Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 25 ஜூலை, 2014

குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி

பள்ளிக்கூடம் செல்ல
ஓர் தெருவைக் காட்டவில்லை
காவலரணற்ற
ஓர் நகரைக் காட்டவில்லை

துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ
ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை

பூர்வீக நிலத்தையும்
மூதாதையரின் வீட்டையும்
காட்ட முடியவில்லை

சிறு அமைதியையோ
அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை

காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை 

அலைகடலையும்
எழும் சூரியனையும்
காயங்களற்ற ஒரு பொம்மையையும்
கிழியாத பூக்களையும் 
பறவைகள் நிறைந்த வானத்தையும்
காட்ட முடியவில்லை

எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை
சூழ நிறுத்திவிட்டு 
காட்ட முடியாதிருந்தோம் 
ஒளியிருக்கும் திசையை 

ஈற்றில் வழங்கியிருக்கிறோம் 
ஆண்குறிகளை அடையாளம்
காட்டுமொரு காலத்தை. 

0

தீபச்செல்வன்


நன்றி: தீராநதி

சனி, 12 ஜூலை, 2014

காஸா நகர் குழந்தைகள்

குழந்தைகள் அஞ்சிப் 
பதுங்கியிருக்கும் நகரில்
பிறக்கப்போகும் இன்னொரு குழந்தைக்காய்
எப்படிக் காத்திருப்பது?

ஒவ்வொரு இஸ்ரேலியப் படையினனும்
துரத்திக் கொண்டிருக்கிறான் 
ஒரு பாலஸ்தீனக் குழந்தையை

அவர்கள் ஏன் குழந்தைகள்மீது
குண்டுகளை வீசுகிறார்கள்?

தமது துப்பாக்கிகளை 
ஏன் குழந்தைகளுக்கு எதிராய்
திருப்புகிறார்கள்?

ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும் 
ஒரு குழந்தையின் பிணம்

குழந்தைகளற்ற
குழந்தைகள் பதுங்கியிருக்கும் 
ஓர் நகரை
எப்படி அழைப்பது?

ஓர் ஈழக் குழந்தையை 
கருவில் கரைத்துக் கொல்லும்போது
பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை 
குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன

குழந்தைகளைக் கொல்பவர்களின் நோக்கம்
என்னவாய் இருக்கும்?

0


தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்

புதன், 9 ஜூலை, 2014

சிறுமியைத் தேடும் காகம்


ஆழ் கடலிடியில் அமிழ்த்தப்பட்ட
காற்று நிரம்பிய பலூனைப் போலொரு 
இருதயத்தோடிருக்கும் சிறுமி 
தன் குரல்களை தானே நசிக்கிறாள்
 
பறிக்கப்படாத உண்ணிப் பழங்களை
உண்ணும் வண்டுகள் உனைத் தேடுகின்றன
நாவற் தடிகளால் அடித்து
வகுப்பெடுக்கும் செடிகள் வாடிப்போயிருக்கின்றன 
 
குழந்தைகள் காணாமல் போகுமொரு தேசத்தில்
இனி என்னதான் இருக்கும்?
 
எனது  தேசத்தின் குரலாயிருந்த சிறுமியே!
முன்பு குழந்தைகளுக்குச் சவப்பெட்டிகள்
விற்கப்பட்ட நகரில்
இப்போது சிறைச்சாலைகள் திறக்கையில்
எப்படி உனக்கு ரிப்பன்கள் வாங்கித் தருவேன்?
 
அண்ணாவுக்காக அழுதது குற்றமெனவும் 
அவனைத் தேடியது தண்டனைக்குரியதெனவும்
உன்னையும் கடத்துகையில்
நீயும் காணாமல் போகிறாய்
காணாமல் போய்விட்டன பள்ளிக்கூடக் கதிரைகளும்
 
அண்ணாவோடு ஓடிப் பிடித்து விளையாடவும்
அம்மாவின் உணவுகளை தட்டிப் பறித்து உண்ணவும்
வளர்க்கப்பட்ட கனவுகள்
அனுமதிக்கப்படாத தேசத்தில்
உனக்கொரு பந்து கொடுத்திருக்கிறார்கள்
 
சிறைவைக்கப்ப்ட்ட அம்மாவைத் தேடி 
நடு நிசிகளில் எழுந்து குந்திருந்து 
அழுமுன் குரலை திருகிவிட
நள்ளிரவில் திக்கிட்டுக் கத்துகிறது ஊர்க்குருவி
 
உனைச் சுற்றி நிற்கும் படைகள் 
பொம்மைகளே தம்மிடம் இருக்கின்றதெனச் சொல்கையில்
உன்னை எப்படி விடுவிப்பதெனத்  
துடிக்கிறது உன் பொம்மை
 
பனியுறைந்த வயல்களைக் கடந்து
பழங்களை வீழ்த்த வீரமரங்களுக்கு 
தடியெரிந்து செல்லுகையில் 
நீ கதை பேசிய காகமொன்று 
தனியே கரைந்து இந்த நகரத்தை அதிரச்செய்கிறது.

தீபச்செல்வன்

நன்றி: ஜீவநதி ஏழாவது ஆண்டு மலர்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...