Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 7 மார்ச், 2011

போரின் குழந்தைகள்




தீபச்செல்வன்
 
ஒரு தடியையோ சில கட்டைத் துண்டுகளையோ இந்தக் குழந்தைகள்
எடுத்துச் செல்கின்றனர்
சிறிய குழிகளையோ சிறிய பற்றைகளையோ
அவர்கள் தேடிச்செல்கிறார்கள்
மிக நீளமான தூரத்திற்கு
அவர்கள் எறியும் கற்கள் சென்று விழுகின்றன
இரத்தம் வடிந்து கொண்டிருப்பதற்கு குங்குமத்தை அல்லது
கடதாசிப் பூக்களை கரைத்து அப்பிக் கொண்டு
பழைய சீலைத்துணிகளை கட்டிக் கிடக்கிறார்கள்.

வயற்கரை தென்னைமரங்களில்
மீண்டும் இளநீர்கள் காய்த்திருக்கின்றன
பெயர்த்து துரத்தப்பட்ட சனங்கள் குடியிருந்த
தொகுதிக்கு யாரும் திரும்பவில்லை.
லூர்த்தம்மாவும் அபிராஜிம்
சைக்கிளை எடுத்துக் கொண்டு எல்லாத் தெருக்களுக்கும் செல்கின்றனர்
கோணாவில் குளத்தில் தாமரைகள் பூத்திருக்கின்றன.

லூர்த்தம்மாவின் கண்கள் சிவக்கின்றன
அபிராஜின் கைகள் காய்த்துப் போயிருக்கின்றன.

ஒளிந்து விளையாட அவர்கள் நினைக்கும்பொழுது
பதுங்குகுழிகள் மிக அருகில் இருக்கின்றன
கூடாரங்களோ குழந்தைகளின் வார்த்தைகளை
தாங்கமுடியாதசைகின்றன
கூடாரங்களை சிலவேளை குழந்தைகள் கழற்றி விடுகின்றனர்.

மீண்டும் வயல்களுக்குள் இறங்குபவர்களையும்
லூர்த்தம்மா பார்த்துச் செல்கிறாள்.
சின்னக்கோயிலில் தீபம் வைக்கும் அபிராஜின்
கண்களில் பனித்த இரவுகளின்
சித்திரவதைகள் எரிந்து கொண்டிருந்தன
லூர்த்தமாவின் கைகளில் கொடுக்கப்பட்ட
துப்பாக்கிகளை பறித்து விட்டனர்
அபிராஜிடமிருந்த குண்டுகளை பறித்து விட்டனர்.

தோட்டக்களை எண்ணி கணக்கு பார்க்கவும்
குண்டுகளை அடையாளம் காட்டவும்
வெற்று செல்பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கவும்
மிதிவெடிகளை தூக்கிச்சென்று பின்வளவுகளில் போடவும்
இந்தக் குழந்தைகள் பழகியிருக்கின்றனர்
சிங்களப் பெயர்பலகைகளால் எச்சரித்திருக்கும்
சில வீதிகளுக்கு செல்லாதிருக்கவும்
உயரமான வேலிகளால் மூடப்பட்ட வீடுகளுக்கு தூரமாகச் செல்லவும்
அறிவுருத்தப்பட்டிருக்கின்றனர்
அரிக்கன் லாம்புகளை குழந்தைகள் தூண்டி விட்டு
குப்பி விளக்குகளை கைகளில் தூக்கிச் செல்லுகிறார்கள்.

லூர்த்தம்மா இழுத்துச் செல்லப்பட்ட தெருக்களில் இப்பொழுது
மிதிவெடிகள் பதுங்கியிருக்கின்றன
அபிராஜ் ஒளிந்திருந்த காணிகளுக்குள் பிரவேசிக்க முடியாதபடி
அபாய வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன
லூர்த்தம்மாவையும் அபிராஜியையும்
இழுத்துச் சென்றவர்கள் மீண்டும் தெருக்களில் திரிய
கையசைத்து
வரிசையாய் சென்றவர்களது உடல் நிலம் அழிக்கப்பட்டிருக்கிறது

சனங்களின் குருதியால் சிவந்த நிலத்தில்
குழந்தைகளுக்காக
எஞ்சிய வெடி பொருட்களின் பாகங்களைத் தவிர ஒன்றுமில்லை
எல்லாவற்றின் முன்பாகவும் குழந்தைகள் செல்லுகின்றனர்.
_______________________

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...