Showing posts with label செம்மதி. Show all posts
Showing posts with label செம்மதி. Show all posts

Tuesday, March 25, 2008

செம்மதி கவிதைகள்

எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------

01.உறக்கமில்லா இரவுகளில்

நாங்கள் உறக்கத்தில்
விடியும் பொழுது
எங்கள் உள்ளாடைகளும் அல்லது
உயிர்களும்
சிலவேளை இரண்டுமே
பிரிந்திருக்கலாம்
எப்போதும்
எங்கள் உடம்பில்
ஊலோகத்துண்டின்
ஊடுருவல் நிகழாலாம்
அது எதற்கு நடந்தது என்று
எனக்கே தெரியாது போகும்
நாளை என்பதை
நினைத்துப் பார்ப்பதே
வேண்டாத வேலையாக உள்ளது
எதுவுமே நிச்சயமில்லை
நாளைய விடிவு ஒரு
சுடுகாட்டிலும் இருக்கலாம்
தெருக்களில் நாய்கள் குலைக்கின்றன
நாளை காலை
அவை குலைத்தமைக்கான காரணம்
தெரியவரும்
கொஞ்சம் நில்லுங்கள்
என் வீட்டு வாசலில்
யாரோ நிற்பது போல் உள்ளது
பார்த்துவிட்டு வருகிறேன்...
அது ஒன்றுமில்லை
எங்கள் வீட்டு நாய்தான்
குலைத்துக் களைத்து
வந்து படுத்திருக்கிறது
இப்போதெல்லாம்
எங்கள் நிழலையே
சந்தேகப்படவேண்டியிதாகவே உள்ளது
நாய்கள் சுகந்திரமாகவே
வீதியில் நடமாடுகின்றன
ஆனால் அவற்றுக்குள்ள
சுகந்திரம் எமக்கு இல்லை
இரண்டாம் சாமக் கோழியும்
கூவுகிறது
என் குழந்தைகள்
அரைவயிறு உண்டுவிட்டு
ஆழ்ந்த நித்திரையில்
என் மனைவி
இப்போதுதான்
அயர்ந்து தூங்குகிறாள்
அவளுக்கு இங்கு
வாழப்பிடிக்கவில்லை
எங்காவது போவோம் என்கிறாள்
எங்குதான் இப்போது
வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு
பக்கத்து அறையில்தான்
என் தங்கை உறங்குகிறாள்
அவளின் கணவரை காணவில்லை
எனது வயல் நிலங்கள் மட்டுமா
எம் தங்கைகளின் வாழ்வும்தான்
தரிசாகிப்போகிறது
இதோ விடிந்து விட்டது
இன்று விடிந்து விட்டது
நாளை???......................

02.நளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..


நான்கு வேலிகளுக்குள்
சிறைப்பிடிக்கப்பட்டது
எமது வாழ்வு
மிருகக் காட்சிச்சாலையில்
அடைக்கப்பட்ட
குரங்குகளைப்போல
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க
நாம் காட்சிப்பொருள்
எங்களை வைத்தே
பல வித்தைகள் காட்டி
பணம் தேடுகிறார்கள்
பல சிம்மாசனம்
எம்மீதே போடப்பட்டுள்ளன
எமது அசைவுகள்
அவற்றை சாய்க்கா விட்டாலும்
ஆட்டம் காண வைக்கக்கூடியவை
நாம் காட்டு மூங்கில்கள் ஆனோம்
யுத்தம் எம்மீது பல
துளைகளை இட்டுள்ளது
வீசுகின்ற காற்றக்கள்
துளைகள் ஊடே சென்ற
பல நாதங்களை எழுப்புகின்றன
மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி
தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன
காலம் எமக்க
கடிவாளம் இட்டுள்ளது
எமது சிந்தனைகள்
திசை திருப்பப்படுகின்றன
கடிவாளத்தின் கயிறுகள்
இரண்டும் ஒருவன் கையில் இல்லை
இரண்டு கயிறுகளும் மாறிமாறி
இழுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
நாம் பயணிக்கவேண்டி பாதை
எமக்கு தெரிகின்றது
ஆனால் பாதங்கள்
பாதை மாற்றப்படுகின்றன
எவ்வாறு இருப்பினும்
நாளைய நம்பிக்கைகளுடன்
இன்றைய நமது
பொழுதுகள் களிக்கின்றன....
---------------------------------------------------------------------