Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 22 டிசம்பர், 2015

மழை இரவுகள்


பட்டியற்ற மாடுகள் தெரு மரங்களில்
உறைந்திருக்க பெருமழை பெய்தது
புளுதியடங்க மின் குமிழ்கள் சிரித்தன
விடுதியில் தொடங்கிற்று மழை உரையாடல்

சாளரங்களை திறந்து ரசிப்பவனும்
குளிர் தாங்காது மூடுபவனும்
மின்கம்பிகளின் அடியில்
இருட்ட உருவங்களுக்கு அஞ்சுபவனுமாய்
சாளரங்கள் திறந்து மூடும் 

எப்படியும் ஒருவன்
துப்பாக்கிகள் அலையும் இரவு பற்றி நிதானமாயிருப்பான்
கதவுகளை இறுக்கி பாதுகாப்பான்
இரவை அமத்தும் அவனை மீறி
கூச்சல் போடும் மீதிப்பேரும்
அடிக்கடி தூரத்தில் தெரியும் துப்பாக்கிகளை
அண்மித்து வருவார்கள்.

மழை நாட்கள்
மழை இரவுகள் 
மழைத் தெருக்கள்
குறித்து ஒருவன் பேசத் தொடங்க
புத்தகங்கள் ஒதுங்கின

எப்போதும் மழையில் நனையவும் 
நனைந்தபடி சைக்கிளில் திரியவும் 
ஆசையோடிருக்கிறோம் மூடுண்ட நகரில் 

இரவு, மழை, தெருக்கள்
வேறுபாடின்றி இணைந்து கிடக்கும் நாளொன்றில் 
ஒரே ஒருமுறை நகரை சுற்றி வருதலை நினைக்க
மனதில் விழுந்தது ஒரு மழைத்துளி 

மழைப் பின்னிரவில் நீண்டது
கதவுகளை தாண்டி
புத்தகங்களை நோக்கி 
மழைநாட்களின் இரவுகளையும் 
தின்னுதொரு துப்பாக்கி 
0

2007

வெள்ளி, 27 நவம்பர், 2015

ஈமத்தாழி


மஞ்சளும் சிவப்புமான 
ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக 
துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான்
யாரோ ஒரு சிறுவன்
 
அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக
விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் 
தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை
மற்றும் இறுதிக் கையசைப்பு
 
துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள்
கல்லறைகளின் மேல் காவலரண்கள்
சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள்
 
மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் 
மயானங்களைகளிலும் துப்பாக்கிகள்
புதையுண்ட சிதைகளோடான யுத்தம்
இன்னும் முடியவில்லை 
 
வாழ்தலும் இல்லை
நினைவுகூர்தலும் இல்லை
கண்ணாடிகளெங்கும் தெறிக்கின்றன 
தடைசெய்யப்பட்ட முகங்கள்
 
சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்றித் திரியும் 
தாயொருத்தி சிந்தும் ஒரு துளி கண்ணீர் 
இரண்டாய் பிரித்துவிடுமா இத் தீவை?
 
வெறித்துப்போயிருக்கும் தெருவில் 
வீரர்களின் நினைவுப்படங்களிருப்பதாய்
பூக்களை வைத்துச் செல்லுமொரு தாயின் 
ஈமத்தாழிபோல் கனத்திருக்கும் நெஞ்சில் 
கோடிச் சுடர்களின் அனல்
0

நன்றி- குளோபல் தமிழ் 

வெள்ளி, 30 அக்டோபர், 2015

நாடற்றவர்கள்மீது சரிந்த மலை


ஒளித்து விளையாடும் அம்மாவும்
தெருவும் தேயிலை மலையும் 
மீண்டும் வருமெனக் காத்திருக்கும் 
குழந்தையின் முன்னால் 
குருதியை உறிஞ்சும் அட்டைகளும்
வெறும் கூடைகளும்
துளிர்த்திருக்கும் கொழுந்துகளும்
அடர்ந்த செடிகளுமாயிருக்கும் தேயிலைத் தோட்டங்களும்

உழைத்துழைத்துக் கூனிய முதுகளுடன்
கொழுந்துப் பைகள் கொழுவிய தலைகளுடன்
மலைக்கு வந்த நலிவுண்ட பரம்பரையின் 
புகைப்படங்களுடன் எல்லாவற்றையும் மூடியது மண்

ஒவ்வொருவராய் தேயிலைச் செடிகளுக்குள் 
புதைக்கப்பட அதன்மீதேறி 
கொழுந்தெடுத்த சந்ததியை ஊரோடு மலை விழுங்கிற்று

எவ்வளவெனிலும் சம்பளம் 
எத்தகைய குடிசைகளெனிலும் வாழ்வு
மயானங்களுமற்றவர்களின்மீது சரிந்தது பெருமலை

ஒடுங்கியிருக்கும் லயன்களிலிற்குள்
வெளியில் வர முடியாதிருந்தவர்கள் 
ஒரு நாள் மலைகள் தம்மீது சரியுமென நினைத்திருக்கவுமில்லை

வாக்குரிமையோடு நாடற்றிருப்பவர்களின் 
கண்ணீரின்மீதும் சிதையின்மீதும்
மீண்டும் மீண்டும் தேயிலைச்செடிகளை நாடும்
மலைத் தேசத்தில் சரிந்த மண்ணில்
புதையுண்ட குழந்தையைத் தேடிப் பிதற்றும் தாயொருத்தியின்
சாபத்தை கேட்டு பதிலற்றுக் கிடக்கிறது
ஊரை விழுங்கிய மலை.

அம்மதான் ஒழித்து விளையாடுகிறாள் எனில்
வீடும் ஊரும் தெருவும் தேயிலை மலையும் 
ஒளித்து விளையாடுமா?
மாபெரும் கேள்வியோடிருக்கும் குழந்தை 
அழத் தொடங்கும்போது
இந்த மலை என்ன பதில் சொல்லும்?

யார் யாரோ மலைகளைத் தின்றனர்
மலைகளோ தம்மை நம்பியிருந்த
சனங்களைத் தின்றன.
0

தீபச்செல்வன்

நவம்பர் 2014

நன்றி - கரை எழில், குளோபல் தமிழ். 

திங்கள், 19 அக்டோபர், 2015

தலைவியை இழந்த வானம்


போருக்குப் புதல்வர்களை தந்த தாயாக வானம் அழுகிறதென
எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி

பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு
கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை
இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு
தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி

வீரக் கதைகளில் சீருடைகளுடன்
இன்னும் உலவும் தலைவியின்
மௌனத்திலும்
இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது
மாபெரும் நெருப்பு

வாதையின் பிணியே சூழ்ச்சியாய்
தன் புதல்வியை தின்றதென
புலம்புகிறாள் தாயொருத்தி
நெஞ்சில் மூண்ட காலத் தீயே
தன் தலைவியை உருக்கியதென
துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி

மௌனமாகவும்
சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த
தலைவியையும் இழந்தோம்

பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை
தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம்
ஊழித் தாண்டவத்தில் அழித்தனர் லட்சம்பேரை
எஞ்சியோரை மாண்டுபோகும்படி செய்தனர்

இனி?

ஊழியின் ஈற்றில் சரணடையும் தன் சேனைக்கு
தலைவி கூறியது இப்படித்தான்
'இத்துடன், எதுவும் முடிந்துவிடவில்லை'

தீபச்செல்வன்

தமிழினி தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் பிரிவுத் தலைவி. 1991இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது 19ஆவது வயதில் இணைந்த அவர் 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் வவுனியா முகாமில் வைத்து கைது செய்யப்பட்டார். நான்கு வருட தடுப்புக் காவலின் பின்னர் 2013இல் புனர்வாழ்வு வழங்கப்பட்டதாக ககுரி விடுவிக்கப்பட்ட தமிழினி 2015 அக்டோபர் 18 புற்றுநோய் காரணமாக காலமானார். 

சனி, 3 அக்டோபர், 2015

துடைக்க முடியாத குருதி


மிக மிக எளிதாக சிந்தவைக்
கப்பட்டதுபோல
மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி

யாரும் அறிந்திரா விதமாய் உறிஞ்சினர்
வாழ்பவர்களின் குருதியையும்

மாபெரும் சவக்கிடங்கைமூடும்
மாபெரும் இரத்தப் பெருவெளியை துடைக்கும்
உதவிக்கு
மாபெரும் சனங்களை வீழ்த்திய அதே கரங்கள்

வெடிலடிக்கும் கொடிகளோடு
எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஐ.நாவில்
பேரம் பேசும் கொலையாளிகள்
இடைவேளையில் அருந்தினர்
ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குருதியை

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்
கொன்று தின்றவனே
தன் வாயினை துடைக்கட்டுமென

பூமியெங்கும்
நீங்க மறுக்கும் குருதிக்கறைகள்

அது அவ்வளவு எளிதல்ல

மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல
மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி

எளிதாக மறைக்கப்பட்ட
ஒன்றரை லட்சம் உடல்களைப்போல
நசிக்கிப் புதைக்க முடியவில்லை
அழிக்கப்பட்டவர்களின் குரல்களை

தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

முளைத்தல்!



தலைகள் கொய்யப்பட்ட பனைகள்
இனித் தளைக்கப்போவதில்லை
ஆனால்
மண்ணில் புதைந்திருந்த விதைகளிலிருந்து
மீண்டும் வடலிகள் முளைக்கும்
0

தீபச்செல்வன்

நன்றி: 'ஞானம்' அய்ப்பசி இதழ்

சனி, 26 செப்டம்பர், 2015

பசி

எரியும் அனலில் 
தேகத்தை உருக்கி
உயிரால் பெருங்கனவை எழுதிய 
ஒரு பறவை
அலைகிறது தீராத் தாகத்தில் 

ஒரு சொட்டு நீரில் உறைந்த 
நிராகரிக்கப்பட்ட ஆகுதி
வேள்வித் தீயென மூழ்கிறது

சுருள மறுத்த குரல்
அலைகளின் நடுவில் உருகிய ஒளி
உறங்கமற்ற விழியில் பெருந்தீ
இறுதிப் புன்னகையில்
உடைந்தது அசோகச் சக்கரம்

எந்தப் பெருமழையாலும்
தணிக்க முடியாத அனலை
இன்னமும் சுமந்து திரிபவனுக்காய்
ஒருநாள்
எழுமொரு நினைவுதூபி 
வந்தமரும் ஒரு பறவை
நிறைந்திருக்கும் பூக்கள் 

தணியும் அவன் பசி. 

தீபச்செல்வன்

25.09.2015

திலீபன், தியாகி, இந்தியா, ஈழம், அகிம்சை. போராட்டம், காந்தி, பாரதம், புலிகள், மாவீரன்

ஞாயிறு, 12 ஜூலை, 2015

நாடற்றவரின் கடல்



தொழவும் தெரியாத  குழந்தை
பலியிடப்பட்டிருக்கிறது புத்தருக்காய்

இன்னும் ஒரு வார்த்தையேனும் பேசியிராத குழந்தை
கொல்லப்பட்டிருக்கிறது அல்லாவை பழி தீர்க்க

நடுக்கடலில் மிதக்கின்றன
குட்டிப் பர்தாக்களும் தொப்பிகளும்

வாளோடும் துப்பாக்கிளோடும்
துரத்த வேண்டாம்
அவர்களாகவே தம்மை அழித்துக்கொண்டனர்
நாடற்றவர்களாக புறப்பட்ட வேளையில்

கரையற்றிருக்கின்றன கண்ணீராலும்
இரத்தத்தாலும் ஆன படகுகள்

கருணைக்காய் தவிக்கும் ஒரு ரோஹிங்ய
குழந்தைக்காய்
வன்முறையாளர்களிடம் அகப்பட்டுப்போன
புத்தரால் என்ன செய்யலும்?

பசியோடு மடியுமொருவரின் மரணத்திற்கும்
மியன்மார் இராணுவத்திற்கும் தொடர்பில்லை எனச் சொல்லுக

கரைகளுக்காய் கையேந்தி கடலில் புதையுண்டவருக்கும்
பவுத்த வெறியர்களுக்கும் தொடர்பில்லை எனச் சொல்லுக

எண்ணைய் படகுகளில் சனங்கள் புறப்பட்டமைக்கும்
மௌனிகளாக இருப்போருக்கும்  தொடர்பில்லை எனச் சொல்லுக

நாடற்றவர்கள் தத்தளிக்கும்  கடலில்
தெய்வமும் இல்லை
அரசும் இல்லை
இராணுவமும் இல்லை
ஐ.நாவும் இல்லை

0

நன்றி: காலச்சுவடு, யூலை 2015

வியாழன், 19 பிப்ரவரி, 2015

கிளிகளற்ற நகரம்


மயானம் ஒன்றைப்போலிருக்கும்
இந்த நகரில்
அன்று தனிமையிருக்கவில்லை

வர்ணமிகு இரவு விளக்குகள் பூட்டப்படவில்லை
வீதி அகலமாக்கப்படவில்லை

எண்ணற்ற விளக்குகள் எரியவிடப்பட்டபோதும்
நகரத்தை முடியிருக்கும்
இந்த கொடு இருள் அன்றிருக்கவில்லை

அந்நிய மொழியில் எழுதுவும் எழுதப்படவில்லை
ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் குடியேறவுமில்லை

மரண வீடு ஒன்றைப்போல
கடாசிப்பூமரங்கள் நாட்டப்பட்டிருக்கவில்லை
எந்த பேயும் உரைநிகழ்த்தவில்லை
கொலையாளிகளின் படங்களெதும் தொங்கவில்லை

இப்படித் தனியே அலையுமொருவனைப்
பார்த்திருக்க முடியாது
எங்கு சென்றனர் என் சனங்கள்?

இப்படித் தனித்திருந்து
ஒரு கவிதையை எழுத நேரிடுமென
நினைத்திருக்கவுமில்லை

ஏதோ இருந்தது
நாமிருக்கவும்
சிரித்திருக்கவும்

அன்று நாமிருந்தோம்
நான் மகிழ்ந்திருந்தேன்
இங்கு உன்னத வீரர்கள் எம்மை சூழ்ந்திருந்தனர்
எங்கள் நகரம் எங்களுக்காயிருந்தது

இன்று, காணவில்லை ஒரு கிளியையும்

2014

தீபச்செல்வன்

நன்றி: ஜீவநதி (ஈழக் கவிதை சிறப்பிதழ்)

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...