Friday, December 28, 2007

ஈழநிலாஅஸ்மீன்:கவிதைகள்

எழுதியவர்--------------------------------
--------------------------ஈழநிலாஅஸ்மீன்
__________________________________________________



01। மாட்டுக்கு மாலை போடு


காலினைப் பிடித்தேன் என்றன்
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எழுத்திலே காணின் ஏதும்
எழுதுவீர் அதுவே போதும்!

வாலினை பிடிப்ப வர்தான்
வாழுவர் தெரியும் கெட்ட

தேளினை பிடித்தோர் கூட
தேம்புவர் எனவே@உங்கள்

காலினைப் பிடித்தே னையா
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

கழுதையும் குரங்கும் மாடும்
கழுத்திலே மாலை ப+ண்டு…

மூலைக்கு மூலை கூடி
“முதுகினை சொரிந்து” எங்கும்

“போட்டோக்கு” பல்லைக் காட்டி
“போஸினை’’ கொடுத்து பின்னர்

எங்களை வெல்லும் கொம்பன்
எவனடா இங்கு உண்டு…?

என்றுதற் புகழ்ச்சி தன்னில்
எம்பித்தான் குதிக்கும் போது

அற்பன்நான் அவைகள் பாத
அடியிற்கு இன்னும் கீழே

ஆகையால் மாலை வாங்க
அடியேனுக் காசை யில்லை

காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

மாண்டுநாம் மடிந்த பின்தான்
மனதினால் மாலை இடுவர்

ஈண்டிவர் போடும் மாலை
இதயத்த லல்ல வேசம்..

மாலையில் மாலை போட்டு
மாலைதான் மறையுமுன்னே

கூழையன் நாங்கள் போட்ட
“கூழுக்கு” ஆடிப் போனான…

ஆளினைப் பிடித்து வைத்தால்
ஆளலாம் என்பீர் உங்கள்

காலினைப் பிடித்தேன் ‘’வாப்பா’’
கழுத்துக்;கு மாலை வேண்டாம்!

எலும்புக்காய் எச்சிலைக்காய்
எங்கள்நாய் வாலை ஆட்டும்

பிணமான பின்தான் உண்மை
பிரியத்தை அதுவும் காட்டும்

ஆகையால் மாலை சூட்ட
ஆருமே வராதீர் தேடி!

எழுத்திலே ஏதும் காணின்
எழுதுவீர் அதுவே கோடி!!
--------------------------------
2007.11.23

02. விருதுகள் வாங்கும் எருதுகள்….

எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நடப்பன ஊர்வன
நடிப்பன பறப்பன
விலங்குகள் சிலவும்
விழாவுக்கு வந்தன…

காணிகளை
களவாக மேய்வதில்
‘கலாநிதி’ முடித்த
கிழட்டுக் கிடாக்கள்தான்
கிரீடத்தை சூட்டுகின்றன…

இலவம் பழத்துக்காய்
இலவுகாத்த
மூளையே இல்லாத
முட்டாள் கிளிகள்
கீச்சுக் குரலில்
மூச்சு விடாமல்
சிறுநீரை பற்றி
சிலாகித்து பேசின…
ஒலிவாங்கியை
எலி வாங்கி
எருமைகள் பற்றியே
எடுத்துவிட்டன…

பாவம் பசுக்கள்…!
பாலைப் பலருக்கும்
பருகக் கொடுத்துவிட்டு
குட்டிகளோடு
குமுறிக் கொண்டிருந்தன
குளக்கரையில்.

பசுக்களை
கொசுக்கள் கூட
கணக்கில் எடுக்கவில்லை….

பாம்புகள்
பாலுக்காய்
படப்பிடிப்பிலிருந்தன…
வெட்கமில்லாத
வெண்பசுக்கள்
முலைகளை
மூடிமறைக்காததால்
முள்ளம் பன்றிகள் பார்த்து
மூச்சிரைத்தன…
பார்க்கு மிடமெங்கும்
பாலே ஓடியது…

பூனைகள் எலிகளோடு
புன்னகைத்தவாறு
முயல்களை
முழங்குவது போல் பார்ப்பதில்
மும்முரமாய் இருந்தன…

எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

வாழ்த்துப் பாடின
வால் பிடித்தே
வயிறு வளர்க்கும்
வாலான் தவளைகள்….
கால் பிடித்தே
காரியம் முடிக்கும்
காகங்களும்
கழிசரைக் கழுதைகளும்
காளைகளுக்கு மாறி மாறி
கவரிவீசின…

மாக்கள் கூடிய
மாநாடு அல்லவா…?
பூக்களுக் கங்கே
புகழாரமில்லை

அழுக்குத்தான் அன்று
அரியணையில் இருந்ததால்
சாணமே அங்கு
சந்தனமாயிருந்தது…

தயிர்ச் சட்டிளாலும்
நெய் முட்டிகளாலும்
இவ்வருடத்திற்கான விருதுகள்
இழைக்கப்பட்டிருப்பதாகவும்
பருந்துகளுக்கு
விருந்து வழங்கினால்தான்
அடுத்த வருடத்திற்கான
‘ஆளுநர்’ தெரிவாவரென்றும்
அதிலும்@
முதுகு சொரிவதில்
‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே
முன்னுரிமை இருப்பதாகவும்
முதலைகள்
முணுமுணுத்தன…

எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நாக்கிலுப்புழு ஒன்றே
நடுவராக இருந்ததால்
மான்களுக்கும்
மயில்களுக்கும்
மரியாதை அங்கில்லை.
வான் கோழிகளுக்குத்தான்
வரபேற்பிருந்தது.
பரிகளும் வரவில்லை
நரிகளும்
நாய்களுமே
நாற்காலியை நிறைத்திருந்தது.

மாநாட்டின் ஈற்றில்
எருமைகள் பற்றி
பெருமையாய்
சாக்கடை ஈக்கள்
சங்கீத மிசைத்தன….

மரம்விட்டு
மரம்தாவும்
மந்தி
மந்திரிகள்
கையடித்தன
கைலாகு கொடுத்தன…
எதுவுமே தெரியாத
எருமைகளுக்கு
பன்னாடைகளால
பொன்னாடை போர்த்தி
பொற்கிழி வழங்கின…

மாடுகளின் மாநாட்டில்
விருதுகள் பெற்ற
எருதுகளின்
வீர பிரதாபங்களும்
பல்லிளிப்புடன் கூடிய
படங்களும்
விளம்பரமாய்
நாளை வரலாம்
நாய்களின் பத்திரிகையில்!!
----------------------------------

Sunday, December 9, 2007

இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

01
ங்களில் யாருக்கும்
இங்கு வாழ்க்கையில்லை
படையெடுத்து வந்தவர்களின்
வாழ்வுக்குள் நசியக்கூடிய
சிறிய வாழ்க்கை ஒன்றை
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்.

இனி யாருடைய ஆதிகளும்
இங்கிருப்பதாய்
மார்பு நிமித்த முடியாது
இப்பொழுது
நிமிர்ந்த மார்புகள்தான்
சரிக்கப்பட்டிருக்கின்றன
இந்தக்குறியில்
எப்படி நாங்கள்
நமது மார்புகளை
நிமித்தப்போகிறோம்?

நாம் எல்லோரும்
குனிந்து கொண்டுதானே
போகிறோம்.

02
எங்கள் நாகரிக்தின்
வேர் படுகிறது
இந்த நகரத்தை விட்டு
ஒவ்வொருவராக
வெளியேறி வருகிறார்கள்
இது கைவிடப்பட்ட
நகரமாகிறது
துண்டிக்கப்பட்ட
தனிமையிலிருக்கிறது.

ஆதியை துறந்தவர்களாய்
வெளுறிய வீதிகளிலிருந்து
கால்களைத் தூக்கி
படகுகளில் நிரப்பி
மடக்கிக்கொள்கிறார்கள்.

இந்த நகரத்தை
யாருக்காக விட்டுச்செல்கிறோம்?
இங்கு யாருடைய வாழ்வு
சாத்தியப்பட்டடிருக்கிறது?

03
நாங்கள் ஒரு சங்கில்லியன் சிலை
வளர்த்திருக்கிறோம்
இப்பொழுது
சங்கிலியனின் சிலையை
எங்களால் நிமிர்ந்து
பார்க்க முடியாதிருக்கிறது
அது சிதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
ஜயத்துடன்
கண்களை வேலியின் கீழாக
சொருகிப்போகிறோம்
எங்கள் முன்னவர்களின்
நடுகல்கள்,நினைவுத்தூபிகள்
சில இரவுகளில்
அகழ்ந்து மண்ணாய் கிடக்கிறது
எங்களின் மம்மிகள்
இல்லை என்றாகின்றன.

இனி இந்த சுவர்களுக்ககு
வண்ணம் பூசவியலாது
அதில் பாசி படர்ந்திருக்கிறது
எங்கள் வாசகங்கள்
மறைக்கப்பட்டுவிட்டன.
எங்கள் சுவர்களின் ஆணிகள்
துருப்பிடித்து உக்கிவிட்டன.

எங்கள் நாகரிகத்தின் சுவடுகளை
சுவர்களில்
தொங்கவிடமுடியாது.

சிறைச்சாலை வண்ணம் பூசப்பட்டிருக்கிறது
அரச சிறைச்சாலை
அடைக்கலம் புகுவதற்கும்
அகதிகளாக்குவதற்கும்
தரப்பட்டிருக்கிறது
நாங்கள் நடமாட முடியாது
உயிரைப்பொத்தி வைத்திருக்கலாம்
கால்களில்
கட்டுப்போடப்பட்டிருக்கும்.

04
துப்பாக்கிகளால்
தவரவிடப்பட்டவர்களாயிருந்தாலும்
எதுவரை வாழப்போகிறோம்
எப்படி இங்கு ஒரு சந்ததி
உருவாகப்போகிறது?
நீ சந்ததியை உருவாக்க
திறனற்றவனாக்கி
விடுவிக்கப்பட்டிருக்கிறாய்
இவளின் கருவிலிருக்கும்
குழந்தையின் ஆயுள்
எவ்வளவு நீளமானது?
குழந்தையைவிட
இவளின் கருவில்
என்ன நிறைந்திருக்கிறது?

நீ குழந்தைகளுக்காக
சுவர்களில் வரைந்நிருந்த
உனது நாகரிகத்தின்
வீரதீர காட்சிகள் அழிந்துவிடட்ன
மீண்டும் அதை உன்னால்
வரைய இயலுமா?
நமது நாகரிகத்தின்
நிறங்கள் உதிர்கையில்
உருவப்படுகையில்
வெளுறிய பிள்ளைகள்
காலம் பிசகிய
பள்ளிக்கு போகிறார்கள்.

05
நிறைய வீடுகள்
பூட்டடப்பட்டிருக்கின்றன
பாழடைந்து விட்டன
நிறையவீதிகள் சருகுகளால்
நிரம்பி உள்ளன
ஒன்றில் அவர்கள்
வெளியேறியிருப்பார்கள்
அல்லது
கொலைசெய்யப்பட்டிருப்பார்கள்
சில வீடுகள்
சோபையிழந்து புகைகின்றன
அங்கு அவர்கள்

ஊமைகளாக்கப்பட்டிருக்கலாம்
குருடர்களாக்கப்பட்டிருக்கலாம்.

இங்கு யாருடை விழிகள்
திறந்திருக்கின்றன?
இங்கு யாருடைய வாய்கள்
பேசுகின்றன?
இங்கு யாருடைய நடமாட்டங்கள்
நிகிழ்கின்றன?

எங்கள் வீதி என்ற
துணிச்சலுடன் போகிறோமா?
நாம் பிரதான வீதியில்
செல்ல அனுமதிக்கப்படுகிறோமா?
வைத்தியசாலைப்பயணத்ததிற்கு
ஒரு மூதாட்டி நெடு நேரமாய்
காத்திருக்கிறாள்
எல்லோரும் தடுக்கப்பட்டு
உள்வீதிகளில்
நிறுத்தப்பட்டிருக்கிறோம்
இவைகளில் நசுங்கி
சில பிள்ளைகள்
தாமதமாக பள்ளி போகிறார்கள்.

06
நமது நாகரிகத்தின்
வேர் படுகிறது
நமது நாகரிகத்தின்
வாழ்வு அழிந்துவிட்டது
என்பதை வெட்கத்துடன்
ஒப்புக்கொள்வோமா?

இந்தக்குடா இப்பொழுது
எதற்கு விரிந்திருக்கிறது?

படையெடுத்தவர்கள்
நிறைந்திருக்கிறார்கள்
அவர்களுக்கு கையாள
பயங்கர ஆயுதங்கள்
நிறைந்திருக்கின்றன
அவர்கள் மரணத்தை
நிறைத்திருக்கிறார்கள்.

இதற்குள்ளளாகவே அந்த
வாழ்வு தரப்பட்டிருக்கிறது
நிறம் உருவப்பட்ட
வாழ்வை ஏற்க
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்
அல்லது அரச படகு இருக்கிறது
கால்களை மடக்கி
அதில் ஏறிப்போகலாம்?

நமது வாழ்வில் வழியும்
வெட்கத்தை துடையுங்கள்
நாம் நமது மார்புகளை
எப்படி நிமித்த வேண்டும்?
இந் த நாகரிகத்தின் வேரை
எப்படி துளிர்க்கச் செய்யவேண்டும்?
நமது வர்ணங்கள் எங்கிருக்கின்றன?
நமதேயான வாழ்வை
மீட்டெடுக்க வேண்டும்..
---------------------------------------
யாழ்நகர்செல்படலம்2007

றஞ்சனியின் கடிதம்
-------------------------------------------------------------------


அன்பின் தீபச்செல்வன்,
எந்த உணர்வுள்ள சுதந்திரத்தை விரும்பும் மனிதனுக்கும் பொய்வேசமும் தேவையில்லை தனது உணர்வுகளை உண்மையை எழுதுவதற்கு ,இது எனது கொள்கை நீங்களும் அதைத்தான் செய்கிறீர்கள் என எண்ணுகிறேன்।,பாஹீமாஜஹானின் கவிதைகளும் உணர்வுள்ள கவிதையாக நன்றாக இருக்கு. மனதை தளரவிடாமல் எழுதுங்கள் தமிழருக்கென்று ஒரு நாடு கிடைக்காமலா போகும்.
--------------------------------------------------------------------------

வணக்கம் தீபச்செல்வன்
உங்கள் தீபம் பக்கம் பார்த்தேன் , கவிதைகள் மனதை உருக்கி நிக்கிறது எம் போராட்ட வாழ்க்கைக்குள் இருக்கும் ஒருத்தியினதோ ஒருவனினதோ அல்லது அனைத்துமக்களினதோ மனநிலையைப்பிரதிபலிக்கிறது உங்கள் கவிதைகள் , கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் , இறப்புக்களும் ,இழப்புக்களும் சாதாரணமாகி , கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது , உங்களைப்போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது ,இந்த சூழலிலும் உங்களால் எழுதமுடிவதை பாராட்டுகிறேன் வசதி கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள் அது உங்கள் மன அமைதிக்கும் உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி
றஞ்சினி