Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 17 மார்ச், 2017

பூமி


கேட்டினால் மேவிப் பெருகிய பாலியாற்றைப்போல
பேராராய்ப் பெருக்கெடுத்த நம் குருதி
உதுமானியப் பேரரசின் சிறைகளுக்குள்
சிந்தப்பட்ட ஆர்மீனியரின் குருதி

வற்றி வறண்ட நெடிய சமுத்திரம்போல்
புழுதியாய் கிளம்பி நமக்கெடுத்த தாகம்
பாலைவனங்களில் கருகிய
தார்பூரரின் தாகம்

தணல் மூண்ட பெருங்காடுபோல்
தீயாய் நாம்மை துவட்டிய பசி
பட்டினியோடு மூச்சடங்கிய
கம்போடிய வியட்நாயிமரின் பசி

தலை அறுக்கப்பட்ட பறவைபோல்
அனல் படரத் துடித்த நம் வயிறு
பசியால் மடிந்த
உக்கிரேனியரின் ஒட்டிச்சுருங்கிய வயிறு

விசமேற்றி இறந்த மீன்களின் மூடா விழிகள்போல்
நஞ்சுறைந்து வாடிய நம் இருதயம்
நாஸிகளின் விஷ வாயுவால் முட்டி வெடித்த
யூதர்களின் இருதயம்

கிழிந்த செவ்வரத்தம் பூக்கள்போல்
விந்துக்கரை படிய குதறி வன்புணரப்பட்ட நம் யோனிகள்
உகூட்டு ஆண்குறிகள் பிய்த்தெறிந்து
குருதி உறிஞ்சிய
ருவாண்டா துட்சிகளின் யோனிகள்

எனதன்பு மகளே!
எல்லா வழிகளாலும் அழிக்கப்பட்டவர்களின்
இப் பூமியில்தான்
உன்னைப் போலவே
மீண்டெழுந்தவர்களும் உண்டு.
¤

தீபச்செல்வன்

நன்றி குங்குமம் 17.03.2017

ஞாயிறு, 12 மார்ச், 2017

வர்ணப் பட்டதாரி



சிலந்திகள் கூடு கட்டி
கரப்பொத்தான்கள் குடியிருக்கின்றன
பட்டத் தொப்பியில்

தூசி பிடித்துக் கிடக்கிறது
பட்டச்சான்றிதழ்

பிரதியெடுத்து
களைத்துப்போய்க்கிடக்கிறது
பெறுபேற்றுப் பத்திரங்கள்

வாசிக்கப்படாதிருக்கும்
சுயவிபரத்துடன்
இனி சேர்த்துக்கொள்ளலாம்
சுவருக்கு வர்ணம் பூசும்
அனுபவத்தையும்

நாட்கூலி செய்து
பல்கலைக்கழகம் அனுப்பிய பிள்ளை
நாட்கூலியுடன்
வீடு திரும்புவதை
பார்திருக்கும் வயதான தந்தைக்கு
அதிகரித்தது நெஞ்சுவலி

தோய்த்து அயன் செய்து
மடிப்புக்குலையாமலிருக்கும் மேற்சட்டையை
பார்த்தடியிருக்கும் தாய்
சீமெந்துத் தூள்களுடன்
சோற்றைக் குழைத்து உண்ணும் பிள்ளையை
நினைத்துப் பசிகிடந்தாள்

சுவருக்கு வர்ணம் பூசும்
ஒரு பட்டதாரியின்
உடலில் சிந்திய வர்ணங்கள் 
வரைந்தது வேலையற்ற வாழ்வை

-தீபச்செல்வன்

புதன், 8 மார்ச், 2017

வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை



01
வண்டில் பூட்டி வந்து
வயல் வெளியிலிருந்து
கோவில் முற்றத்தில் பானை வைத்து
பாற்பொங்கலிட்டு
விடியும் பொழுதுவரை
கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில்
முகம் பரப்பியிருக்க
ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி 
இம்முறையும் திரும்பவில்லை

குருதியூறி ஓலங்களால் நிரம்பிய 
இதேபோலொரு வைகாசியில் 
அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான்

சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க
இருண்ட தாழைமரங்களுக்குள் 
கேட்கும் ஒற்றைக்குரல்கள்
அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை

உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய
தனித்தலைபவனின் காலடிகளைத்
தொடரும் நாரைகளும் 
மௌனம் கலைத்தேதும் பேசவில்லை

02
அன்று உன் முன்னே  
குழந்தைகளை துரத்திச் சுட்டழித்த
ஹெலிகெப்டர்கள் இன்றுன்மீது 
குருதி மொச்சையடிக்கும் பூக்களை 
வீசக் கண்டு சிவக்கின்றனவுன் கருங்கண்கள் 

பண்டார வன்னியன் படைவெல்கையில்
கண்களால் நகைத்த வன்னித் தாய்
ஓயாத அலைகளில் குதூகலித்தாளெனப் பாடிய 
இடைச்சிறுவன் தொலைந்ததும் இக்கடலில்தான்

நீதிக்காய் மதுரையை எரித்து
கோபத்தை தணிக்க நீ வந்துறைந்த
வற்றாக் கடலில் 
நம் பிணங்கள் மிதக்கையில்
எப்போதும் நகைக்கும் உன் தாமரை கண்கள் 
வெகுண்டு துடித்தனவாம்

உன் முன் எதிரி எமை கொன்று வீசுகையில்
புன்னிச்சை காய்களால் 
பறங்கித்துரையை துரத்தியபோல்
பகைவரைத் துரத்தியிருந்தாலென்ன?
உன் முன் எமைநோக்கி எதிரிகள் குண்டெறிந்தபோது
கள்வரின் கண்களை மறைத்ததுபோல்
பகைவர் கண்களைக் குருடாக்கியிருந்தாலென்ன? 

நீ மட்டுமே பார்த்திருந்தாய்
அடிமையை எதிர்த்தவெம் முதுகுகளை கூனச் செய்தனர்
எம் வானத்துச் சூரியனை வீழ்ந்துருகச் செய்தனர்
எம் நட்சத்திரங்களைக் கருக்கினர்
உன் பூர்வீக ஜனங்களை நாடற்றவர்களாக்கினர்

நீ மட்டுமே பார்த்திருந்தாய்
கைப்பற்றிய என் குழந்தைகளை
யுத்த வெற்றிப் பொருட்களாய் காட்சியப்படுத்தியதை
சரணடைந்த என் சனங்களை
இன்னொரு தேச அடிமைகளாய் துன்புறுருத்தியதை
வெள்ளைக் கொடி ஏந்திய என் போராளிகளின் மார்பில்
துப்பாக்கிகளால் துளையிட்டதை 

மாபெரும் தாகம் நிரம்பிய நம் குரல் 
உன் முன்பேதான் கரைக்கப்பட்டது
மாபெரும் தகிப்போடிருந்த நம் கனவு 
உன் முன்பேதான் புதைக்கப்பட்டது. 

உன் தலைவன் கோவலனை கொலை செய்கையில் 
நீயடைந்த ஆற்றாத் துயரம்போல்
பாண்டிய மன்னனை தேடிச்செல்கையில் 
நீயடைந்த வெஞ்சினம்போல்
உன் கணவன் குற்றமற்றவன் என வெகுண்டழுந்து
நீ உடைத்தெறிந்த பொற்ச் சிலம்புபோல்
நீதிக்காய் ஆவேசத்துடன் 
கொதித்துச் சிதறிய மாணிக்கப் பரல்கள்போல்
புன்னகை கழன்று கண்ணீர் பிரவாகித்து 
பெருங்கடலானவுன் கண்களைப் போல்
பொங்கி வழியுமொரு
வைகாசி விசாகப் பொங்கல் போல்
ஊதி வெடிக்கின்றன நம் இருதயங்கள்

03
முள்ளிவாய்க்காலெதிரே
நந்திக்கடலோரமிருந்து 
ஆயிரங்கண்களால் 
யவாற்றையும் பார்த்திருந்த சாட்சியே
நீ கண்டிருப்பாய்
என் காதலி என்ன ஆனாளென?

ஆடுகளுமற்று 
பாற்புக்கை காய்ச்சி
உன் தலையில் பேனெடுக்கும் 
இடைச் சிறுவர்களுமற்றிருக்கும் நந்திவெளியில் 
நூற்றாண்டுகளாய்த் தனிமையிருக்குமுன் போல்
திரும்பி வராத தோழிக்காய் உழல்கிறேன்

நீதிக்காய் வழக்குரைத்து
நெடுஞ்செழியனை நடுங்கச்செய்து
அநீதியை சாம்பாலாக்கிய நந்திக்கடலரசியே
காணமற்போன என் காதல்  தோழியை மீட்க
முல்லைக் கடல் பட்டின
அநீதிச் சபைக்கு வந்தொரு வழக்குரைப்பாயா? 
¤

தீபச்செல்வன்

பண்டார வன்னியன்:  வெள்ளையருக்கு எதிராக போரிட்ட வன்னி அரசன். ஓயாத அலைகள்: இலங்கை இராணுவத்தை தோற்கடித்து முல்லைத்தீவை கைபற்றிய விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை. வற்றாப்பளை: மதுரையை எரித்த பின்னர் கண்ணகி ஈழத்தில் வன்னியில் வந்து இறுதியாக தங்கிய ஊராக நம்பப்படுகிறது. இது ஈழ இறுதி யுத்தம் நடந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்கால் அருகிலும் நந்திக்கடல் வெளியிலும் உள்ளது. 

நன்றி: குமுதம் 'தீராநதி' பங்குனி 2017

வெள்ளி, 3 மார்ச், 2017

பேனா நண்பன்





கடல் அலை நுரைகளில் திரளும் நினைவுகளை
கொத்தி செல்கின்றன
சிறகடித்தெழும் கடற்பறவைகள்

இப்படி ஒரு கடற்ரைக்காக
ஒரு கிண்ணம் மதுவுக்காக
ஒரு உரையடாலுக்காக
ஒரு வயிறு குலுங்கும் பகிடிக்காக
நீ திரும்பியிருக்கும் ஒரு பொழுதுக்காக
ஒரு பேனாவைத் திருடிக்கொள்ளலாம்

மீண்டுமொரு நாள்
பாதியுடைந்த பள்ளிக்கூட வகுப்பறையில்
படிக்க முடியுமெனில்
ஒரு மேசையில்
புத்தகங்களை பரப்பி வைக்க முடியுமெனில்
கதிரையின் பின் பக்கமாக
புத்தகப் பையை கொளுவி வைக்கலாமெனில்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகேயிருந்த
உன் வீட்டுக்கு கையசைத்துச் செல்லலாமெனில்
ஒரு பேனாவைத் திருடிக்கொள்ளலாம்

அன்று நான் உனது பேனாவைத் திருடவில்லை

யாரோ திருடினர்
நமது பால்யத்தை
நமது வகுப்பறையை
நமது நகரத்தை

எந்தப் பேனாவாலும்
எழுதி முடிக்கவியலாத
பிரிவுகளால் சிதறுண்டோம்

பாடக்குறிப்புப் புத்தகங்களில் அலையும்
பால்யத்தின் பாடல்களை
யாரோ சில சிறுவர்கள் இசைக்கின்றனர்
காயப்பட்ட வகுப்பறையில்

அன்று நான் திருடியதாக
நீ பறித்துக்கொண்டது எனது பேனா
அப்படியெனில்
உனது பேனாவை திருடியவன் யார்?

மறுபடியும் ஒரு இலையுதிர்காலத்தில்
தாய்மண்ணுக்கு வருகையில்
உன்னை என் நண்பனாக்கிய
அந்த நண்பனைத் தேடுவோம்!

தீரா மையோடிருக்கும் அந்தப் பேனா
யாரிடமுள்ளது?

அன்றைய பேனாச் சண்டையில்
கிழிந்துபோன பள்ளிச் சட்டையில்
காணாமல் போன உனது போனா
எழுதிவிட்டது ஒரு கனவுக்காலத்தை

தீபச்செல்வன்
2013

பள்ளித் தோழன் சுமனுக்கு
நன்றி - கரை எழில் 2014

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...