Wednesday, April 2, 2008

வளாகத்தின் சுவர்களில் படிந்திருக்கும் பயங்கரம்

எழுதியவர்_____________________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------------------
மழை இரவில் வளாகத்தின் சுவர்கள்

பயங்கரமாயின.

வழுவழுப்பான அந்தச் சுவர்களைத்துளைத்துக்கொண்டு

நேற்று வந்த மிருகங்கள் இன்றும் வரக்கூடும்

நேற்றிரவின் பலியை

இன்றும் அவை தொடரக்கூடும்.

எல்லாவற்றுக்கும் துவக்கை நம்பும்

காலத்தில்

இரவும் பகலும் மரணத்தின் நிழலில்

உறங்கிக் கொண்டிருந்தன.

நேற்றிரவும் நான்கு நண்பர்கள்



பகலில் மருத்துவமனையிலிருந்து திரும்பியவனை

இரவு விழுங்குகிறது

இரவில் படுத்துறங்கியவனை

பகல் பலிகொண்டது

கொலை நகரத்தில் வாழ்வொரு

சல்லடையாக்கப்பட்ட பழையகந்தற்துணி.



பயங்கரங்களின் இரவைக்கடந்து

காலையில்

தெருவில் இறங்கினேன்.

சிதறிக்கிடந்த பிணங்களைக்கடந்து

கடைக்கு வந்தபோது

இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கும் பத்திரிகையை

வாங்கிச் செல்லும் சனங்கள்

சிரித்து விலகினார்கள்



நடைபாதையில் தேங்கிக்கிடந்த சேற்றில்

இன்னும் சூடாறாமல் புகைந்து கொண்டிருந்த

துப்பாக்கியின் வெற்றுக்கோது சிரித்தது.



காய்கறிக்கடையில்

தேங்கிக்கிடந்த அழுகுரல்களை விலக்கி

தன்முகத்தைக் காட்டிக் கொண்டிருந்த பெண்ணிடம்

நாயிழுத்துச் சென்ற

கொலையுண்ட மனிதரின் வாடிய முகங்களிருந்தன.

பிள்ளைகளைத்தின்னக் கொடுத்த தன்துயரத்தை

வரும் ஒவ்வொருவரிடமும்

பகிர்ந்து கொண்டிருந்தாள் அவள்.



கொலைவாளை வைத்திருந்தான் என்று

குற்றஞ்சாட்டப்பட்ட பழக்கடைக்காரனின்

தலையைக் கொய்துகொண்டுபோன

புதிய கடவுள்களைச் சனங்கள் திட்டினார்கள்.

சாத்தானும் கடவுளும்

ஒரே ராஜ்ஜியத்தில் பங்குவைத்துக் கொண்ட

உலகத்தில்

சனங்களின் நிழலைக்கண்டு

நெடுங்காலம் என்று சொல்லிச் செல்லும்

ஒருவனைக் கண்டேன் அன்றிரவின் இறுதிக் கனவில்.
-----------------------------------------------------


நன்றி:புல்வெளி
-------------------------------------------------------------------

0 கருத்துகள்: