்பட்டிருக்கிறேன்.
கிரேப்ஸ் பழங்களை
உற்பத்தி செய்யத்தொடகினேன்.

நான் ஒலிவம் இலைகளை
மறந்திருந்தேன்
பேரீட்சை பழங்களை
உண்ணாதிருந்தேன்
எனது பனம்பழங்களை
இழக்க நேர்ந்தது.

ஒட்டகங்களின் முதுகில்
குவிந்திருந்த பொதிகள்
சிதைந்ததை நான் மறந்தேன்
எனது மாட்டு வண்டிகள்
உடைந்து போயின.

தலைவர்களின் இடைகளில்
எண்ணைக்குடங்கள் நிரம்பியிருந்தன
அவர்களின் கூடைகளில்
எனது பனம்பழங்கள்
நிறைக்கப்பட்டிருந்தன.

கனியின் விதை கரைய
என்மீது கம்பிகள் படர்ந்தன.

02
திருவையாற்றில் குருதி
பெருக்கெடுத்து ஓடுகிறது
பிணங்களை அள்ளிச் செல்கிறது
வெங்காயத்தின் குடில்கள்
கருகிக்கிடந்தன
தோட்டம் சிதறடிக்கப்பட்ட
செய்தியை அமெரிக்கா வாசிக்கிறது.

இரணைமடுவில் பறவைகளின்
குளிர்ந்த சிறகுகள் உதிர்ந்தன
தும்பிகளும் நுளம்புகளும்
எழும்ப அஞ்சின
இரணைமடுக்குளத்தில்
குருதி நிரம்ப பிணங்கள் சேர்ந்தன
நோர்வேயின் படகு மிதக்கிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும்
ஆயுதங்கள் பெருக
எனது ஊரின் நடுவில்
போரிட்டுக்கொண்டிருக்கிறது.

உலைப்பானைகளும்
அடுப்புகளும் சிதைய
எனது மனைவி நசிந்து கிடந்தாள்.

எனது வீதியை ஜப்பான்
சுருட்டி எடுத்தது
அமெரிக்காவும் ஜநாவும்
எனது குழந்தையை
பள்ளியோடு கொன்று விட்டது
பிரித்தானியாவின்
சிறையில் நானிருந்தேன்.

ஒரு மாம்பழத்தை தின்பதற்கு
எல்லோரும் அடிபட்டு
எனது காணியை சிதைத்தார்கள்
கத்திகளை இன்னும்
கூர்மையாக்கி வருகிறார்கள்.

இந்தியாவும் அமெரிக்காவும்
எனது தலையில்
காலுன்ற அடிபடுகிறது
சீனாவும் ரசியாவும்
எனதூர் ஆலயத்தின்
கூரைகளை பிரித்துப்போட்டது.

நான் முதலில் அமெரிக்காவிற்கு
பதில் சொல்ல வேண்டும்

கோதுமைகளுடன்
அமெரிக்காவின் கப்பல்
திருமலைக்கு வருகிறது
அமெரிக்கா எனது படத்தை
குறித்திருந்தது
ஜநா எனது குழந்தையின் படத்தை
குறித்திருந்தது.

எல்லாவற்றக்காகவும்
வலிந்து விழுங்கிய
அதிகாரங்களால்
நான் பயங்கரவாதி எனப்பட்டேன்
ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டத்தில்
நான் தூக்கி எறியப்பட்டேன்.

நமது ஓலங்களிற்குள்
பெருகும் குருதி ஆறுகளிற்குள்
சந்தை பரவி நிகழ்ந்தது.

அமெரிக்கா இரணைமடுவுக்கு
ஆசைப்படுகிறது.
------------------------------------------------------