Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 6 டிசம்பர், 2011

கொல்ல முடியாத நாட்டில் குழந்தைகள் பிறக்கிறார்கள்


நேற்றும் சில குழந்தைகள் பிறந்தனர்
அவர்கள் அழுகிறார்கள்
அவர்கள் பெரிதாய் சத்தத்தோடு சிரிக்கிறார்கள்
குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள் தங்கள் கண்களால்
இந்த நாட்டைப் பார்க்கிறார்கள்
கைகளை அசைத்து கால்களால்
நடக்கத் தொடங்குகிறார்கள்
லட்சம்பேர் இறந்த பிறகும்
கொல்லப்பட முடியாத நாட்டில்
அங்கங்கள் பறிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்
ஆரோக்கியமாகப் பிறக்கின்றனர்
இந்தக் குழந்தைகள்
இப்பொழுதே பேசத் தொடங்குகிறார்கள்
நான் கேட்காத இன்னும் பல்லாயிரம் கேள்விகளை
அவர்கள் கேட்பார்கள்
நான் காணாத வாழ்வின் பகுதிகளை
அவர்கள் காண்பார்கள்
அவர்கள் சுகந்திரத்தைப் பெறுவார்கள்
ஏனெனில் கொல்லப்பட முடியாத
நாட்டின் செடிகளாக அவர்கள் பிறந்திருக்கிறார்கள்.

தீபச்செல்வன்

நன்றி : கல்கி

வெள்ளி, 2 டிசம்பர், 2011

பெரு வழியும் ஒரு கிண்ணம் தேனீரும்



பெரு வழியில் எத்தனையாயிரம்
மக்கள் நடக்கின்றனர்
யாரிடமும் கிண்ணங்கள் இருக்கவில்லை
துயரங்களை காலம் ஏந்திக் கொண்டிருந்தது
திரும்புவர்களும் பெயர்பவர்களும்
எதைப் பகிர்ந்து கொள்வது?
பல்லாயிரம் மையல்களில்
விரியும் வீதிகள் எப்படி உருவாக்கப்பட்டன?
அழிவின் மீதிகளைத் தவிர
எதுவும் வைக்கப்பட்டிருக்காத ஊரில்
பொறிகள் விதைக்கப்பட்டிருந்தன
அலைச்சலின் இறுதியில்
ஒரு கிண்ணம் தண்ணீருக்கு
சனங்கள் அடகு வைக்கப்பட்டனர்
அம்மா பசியோடு இருந்தாள்
பொதிகள் காய்ந்துபோயிற்று
இளைத்து தன் நிலத்தில் விழுகையில்
ஒரு கிண்ணம் தண்ணீர் கேட்டாள்
முட்கம்பிகளுக்குளிருந்து வெளியில் வர
ஒரு வழியும் கேட்டாள்
நிலத்தை மூடியிருந்த இரவில்
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து
ஒரு கிண்ணம் தேனீரோடு ஓடி வந்தேன்.

தீபச்செல்வன்

நன்றி : கல்கி

செவ்வாய், 22 நவம்பர், 2011

செங்காந்தள் பூக்கள்


நினைவு பூத்திருக்கும் கற்களை
வேர்களுடன் அகழ்ந்து உடைக்கையில்
ஆடியது நம் நிலம்
நிலம் எரிக்கப்பட்டு
கல்லறைகள் உடைக்கப்பட்டன
மறுக்கப்பட்ட இருப்பிற்காய்
போராடி மாண்டவர்களுக்கு
உறங்க இடம் மறுக்கப்பட்டிருக்கிறது
நிலத்தில் பெரும் பூதம்
நுழைந்து வேர்களைத் தின்றும்
கொல்ல முடியாத மரங்கள்
மீண்டும் தழைக்கின்றன
வீடுகளின் மூலைகளிலும்
தெருக்களின் சந்துகளிலும்
நகரங்களுக்கு மேலாயும்
கிராமங்களிலும் ஒளி ஊற்றெடுக்கிறது
வெளிச்சம் அணைக்கப்பட்ட
நிலத்தில் விளக்குகள் எரிகின்றன
உயிர்மரங்கள் தறிக்கப்படுகையில்
துடித்தன தாய்மார்களின் வயிறுகள்
காலம் சூழன்று கொண்டேயிருக்கிறது
அழிக்கப்பட்ட நிலத்தில்
செங்காந்தள் பூக்கள் பூத்திருக்கின்றன.

தீபச்செல்வன்

ஞாயிறு, 20 நவம்பர், 2011

பேய் நகரம் பேய் ஊர்

பேய்கள் நகரையும் ஊரையும் பாழாக்குகின்றன
உடைந்த வீடுகளின் மேலாய்
அமர்ந்திருந்து
சிதைந்த சுவர்களை தின்கின்றன
குண்டுகள் துளைத்த ஓட்டைகளால்
போய் வருகின்றன
சமையல் புகையிழந்த வீட்டில்
பேய் வாசனை மூடுகிறது
கரித்துண்டுகளால்
பேய்கள் எழுதுகிற கதைளால்
அதிர்ந்து கிடக்கிறது எம் நகரும் ஊரும்
குழந்தைகளில்லை
சைக்கிள்களில்லை
மாட்டு வாண்டிகள் இல்லை
யாரும் உள் நுழைய முடியாது பேயாழ்கிறது
பேய் நகர் என்றும் பேய் ஊர் என்றும்
மாற்றிக் கொள்கின்றன
அழிந்த கட்டிடங்களின் மீதேறி
பேய்கள் ஆடும் உக்கிர நடனங்களால்
அதிர்ந்து கிடக்கிறது எம் நிலம்.

தீபச்செல்வன்





நன்றி : தடாகம்

பூச்சி அரித்துண்ணும் நிலம்

வீடுகளை அரித்துண்ட பூச்சிகள்
பச்சை மரங்களுடன்
காய்ந்த தடிகளையும் தின்று முடித்து விட்டன
பெருகிய பூச்சிகளின் மேலால்
நடந்து திரியும் பெரும்பூச்சி
பூவரசுகளை தின்றாடுகிறது
கூர்வாள்களில் குழந்தைகளை தூக்கி எறிந்தாடுகின்றன.

கனவோடு நிலத்தில் புதைந்த
சனங்களை அடர்ந்த இரவுகளில்
தின்று சுவடுகளை தேடித் தேடி அரிகின்றன
பூச்சிகள் உதிர்க்கும் வண்ணங்களினால்
எம் நிலம் நிறம் மாறியிருக்கிறது.

சிதைக்கப்பட்ட கனவினை பெரும் மூட்டையாகி
உருட்டிக் கொண்டு செல்கிறது
எல்லாப் பூச்சிகளுடன் பசியுடன் அலைந்து
நிலத்தின் கிளைகளை அறுக்கின்றன
பெரும் பூச்சியோ
எல்லோரும் பார்த்திருக்க
அகன்ற வாய்களை திறந்து
பூர்வீக நிலத்தை அரித்துண்ணுகிறது.

தீபச்செல்வன்

நன்றி : தடாகம்

ஞாயிறு, 6 நவம்பர், 2011

தலை நிலத்தில் மலைகளை தின்னும் பேய்கள்


மலையும் சரிந்து கிடக்கிறது
நிலமும் சரிந்து கிடக்கிறது
கண் தளைத்த குளத்தில் முகம் கழுவ முடியாது
தாமரைகளில் பேய்கள் கண்மூடியிருக்கின்றன
கண்களற்று அலைந்து பேய்களில் மோதி விழுகிறோம்

கோணமலையில் ஒரு பெரிய பேய் அமர்ந்திருக்கிறது
தலை நிலத்தை நாளும் தின்னும்படி
அரசன் பேய்களுக்கு உத்தரவிட்டிருக்கிறான்
மலைகளை தின்று களிக்கும் பேய்கள்
தலை நகரத்தில் நடனமாடும் காலத்தில்
அகோரம் தாங்க முடியாது வாடுகின்றன முகங்கள்.

முதிய ஊரில் யாருமில்லை
சர்வ அழகான ஊரிலிருந்து துரத்தப்பட்டவர்கள்
அகதி முகாங்களிலிருந்து இன்னும் திரும்பவில்லை
மலைகளின் ஊரில் மலைகளுக்கடியில்
சூழ்ச்சிகளுடன் பேய்கள் உறங்குகின்றன
மலைகளையும் நிலத்தையும்
அரித்து அரசனுக்கு அனுப்புகின்றன.

மலைகளின்மீது கால் வைத்தலையும்
புத்தரின் நிழலில் பௌத்தக் கொடிகள் பறக்கின்றன
சிங்களம் பூசப்படும் தெருக்களில்
ஊர்கள் கொல்லப்பட்டு வேறு ஊர்களாக்கப்படுகின்றன
நமது முகங்கள் கண்களுடன் அழுகிப்போக
கண்தளைத்த குளத்தில் துவக்குகள் நீந்துகின்றன.

பாடற் தலத்தை புத்த சரணங்கள் தின்னத் துடிக்க
துறைமுகத்தில் மலைகளை திருடும் கப்பல்கள்
சுற்றி வளைக்கின்றன
மகாவலி ஆற்றில் பேய்கள் படகுகளில் வந்து குடியேறின
மாவிலாற்றில் எறியப்பட்ட நமதுயிர்கள் கடலினுள் மூழ்கின.

எங்கள் கோட்டையின் கொடியை தின்றுகொண்டிருக்கும்
பேய்களின் கொடி மாநிலத்தோடு தலை நிலத்தையும் மூடியிருக்கிறது
நரகங்களோடு தலைநகரத்தையும் மூடியிருக்கிறது
அடங்காக் கனவு பேய்களின் தீனியாக
ஆதி நிலத்து சனங்களுடன்
கொடியசைந்த மலைகளும் சரிந்தன
மாநிலமும் சரிந்தது.

27.02.2011


தீபச்செல்வன்

அம்ருதா செப்டம்பர் 2011

கொலையுண்ட நிலம்


முழுநிலமும் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர்
கனவின் வேர்கள் அழிப்பதற்காய் தேடப்படுகிறது
ஷெல்கள் துளைத்த சுவர்களிலும்
குண்டுகள் தின்ற வீடுகளிலும்
விமானங்கள் சிதைத்த வெளிகளிலும்
காயங்களிலிருந்து முளைவிடுகிறது கனவு.

ஊனமாக்கப்பட்ட வெறும் நிலத்தில்
உடைத்துக் கொண்டு வரப்பட்ட
புத்தரின் சமாதிக் கற்கள் சுவர்களாகின்றன
பூவரசகள் கொல்லப்பட்டு
அரச மரங்கள் நடப்படுகின்றன
கை நழுவிக் கரைந்து கசிந்து கொண்டிருக்கும் நிலத்தை   
தூங்கும் குழந்தைகள்
கைகளில் நிரப்பி வைத்திருக்கின்றனர்
ஈரமாக்கப்பட்ட நிலம் எப்பொழுது காயும்?

வேலிகளும் சுவர்களும் கூரைகளும்
வேறு விதமாய் வளர்ந்து
நிலத்தை கொல்லுகின்றன
துவக்குகள் நிலம் மேயும் காலத்தில்
நிலத்திற்காய் புதைந்த உயிர்கள்
மீண்டும் முளைக்கப் பார்க்கின்றன.

தீபச்செல்வன்

அம்ருதா செப்டம்பர் 2011

வியாழன், 27 அக்டோபர், 2011

குழந்தைகளைத் தின்னும் பூதங்கள்

அச்சத்தை தவிர எதையும் அறியாத
குழந்தைகள் படிக்கும் கதைகளை கழித்துக்கொண்டு
கொடும் பூதங்கள் வந்து வாழ்வை உலுப்புகின்றன
இரத்தம் குடிக்கும் பூதங்கள்
குழந்தைகளுக்குப் பாலூட்டும் மார்புகளை
அறுத்து விழுங்குகின்றன
பூதங்கள் நிலத்தோடு
குழந்தைகளை தேடி விழுங்குகின்றன.

இருளைக் கண்டஞ்சிய குழந்தைகளின்
கண்களை பிடுங்கிச் செல்ல
இராணுவ உடைகளையும்
சிவப்புத் தோல்பட்டியையும் மறைத்து
குரூர உடைகளை அணிந்து
கூரிய கத்திபொருத்தப்பட்ட நகங்களுடன்
பூதங்கள் நிலத்திற்குள் நுழைந்து மிதந்தன.

பூதங்களை குறித்து குழந்தைகள் அறிந்திருக்காத
செயல்களினால் இன்னுமின்னும் மிரட்டப்படுகின்றனர்
சுவர்கரையோரமாகவும் அதன் பின்பக்கமாகவும்
கதவிற்குப் பின்னாலும் பூதங்கள் மறைந்திருந்து
வீடுகளை தின்பதாய் குழந்தைகள் அஞ்சுகின்றனர்
கிணற்றுள்குள் தங்கி வெறியேறும் பூதங்களால்
பயத்தோடும் பசியோடும்
பொழுதுகளை குழந்தைகள் கழிக்கின்றனர்.

அதிகாரம் கொளுத்து நடனமாடும்
கதிரைகளிலிருந்து கிளம்பும் பூதங்கள்
நாம் பார்த்திருக்க கிளம்பி மறைகின்றன
பேய் ஆள பூதங்கள் அலைகின்றன
ப+தங்கள் ஆள பேய்கள் அலைகின்றன.

பூதங்கள் பெரும்பசியோடு அலையும் தெருவில்
நசிந்து கிடக்கின்றன குரல்வளைகள்
இரத்தத்தோடு வார்த்தைகளையும் தின்னும்
பூதங்கள் மரங்களில் ஏறி ஒளிந்து
நிலத்தோடு எல்லாவற்றையும் உலுப்பியசைக்கின்றன
எந்தத் தாய்மார்களும் குழந்தைகளும்
பார்த்திராததும் கதைகளில் படித்திராததுமான பூதங்களை
இந்தக் குழந்தைகள் எதிர்கொள்ளச் சபிக்கப்பட்டுள்ளனர்.
_____________________
18.08.2011

தீபச்செல்வன்

(நன்றி : தீராநதி அக்டோபர் 2011)

சனி, 15 அக்டோபர், 2011

தீப்பூமி

கொலைகளுக்கு எதிராய்
தீப் பிழம்புகளைத் தின்று
செங்கொடி உயிரில் உக்கிரம் கொண்டாடினாள்
அதிகாரம் மூடியிருந்த பொழுது
எரிக்க முடியாத பூமியில் கலந்து விளைந்த
அதிகாரத்தை எரிக்க தன்னை எரித்தாள்
அன்றும் ஒருத்தி  கொலைக்கெதிராய்
பெரும் நகரத்தோடு எரிந்தாள்
செங்கோல்கள் உயிர்களை
குடிக்கும் பொழுதெல்லாம்
பூமியை காக்க எரித்தாடுகிறாள்
கொலைக்கத்திகள் எல்லோரையும் நோக்கின
உயிர் குடிக்கும் கயிறுகள்
எல்லோரையும் சுற்றின
இனம் திண்ணும்
வாய்கள் பெரும்பசியோடு நீண்டன
அரசர்கள் உயிரைக் கொல்லும் தீர்ப்பெழுதினர்
கருணையை நிராகரித்து
மரணத்தை பிரகடனம் செய்தனர்
கொதித்த நிலத்திற்காய்
செங்கொடி உடல்த் தீமரமாய்
எரிந்து பரவி கிளைகள் உலுப்பினாள்
சலங்கைகள் வெடித்துச் சிதறுண்டன
பறைகள் அதிர முழங்கின
பூமிக்காய் அவள் தீயில் நுழைந்த பொழுது
பூமி தீப்பிடித்தெரிந்தது.
_______________________
செங்கொடிக்கு

தீபச்செல்வன்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

கொலையாளிகள் அறிவித்துள்ள மரணதண்டனை

கழுத்துக்களை தின்பதற்கலையும்
தூக்குக்கயிற்றை எறியும் இயமியை சுமந்துவரும்
எருதுகளின் கால்கள் மிதித்து
நம்மைச் சிதைக்கின்றன
தலைப்பாகை ஒன்றினுள் லட்சம் எலும்புக்கூடுகள்
புதைக்கப்பட்டிருக்க
ஒற்றைச் சமாதியினுள்
ஒரு சனக்கூட்டத்தின் கனவு படைக்கப்பட்டிருக்கிறது
ஒரு கொடும் சிரிப்போடு
கொலையாளிகள் மரணதண்டனையை அறிவித்துள்ளனர்
சிவப்புத் துண்டுகள் தூக்குக்கயிறுகளாய் பின்னுகின்றன
அறிவிக்கப்படாத மரண தண்டனைகளால்
துடித்துக் கிடக்கிற இனத்தின்
கண்களை பிடுங்கி
கொம்பரசி தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறாள்
சிறைகளுக்குள் மூடி வைக்கப்படுகையில்
கம்பிகளை கிழித்து வெளிவரும்
குரல்களை தூக்குக் கயிறுகள் விழுங்குகின்றன
கொன்றடங்காத பசியில் இயமி ஆடுகிறாள்
காலம் குறித்து
கொலையிட்டுண்ணும்
அந்தக் கொலையாளிகளின் தூக்குக் கயிறுகளில்
நாம் தீர்ந்து கொண்டே போகிறோம்!
_____________________
தீபச்செல்வன்

புதன், 5 அக்டோபர், 2011

அமைதியின் நிழல்



மரணம் கொன்டக்கப்படும்
ஆயுதமாகும் பொழுது
யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள்
சனங்கள் அமைதியின் நிழலை
இப்பூமியில்
என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள்
இருள் கவிழந்த பொழுதில்
இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன்
உனது போரைத் துடைத்து
அதிகார நிழலை அடித்து விரட்டுகையில்
இப்பூமியில் வெளிச்சம் படரும்
இரத்தமும் காயமும் இல்லாத
பூக்கள் பூத்துக் கொட்டும்
அமைதியின் நிழலைப்
பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம்
அது எவ்வளவு அழகாயிருக்கும்?
_________________________
தீபச்செல்வன் 

திங்கள், 3 அக்டோபர், 2011

இல்லாத அறை


உயிர்த்தெழாது வாடிய
குருத்தோலையை மட்டும் விட்டுச் செல்கிறேன்
சுவர்களில் பதுங்குமளவுக்கு விழுந்த
குழிகளில் எல்லாம்
என் கனவுகள் நிறைக்கப்பட்டிருக்கின்றன
எப்பொழுதுமில்லாமல்
பல்லிகள் விழுந்து வெருண்டோடுகின்றன
வேண்டுமானால் விட்டுச் செல்கிறேன்
தேனீர் காயாத கோப்பைகளையும்
வாடிய பலகாரத் துண்டுகளையும்
கனவைத் துரத்தும் பயங்கரங்கள்
கொண்டாடிப் பருகுகின்றன என் காயாத குருதியை
கிழிக்கப்பட்ட கவிதைகளை பல்லிகள் சுமக்கின்றன
காயும் சவற்காரக் குறையை
குழாயில் கசியும் நீர்த்துளிகள் ஈரமாக்கின்றன
இல்லாத அறையில்
நான் திரிகிறேன்
நினைவுகள் கழற்றப்பட்ட சுவரில்
பிரியாத பாதிச் சித்திரத்தில்
சாம்பல் கொட்டுகிறது
அச்சுறுத்தல்களால் செய்யப்பட்ட
அறையில் இருந்து
துப்பாக்கிக் குண்டுகளால் செய்யப்பட்ட
கொடும் வெளிக்குச் செல்கிறது உயிர்த்தெழாத பறவை
இரத்தம் சொட்டும் கனவுகளால்
ஈரமாகும் என் முகத்தை துடைக்க யாருமில்லை!
_________________________
30.05.2011

நன்றி : மறுபாதி 

சனி, 24 செப்டம்பர், 2011

பூமிக்கு கொண்டு வரப்பட்ட பூதங்கள்

தீபச்செல்வன்

பூதங்களின் காலடியில் கரையும் வாழ்வில்
நாம் சூரியனை இழந்து
இருள்தேசத்து வாசிகளானோம்
ஒன்றுமில்லாது அழிந்த பொழுதும்
பூதங்கள் விடுவதாயில்லை
கால்களைப் பிடித்து இழுத்து வீழ்த்துகின்றன.

பூதங்கள் நடத்திய போரில்
நாம் தோற்றுப் போயிருந்த பொழுதும்
அவைகளின் பசி அடங்குவதாயில்லை
இரத்தமும் சதைகளும்
பிணங்களாய் நாறி விழைந்த களத்தில்
பூதங்கள் தின்றாடிய பொழுதும்
அவைகளின் பசி தீருவதாயில்லை
எங்களை பலியிட்டுத் தீர்க்க
பூதங்கள் எங்கள் பூமிக்கு கொண்டு வரப்பட்டன

பூதங்களை நீ பார்த்தருக்கிறாயா?
கைகளில் உள்ள கிண்ணங்களில்
குழந்தைகளின் பிடுங்கப்பட்ட கண்களை
நிரப்பித் தின்று கொண்டிருக்கின்றன.

பூதங்கள் கழுத்தில் சிவப்புப் பட்டியையோ
உடலில் இராணுவச் சீருடையையோ அணிந்து கொண்டு
பூத உடைகளைப் போர்த்தியிருக்கின்றன
நாம் குழந்தைகளின் கண்களை
பொத்தியிருந்த பொழுதுகளில்
எங்கள் மார்பை கிழித்து அவை குருதியை உறிஞ்சின.

எலும்புகளில் வடியும் குருதியை
பருகி அழிப்பின் போதையுடன்
அலையும் பூதங்கள்
சாலைகளில் இடித்தழிக்கப்பட்ட கட்டிடங்களில்
தொங்கிக் கொண்டு நிற்கின்றன
நமது தெருக்களில் வண்டிகளில் செல்லுகின்றன
அழிந்த தேசத்திலும்
நாம் வாழ்வை விடுவதாயில்லை என்ற பொழுது
பூதங்கள் எங்களை விடுவதாயில்லை
என்று துரத்திக் கொண்டிருக்கின்றன.

பூதங்கள் கொண்டு வரப்பட்ட எங்கள் பூமியில்
ஏதுவுமில்லை
எல்லாம் உறிஞ்சப்பட்ட வெறும் கூடுகளிருக்கின்றன
குழந்தைகள் இழந்தவைகளைப் பெறும்
காலத்தில் வாழ்வார்களா?
எங்கள் பூமிக்கு சூரியன் எப்பொழுது வரும்?
____________________________
10.09.2011

சனி, 9 ஜூலை, 2011

தமிழ்ச்செல்வியின் யாருமற்ற நிலம்

தீபச்செல்வன்

தமிழ்ச்செல்விக்கு ஒரு கூடாரம் இருக்கிறது
இழந்த வாய்க்கால்களையும் மணல்தரைகளையும்
அவள் திரும்பிப்பார்ப்பதில்லை
தெருக்களில் அழியாத நினைவுகள் வாடியிருப்பதையும்
அவள் பார்ப்பதில்லை
யாரிடமும் கருணையையும்
அரவணைப்பையும் எதிர்பார்ப்பதில்லை
தமிழ்ச்செல்விக்கு முன்பு அம்மா இருந்தார்.

தமிழ்ச்செல்விக்கு ஒரு குடும்பப்பதிவு அட்டை இருக்கிறது
நிவாரணங்களுக்காக அவள் முண்டியடிப்பதில்லை
அவளுக்காக வழங்கப்படும்
அரிசிப் பொதிகளையும் சுமக்க முடிவதில்லை
அவளுக்காக வழங்கப்படும் தறப்பாலையும் தகரங்களையும்
கொண்டுவர முடிவதில்லை
தமிழ்ச்செல்விக்கு முன்பு அப்பா இருந்தார்.

தமிழ்ச்செல்விக்கு முன்பு இரண்டு சகோதரர்கள் இருந்தனர்
இப்பொழுது வீட்டின் பின்பக்கமாவே முற்றித்திலோ
அவள் விளையாட நினைப்பதில்லை
அவள் மண்வீடுகளை கட்டுவதில்லை
கண்கள் மூடித் திறக்கும் பொம்மைகளை விரும்புவதில்லை
தமிழ்ச்செல்வியிடம் முன்பு சில பொம்மைகள் இருந்தன.

தமிழ்ச்செல்விக்கு முன்பு ஒரு கடவுள் இருந்தது
இப்பொழுது அவளிடம் கோயில்களும் இல்லை
செய்வதற்கு எந்தப் பிரார்த்தனைகளும் இல்லை
கடாட்சங்களையும் திருவருள்களையும் அவள் அறிந்ததில்லை
தமிழ்ச்செல்வியிடம் முன்பு அழகான உலகம் இருந்தது
இப்பொழுது அவளிடம் யாருமற்ற நிலம் இருக்கிறது.
__________________________________

நன்றி - கல்கி 


புகைப்படம் : கொக்கிளாய், புளியமுனைக் குழந்தை

செவ்வாய், 21 ஜூன், 2011

நிலமற்ற வாழ்வு

தீபச்செல்வன்

வேருடன் பிடுங்கி எறியப்பட்ட மரத்தின் இலைகள்
உதிர்ந்து நிரம்பிய யாருமற்ற நிலத்தில்
உறைந்த வீழ்ச்சியில்
கனவுகள் நிரம்பிய வாழ்வு உக்கிக் கொண்டிருக்கிறது
பறவைகள் குந்தியிருப்பதற்கு கிளைகளற்று
அழிந்த வானத்தில் அலைந்தபடியிருக்கின்றன
அழிந்த தடிகளான மரங்களில்
குதித்திறங்கும் நிலத்தின் சூரியன் காயத்தோடலைகிறது.

வாழ்வை காற்று இழுத்து தூக்கி வீசிக் கொண்டிருக்கிறது
பசிமுகங்களில் வரையப்பட்ட
அடக்குமுறையின் சித்திரங்களை
குழந்தைகள் நகமற்ற விரல்களால் கீறி வெளிகளை நிரம்புகின்றனர்.

நிலம் அழிந்து கொண்டிருக்கிறது
நிலம் தின்னும் கொடும்பறவைகள்
மகிழ்வோடு நிலப்பறவைகளை வேட்டையாடுகின்றன
சிறகுகள் கருகிய நிலப்பறவைகள் அடையும்
காலம் நிறைந்த வரலாறு மிகுந்த கனவை
பொந்துகளில் சொருகி வைத்திருக்கின்றன.

மழையும் வெயிலும் நிலப்பறவைகளை தின்னும்
காலத்தில் வாழ்வெனப்படுவது
நிலத்திலிருந்து அறுந்து அந்தரத்தில்
கயிற்றில் தொங்கியலையும் பொதியில் அடைக்கப்பட்டிருந்தது
வெறும் நிலத்தில் வேரறுந்த பறவைகள் மேலைய
வீழ்ந்த மரத்தின் சருகாகிய இலைகள் கீழலைகின்றன.

நன்றி - கணையாழி

வியாழன், 28 ஏப்ரல், 2011

சிசுக்கள் வேகும் அடுப்பு


தீபச்செல்வன்

செம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்
அடுப்புக்கள் எரியாத ஊரில்
ஏனைய இரண்டு குழந்தைகளும்
உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்
தலைவன் முட்கம்பிகளால்
கட்டப்பட்டு யுத்தப் பாவத்தை தின்கிறான்
தலைவி துயரம் துடைக்க முடியாத
பசிக் கூடாரத்தை சுமக்கிறாள்
வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்
துவக்குகளும்
இரும்புத் தொப்பிகளும் அவளை புணர்ந்து
பசி தீர்த்த இரவில்
குழந்தைகள் பசியோடு உறங்கினர்
இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று
நெருப்பு தகித்தாறாத
அடுப்பில் புதைத்தாள்
தொப்புள் கொடிகளை அறுத்து
பன்னிக்குடங்களை உடைத்தாள்
இரத்தம் பெருக்கெடுக்க
அவள் இரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்
குழந்தைகள் பசியின்றி உறங்கினர்.
_____________________
நன்றி : ஆனந்தவிகடன்

புதன், 27 ஏப்ரல், 2011

குருதிக்கடல் நிலத்தின் பெருங்காற்று



தீபச்செல்வன்

பெருநிலத்தின் கடலில் கொட்டிய குருதி
உப்பு வயல்களில் தேங்கிக் கிடக்கிறது
வெடிகள் அதிர்ந்து புகை எழும்பி
உயிர் கரைந்த நாட்களில்
வேழினியின் தந்தை
உப்பு வயல்களில் உயிர் கொட்டி விறைந்திருந்தார்
வேழியின் கண்களில் நீங்காதிருக்கின்றன
உப்பு வயல்களில் நகர்ந்த
வியர்வைகளும் குருதிகளும்.

நிலத்திற்காய் கொட்டிய குருதி
காயாமல் பிசுபிசுக்கிறது
வேழியின் கண்களை நிலம் கொள்ளையிடும்
கைகள் குத்துகின்றன
அன்றெமது நிலத்திற்காய்
இதே தெருவில் பற்றைகளினூடே
வெடிகளை சுமந்து சென்றவர்கள் நகரும் பொழுது
குருதி பெருக்கெடுத்துக் கொட்டியது.

இன்றெம் நிலத்தில்
மிகக் கொடும் கைகள் விளைந்திருக்கின்றன
நிலம் அள்ளும் கைகளின் நகங்கள்
உப்பு வயல் கடல் நிலத்தில்
வளர்ந்து கண்களையும் முகத்தையும் குத்துகின்றன.

அன்றெமது கொடி பறந்த தடிகளில்
நிலத்துயரம் பறக்கிறது
வெடி சுமந்து சென்றவரின்
தாங்கியில் வேறுகதைகள் எழுதப்பட்டுள்ளன
உப்பு வயல்களில் முளைத்து
இன்னும் உயிரோ கிடந்து
துடிக்கிற வார்த்தைகள் பிடுங்கப்படுகிறது.

நிலம் அள்ளித் தின்ற கைகள்
எப்பொழுதும் தெருவால் செல்பவர்களை மிரட்டுகின்றன
கனவின் குருதி வயல்களில் உயிர்கள் மணக்கின்றன
உப்பு வயல்களில் மீண்டும் மீண்டும்
முளைக்கின்றன வெடி சுமந்தவர்களின் முகங்கள்.

இந்தக் கடல் நிலம் அடிமையாக்கப்படதை
வேழினி தாங்க முடியாது துடிக்கிறாள்
எப்பொழுதும் காதுகளை நிரப்பியபடியிருக்கும்
குருதிக் கடல் நிலத்தின் பெரும் உப்புக்காற்று
வெடி சுமந்தவர்களின் கதைகளை கூவியபடியிருக்கிறது.
2011
______________________
நன்றி : ஆனந்தவிகடன்

செவ்வாய், 22 மார்ச், 2011

உறங்காத நிலம்


தீபச்செல்வன்

நிலமும் உயிர்களும் உறக்கமற்றலைகிற
காலத்தில்; நீ உறங்காதிருக்கிற இடத்தை நானேறிவேன்
விதைகள் நிறைந்த நிலத்தை
நிலம் தின்னும் பெருங்கால்கள் மிதிக்கின்றன
உன்னைப்போலவே எல்லோரும்
உயிரோடு புதைக்கப்பட்டவர்கள்
அதனால் இந்த நிலம் இடையிடையே துடித்தசைகிறது
இரத்தமும் கண்ணீரும் கனவும் காதலும்
எல்லா இடங்களிலும் கசிகிறது.

நீ உறங்கா நிலத்தில் பேய்கள் பசியோடு அலைகின்றன
நிலத்தை கொள்ளையிட்டு
வண்டிகளில் வெட்டி ஏற்றிக் கொண்டு போகும் இரவில்
நீ என்ன செய்வாய்?
என்னைக் குறித்து நீ வைத்திருக்கும்
வார்த்தைகளை என்ன செய்வாய்?
உன் கூந்தல் முடிகள்
நிலத்தில் கலந்து எப்பொழுதும் பறக்கின்றன.

உன்னை முத்திமிட துடிக்கும் தருணங்களில்
நீயும் நானும் கலந்த நிலத்தை முத்தமிடுகிறேன்
வாழ் நிலத்தின் கீழாய் நீ என்னை தேடி அலைகிறாய்
அங்கு தெருக்கள் இருக்கின்றனவா?
நமது பிரியத்தை பகிரும் வெளிகள் உள்ளனவா?
குருதியில் உறைந்திருக்கிற
நம் பெருங்கனவைப்போல நமது காதலும் உயிரோடிருக்கிறது
நம் காதலைப்போல கனவுக்கும் மரணமில்லை
நான் உன்னை மணல்வெளிகளை கிளறியும்
சிறுகடலில் மூழ்கியும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

தோல்வியின் பின்னரான பிரிவின் தனிமை
என்னைக் கொல்லும் இருளால் நிரம்பிக்கொண்டிருக்கிறது
உன் முத்தங்களில்லாத காலத்தில்
எனது வானம் இருண்டு கிடக்கிறது
உன்னைக் குறித்து
நமது நகரமும் நிலமும் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது
கனவு மக்களின் தாகங்களுடன்
நமது முத்தத்தின் ருசியையும் இந்த நிலமறியும்
உறங்காத நிலம் மீண்டும் முளைப்பேன் என்கிறது
கனவோடு காலத்தோடு பொழுதுகளுடன்
மீண்டும் நீ காதல் நிலத்திலிருந்து முளைப்பாயா?
 ___________________

நன்றி : அம்ருதா

திங்கள், 7 மார்ச், 2011

போரின் குழந்தைகள்




தீபச்செல்வன்
 
ஒரு தடியையோ சில கட்டைத் துண்டுகளையோ இந்தக் குழந்தைகள்
எடுத்துச் செல்கின்றனர்
சிறிய குழிகளையோ சிறிய பற்றைகளையோ
அவர்கள் தேடிச்செல்கிறார்கள்
மிக நீளமான தூரத்திற்கு
அவர்கள் எறியும் கற்கள் சென்று விழுகின்றன
இரத்தம் வடிந்து கொண்டிருப்பதற்கு குங்குமத்தை அல்லது
கடதாசிப் பூக்களை கரைத்து அப்பிக் கொண்டு
பழைய சீலைத்துணிகளை கட்டிக் கிடக்கிறார்கள்.

வயற்கரை தென்னைமரங்களில்
மீண்டும் இளநீர்கள் காய்த்திருக்கின்றன
பெயர்த்து துரத்தப்பட்ட சனங்கள் குடியிருந்த
தொகுதிக்கு யாரும் திரும்பவில்லை.
லூர்த்தம்மாவும் அபிராஜிம்
சைக்கிளை எடுத்துக் கொண்டு எல்லாத் தெருக்களுக்கும் செல்கின்றனர்
கோணாவில் குளத்தில் தாமரைகள் பூத்திருக்கின்றன.

லூர்த்தம்மாவின் கண்கள் சிவக்கின்றன
அபிராஜின் கைகள் காய்த்துப் போயிருக்கின்றன.

ஒளிந்து விளையாட அவர்கள் நினைக்கும்பொழுது
பதுங்குகுழிகள் மிக அருகில் இருக்கின்றன
கூடாரங்களோ குழந்தைகளின் வார்த்தைகளை
தாங்கமுடியாதசைகின்றன
கூடாரங்களை சிலவேளை குழந்தைகள் கழற்றி விடுகின்றனர்.

மீண்டும் வயல்களுக்குள் இறங்குபவர்களையும்
லூர்த்தம்மா பார்த்துச் செல்கிறாள்.
சின்னக்கோயிலில் தீபம் வைக்கும் அபிராஜின்
கண்களில் பனித்த இரவுகளின்
சித்திரவதைகள் எரிந்து கொண்டிருந்தன
லூர்த்தமாவின் கைகளில் கொடுக்கப்பட்ட
துப்பாக்கிகளை பறித்து விட்டனர்
அபிராஜிடமிருந்த குண்டுகளை பறித்து விட்டனர்.

தோட்டக்களை எண்ணி கணக்கு பார்க்கவும்
குண்டுகளை அடையாளம் காட்டவும்
வெற்று செல்பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கவும்
மிதிவெடிகளை தூக்கிச்சென்று பின்வளவுகளில் போடவும்
இந்தக் குழந்தைகள் பழகியிருக்கின்றனர்
சிங்களப் பெயர்பலகைகளால் எச்சரித்திருக்கும்
சில வீதிகளுக்கு செல்லாதிருக்கவும்
உயரமான வேலிகளால் மூடப்பட்ட வீடுகளுக்கு தூரமாகச் செல்லவும்
அறிவுருத்தப்பட்டிருக்கின்றனர்
அரிக்கன் லாம்புகளை குழந்தைகள் தூண்டி விட்டு
குப்பி விளக்குகளை கைகளில் தூக்கிச் செல்லுகிறார்கள்.

லூர்த்தம்மா இழுத்துச் செல்லப்பட்ட தெருக்களில் இப்பொழுது
மிதிவெடிகள் பதுங்கியிருக்கின்றன
அபிராஜ் ஒளிந்திருந்த காணிகளுக்குள் பிரவேசிக்க முடியாதபடி
அபாய வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன
லூர்த்தம்மாவையும் அபிராஜியையும்
இழுத்துச் சென்றவர்கள் மீண்டும் தெருக்களில் திரிய
கையசைத்து
வரிசையாய் சென்றவர்களது உடல் நிலம் அழிக்கப்பட்டிருக்கிறது

சனங்களின் குருதியால் சிவந்த நிலத்தில்
குழந்தைகளுக்காக
எஞ்சிய வெடி பொருட்களின் பாகங்களைத் தவிர ஒன்றுமில்லை
எல்லாவற்றின் முன்பாகவும் குழந்தைகள் செல்லுகின்றனர்.
_______________________

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...