Friday, October 19, 2007

மழை நாட்களின்

இரவுகளும் தெருக்களும்..

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________


மாடுகள் தெரு மரங்களில்
உறைந்திருக்க மழை பெய்யும்
ஓடைகளை தாண்டி
விடுதி அறைகளில்
கூட்டம் பொங்கும்
சூழலைப்பபற்றியும்
மொழியைப்பற்றியும்
சிந்திக்காதபடி
விடுதி அறைகள் கிறுக்கியிருக்கும்.

குறிப்பாக மழை நாட்கள்
தண்ணீரில் புளுதிகிளப்பி
மின் குமிகள் சிரிக்கும்.

சாளரங்களை திறந்து
ரசிப்பவனும்
குளிர் தாங்காது மூடுபவனும்
மின்கம்பிகளின் அடியில்
இருட்ட உருவங்களுக்கு
அஞ்சுபவனும்
சானரங்களோடு கட்டிபுரளுவான்கள்.

எப்படியும் ஒருவன்
இரவு பற்றி நிதானமாயிருப்பான்
கதவுகளை இறுக்கி
பாதுகாப்பான்
இரவை அமத்தும் அவனை மீறி
கூச்சல் போடும் மீதிப்பேரும்
அடிக்கடி தூரத்தில்
துப்பாக்கிகளை
அண்மித்து வருவார்கள்.

முன்னைய மழை நாட்கள்
இரவுகள் தெருக்கள்
என்று ஒருவன் தொடங்குவான்.

புத்தகங்கள் ஒதுங்கிப்போகும்.

குடைவாங்க நனைந்துபோகும்
மழையாய் எப்போதும்
அவன் நனைந்தபடியிருப்பான்
தெருக்குழாய் நீரில்
முகம் கழுவி
உறங்கும் நிறைவும்
எந்த நேரமும் இயங்கும்
சைக்கிளுமாய்
கடைகளில் திரிவான்.

இரவு, மழை, தெருக்கள்
வேறுபாடின்றி
இணைந்திருக்கம்.

யாரும் துப்பாக்கிகளோடு
தொடர்பில்லாதவர்கள்
புத்தகங்களை விரித்து
கல்லிருக்கையிலிருந்து
மரங்களை எண்ணுபவர்கள்.

ஆனாலும் துப்பாக்கிகள் நீண்டன
கதவுகளை தாண்டி
புத்தகங்களை நோக்கி நீண்டன
மழைநாட்களின் இரவில்
மின் விளக்குகள்
அணைந்தது
மழை இரவு இருளை நிரப்பிக்கிடந்தது.
------------------------------------------

0 கருத்துகள்: