Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

உள் நுழைய அஞ்சும் நகரின் தெருக்கள்


0 தீபச்செல்வன் ----------------------------------------
01.
யாரும் உள் நுழைய அஞ்சும் தெருக்கள்
எங்கள் நகரில் அதிகம் உள்ளன.
பிரமாண்டமான நிகழ்வென்றில்தான்
நகரத்திற்கு செல்லும் அவசியமான தெருவில்
மறித்துக் கட்டப்பட்டிருந்த
இராணுவச் சங்கிலிகள் கழற்றப்பட்டன.

எப்பொழுதோ சனங்கள் வாழ்ந்ததிற்கான அடையாளங்களை
இன்னும் தன்னில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது
நகரின் உட்புறமாய் சிதைவடைந்திருக்கிற தெரு.

இந்தத் தெரு நான் பிறந்த காலம் முதல்
இன்று வரை முடப்பட்டிருந்தது
நான் எனது காலங்களையும் இழந்ததைப்போல
இந்தத் தெருவையும் இழந்திருக்கிறேன்.

தடைபோடப்பட்ட இந்தத் தெருவிலும்
நான் குழந்தைகளை தேடுகிறேன்
குழந்தைகள் வாசித்து பயப்பிடும் கதைகளை எல்லாம்
இந்தத் தெருவின் சுவர்களின் நான் வாசிக்கிறேன்.

இன்னும் மூடப்பட்டிருக்கிற நிலங்களுக்குச் செல்லும்
காலங்களுக்காக உயிரை பிடித்து
வைத்திருக்கும் வயது முதிர்ந்த என் தந்தையின் தாயிற்கு
நான் என்ன சொல்ல.
புற்கள் வளர்ந்து முடிப்போயிருக்கும்
அவரின் கனவு நிரம்பிய
வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் இலட்சியத்தை
நீ எப்படி புரிந்து வைத்திருக்கிறாய்.
ஒரு பைத்தியக்கார கிழவியாய் மரித்துவிட்டுப்போ
என யாரோ சொல்லுவதாய்
அவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்
அவர் அலையத் தொடங்கியது எப்பொழுது?

காயங்களுடன் உள்ள நகரின் உள் பக்கத்தில்
இன்று அனுமதிக்கப்பட்ட தெருவில்
சென்று கொண்டிருக்கிறேன்
வெடியேந்தி கடலின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்
பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்ட
படகு ஒன்று தரித்து நிற்கிறது.
கடலில் கரைந்து போன அவளது சொற்களையும்
அதற்கிடையிலிருந்த ககைளையும் நான் வாசித்தேன்.
யாரும் உள் நுழைய முடியாத தெருக்கள்
எங்கள் நகரல் அதிகம் உள்ளன.
சிதைந்த நகரம் மபெரும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துக் கொண்டிருக்கிறது


02
தெருக்களில் செல்ல அஞ்சுகின்றன குழந்தைகள்
திறபடாத தெருக்களை குறித்து
என் குழந்தைகள் எல்லாவற்றையும்
அறிந்து வைத்திருக்கிறார்கள்
ஒரு இராணுவ வாகனமும் அதன் சத்தங்களும் என்று
அதிகாரம் எப்பொழுதும்
பயணம் செய்துகொண்டிருக்கிற வழிகளில்
இந்தக் குழந்தைகள் பாடசாலை செல்ல அஞ்சுகின்றனர்.

எங்கள் நகரின் எந்தத் தெருவும் மிக நீளமாக செல்லுவதில்லை
அது ஆபத்தான முட்கம்பிகளில் முடிந்து போகலாம்
அனுமதிக்கப்படாத அறிவிப்பு பொருத்தப்பட்ட
வேலியில் நம்மை மோத வைக்கலாம்
முடிவில்
தண்டனைகளுக்கான முறைகளை அது சொல்லியபடியிருக்கும்.

நாங்கள் ஆண்டுக்கணக்கில் காணாதிருந்த
தெருவை ஒரு நாள் திறந்து விட்டார்கள்.
பசியின் குரூரம் உறைந்த நாட்களின்
தெருவுக்கான தவத்தை முடித்துக் கொண்டு
வீதியப் பார்க்கிறோம்.
சிதைவுகளைத் தவிர ஒன்றையும் எங்கள் தெருவில் விட்டுவைக்கவில்லை
அழிவினால் மாற்றங்களுக்குள்ளான
இந்தத் தெருவுக்குள் நுழைய நாம் அஞ்சுகிறோம்.
எல்லா அநியாயங்களையும்
மென்முறையிலான ஆக்கிரமிப்புக்களையும்
எதிர்ப்பதற்கு திரணியற்ற அவற்றை நிறுத்துவதற்கு வழியற்ற
ஆக்கிரமிப்பினால் அதன் அதிகாரத்தினால்
மூடுண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்
கிழவியின் உயிர் தனக்குள் சொல்லிக் கொள்கிறது
தெருவின் கதைகளை.


03
தெருக்களில் வடிந்த குருதி காய்ந்து
படிந்து போயிருக்கிறது
தெருக்களில் கொல்லப்பட்ட உயிர்கள்
நசிந்து ஒட்டிப்போயுள்ளன
தெருக்களில் எழுதப்பட்ட கனவு வார்த்தைகள்
மிதிபட்டு உடைந்து போயுள்ளன
நீ அறிவாய் இந்த தெருவில் நடப்பதற்காய்
நாம் இழந்தவைகளின் உறைந்து போன கதைகளை.

இந்தக் குழந்தைகள் உலவ தெருக்களை அனுமதியுங்கள்
திறக்கப்பட்ட தெருக்களை குறித்து நாம் கைகள் தட்டுகிறோம்
மூடப்பட்ட தெருக்களை திறந்து விடுங்கள்
தெருக்களை அள்ளிச் செல்லும் அபகரிப்பாளன்
எப்பொழுதும் திரிவதாக குழந்தைகள் பயம் கொள்ளுகின்றனர்.

இந்த நகரம் சிதைவின் பின்னர்
ஆக்கிரமிப்பாளர்களினால் கைவிடப்பட்டிருக்கிறது
நகரத்தை ஆக்கிரமிப்பவர்கள்
தெருக்களை ஆக்கிரமிப்பவர்கள் அவற்றை
தமது அரண்களாக்கி எம்மிடமிருந்து பறித்து விடுகின்றனர்
அல்லது சிதைத்து கைவிடுகின்றனர்.

யாரும் உள் நுழைய முடியாத தெருக்கள்
எங்கள் நகரில் அதிகம் உள்ளன.
இன்னும் உள் நுழைய அனுமதிக்கப்படாத நகரங்கள்
எங்கள் மண்ணில் அதிகம் உள்ளன.
___________________
ஏப்பிரல் 2010

புகைப்படம் - யாழ் நகரில் உள்ள மின்சார நிலைய - மனிக்கூட்டுக்கோபுர வீதி சுமார் 15 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டது

நன்றி -  தீராநதி டிசம்பர் 

3 கருத்துகள்:

துவாரகன் சொன்னது…

அதிகார ஆக்கிரமிப்பின் வசமிருந்த, மிச்சமாயிருந்த தெருக்களை
பதிவுசெய்யும் கவிதை. இயல்பான அமைதியான வரிகள்.

தமிழ்நதி சொன்னது…

புராதன நகரம் ஒன்றைப் பார்ப்பது போலிருக்கிறது. சிதிலங்களுக்கிடையில் எத்தனை கதைகள் மூடுண்டிருக்கும்... எத்தனை குரல்கள் கேவிக்கொண்டிருக்கும்... எல்லாவற்றையும் நினைக்க உள்ளுக்குள் நடுக்கமாக இருக்கிறது. இப்படியொரு கொடுங்காலத்தினுள் வாழவேண்டியதிருக்கிறதே...

தொடர்ந்து எழுதுங்கள் தீபன். தொலைவில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களின் எழுத்துகளை விட நிலத்துக்கு நெருக்கமானது உங்கள் எழுத்துகள். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரிது.

புரட்சியாளன் சொன்னது…

வலிக்கிறது

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...