Monday, July 16, 2007
தீபச்செல்வன்கவிதை
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
என்னைப்போலவே
தகனிக்கப்பட்டவர்கள்.
-----------------------
நான் மரணத்தின் குறையிலிருந்து
மீண்டுகொண்டிருக்கிறேன்
கனவின் சுடுகாட்டின்
புதைகுழி ஒன்றிலிருந்து
அல்லது
சாம்பல் மேட்டில் இருந்து.
புதிய நாக்கு ஒன்றை சிருஷ்டித்து
பேசும் ஒரு பொழுதுக்காக.
மரணத்தில் அல்லது தகன வெளியில்
புரண்டு அவதிப்பட்டு
நித்திரை இல்லாமல் விழிகளைக் கசக்கி
உயிரின் இருள்வெளிக்குள்
திரிந்து அலைந்து இயலாமல்
எழும்பி வருகிறேன்
வலி கரையும் நினைவிற்காய்.
நிலவின் வெளிச்சத்தை
பார்த்துக்கொண்டிருக்க ஆசைப்பட்டேன்
இருட்டில் புதைகுழி தோண்டி
புதைக்கப்பட்டேன்
சூரியனின் ஒளியை
சுவாசிக்க ஆசைப்பட்டேன்
நெருப்பால் எரித்து வீசப்பட்டேன்
கடலின் ஈரத்தில்
உலவ ஆசைப்பட்டேன்
நீர் இன்றிய ஆழத்தின் உஷ்ணத்தில்
தகனமாக்கப்பட்டேன்.
தாகங்களின் நினைவை அழித்து
சவப்பெட்டி செய்து
என்னை நிரப்பிக்கொண்டார்கள்.
எனது வாயின் அசைவுகளை
எவரும் கண்டுகொள்ளவில்லை
பள்ளிக்கூடத்திற்கு அல்லது கடைத்தெருவுக்கு
போகும் சிறுவனின் அலம்பலைப்போல.
புற்களில் மேய்ந்து உலவிக்கொண்டிருந்த என்னை
பண்டிகை ஒன்றின் மதிய போசன விருந்திற்கான இறைச்சிக்கு
வளர்க்கப்பட்ட ஆட்டுக்கடாவைப்போல்
முடிவை எழுதி பிரகடனப்படுத்தினார்கள்.
இனந்தெரியாத சடலமாக
எறியப்பட்ட எனது தெருவில்
இராணுவ சப்பாத்துகளின் கீழே
அரசாங்க செலவில்
அடக்கம் செய்ய
ஜனாதிபதி உத்தரவிடட பொழுதில்
ஆட்சி
வருடத்தை பூர்த்தி செய்தது
ஆயிரத்துநானூற்று ஐம்பத்துநான்கு
புதைகுழிகளை அடைந்து.
ஒரு துப்பாக்கியையும் சைனைட்டையும்
அணைத்தபடிதான் கரைந்துபோக வேண்டும்.
புதைகுழியில் அல்லது சாம்பல் மேட்டில்
ஒன்று மட்டும் எஞ்சிக்கிடக்கிறது
எனது அப்பாவித்தனம் அல்லது
குழந்தை போன்ற சிரிப்பு.
20.11.2006
_____________________________________
மீள்எழுத்து:நன்றி:எரிமலை.தினக்குரல்
அழிக்கப்பட்ட படகுத்துறை கிராமத்தின் கண்ணீர்வெறி.
--------------------------தீபச்செல்வன்
________________________________________
------------------------------------------------------------------------------
இது தாக்குதல் நடந்த படகுத்துறை
இது மன்னார் கடற்கரை
அதே குரூரப் பறவையின் வெறியில்
இன்னொரு கிராமமும் சிதறியது
இன்னும் கூச்சலிட்டு
அழுது அழைக்கிறது
படகுத்துறைக்கிராமம்.
அழுகை சலித்துப் போகிறது
எத்தனை சிதறிய கிராமங்களின்
கவிதைகளின் தலைகள்
உருண்டுகொண்டிருக்கின்றன
எதுவரை மரணத்தின் நாக்கு
விமான முகங்களில்
அசைந்தபடி
கிராமங்களை கிழித்துப்போகும்.
எந்தப்பதிலுமற்றுக்கிடக்கிறது
கிராமமும், அடுக்கப்பட்ட
பிணங்களும்
சிதறிய கிராமங்கள்
தெரிந்தே குரலிட்டன
அவர்கள் குண்டுகளால்
அரசியல் யாப்பு செய்தவர்கள்
நச்சு வாயுகளால்
இதயம் கொண்டவர்கள்.
இப்போதும் இதிலும்
இவைகளைப் பார்த்தும்
அவர்களால் மறுப்புக் கூற முடிகிறது
கண்ணைக் கட்டிக்கொண்டு
கோழை முகத்துடன்
அதே புன்னகையால்
குரலை உயர்த்தி
பதில் வாசிக்க முடிகிறது
கிராமங்களை விழுங்கிய திருப்தியுடன்.
அவர்களால் முடிவது
பிணங்களின் கண்காட்சியை
நடத்தவும்
சவப்பெட்டிகளை சமரசத்துடன்
வழங்கவும்
சுய உரிமையின் பெயரால்
சிதறிய எங்களைக் குவித்த
ஆட்சி பீடத்திலிருந்து
தங்களை இனம்காட்டியபடி.
படகுத்துறை கிராமத்தையும்
அமைதிப்படுத்தி
தீர்ப்பெழுதி குறிவைத்து
குற்றம் பூச முடிந்தது
அது பெண்களையும்
குழந்தைகளையும்
அதிகமாய் பலிகொடுத்த
பாரத்துடன் செய்திக்காக கிடக்கிறது.
__________________________________
02.01.2007 இந்த தாக்குதலில் பதினைந்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகினார்கள். சிறுவர்கள் கால் முதலிய அங்கங்களை இழந்தார்கள்.
___________________________________
மீள்எழுத்து:நன்றி:ஈழநாதம்
முகம் எரிந்துகொண்டிருக்கிறது
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
குரலைத்திருகியவர்கள்
இசைக்கருவிகளை உடைக்கவருகிறார்கள்
வார்த்தையை அடைத்தவர்கள்
நாவின்மீது
வாள்வீச வருகிறார்கள்
குழந்தைகளின்
புண்னகைச்சின்னங்களை
நெற்றியில் பொறித்துக்கொண்டு
பிணங்களை கணக்கெடுக்க
வண்டிகளில் வந்திறங்குகிறார்கள்.
புதைந்தவர்களின் வாக்கு மூலம்ங்கள்
தட்டிக்கழிக்கப்பட்டன
அமைதியைப்பற்றி
பிரசங்கம் செய்தவர்கள்
ஆயுதங்களை வழங்குகிறார்hகள்
அபிவிருத்தியைப்பற்றி
ஆய்வு நடத்தியவர்கள்
குண்டுகளை கையளிக்கிறார்கள்
பயங்கரவாதம் பற்றி
விளக்கமளித்தவர்கள்
அதிவேக விமானங்களை
பரிசளிக்கிறார்கள்
சாகசங்களே பாராட்டப்படுகின்றன.
அவர்கள் யாரும்
எல்லைகளைப்பற்றி
ஏன் பேசாதிருக்கிறார்கள்?
எல்லை தான்டி வரும்
பயங்கரவாதத்தை எதிர்த்து
தீர்க்கப்புறப்படுபவர்கள்
சிதறிய ஊர்களின் தரிசனத்திற்கு
ஏன் எல்லை தான்டிவரவில்லை?
பாராமுகங்களை படைத்து கைமாறினர்.
கல்லறை நிறம்பிய
ஊர்களின்பாடலிடம்
எதுவரை செவிடராயிருப்பர்?
குருதி பாய்ந்து கொண்டிருக்கும்
நதியிடம் கால்நனைத்தும்
எதுவரை உணராதிருப்பர்
அந்தரப்படும் அப்பாவிகளின்
ஆன்மாக்களின் மொழியிடம்
எதுவரை ஊமராயிருப்பர்
தமது வர்ணவண்டிகளை
மிக வேகப்படுத்தினர்.
வயிறுகளில் வெறுமை முட்டிய
பசியின்கேள்விகளிடம்
இறுக மூடிய தெருக்களிடம்
சிறைப்படுத்தப்பட்ட ஊர்களிடம்
சித்திரவதைக்கப்படும்
சிறைக்கூடங்களிடம்
பயணங்களை கைது செய்யும்
காவல் விதிகளிடம்
அடையாளத்தை அழிக்கும்
நிறைவேற்று அதிகாரத்திடம்
கண்ணாடிகளை அனிந்து
எதுவரை குருடராயிருப்பர்.
முகங்களை மாற்றி
வார்த்தைகளுக்கு நிறமணிந்து
மாளிகைகளுக்குள்
அடைந்து கொண்டனர்.
முகம் எரிந்துகொண்டிருக்கிறது.
_________________________________
மீள்எழுத்து:நன்றி:ஈழநாதம்.தினக்குரல்.தின்னை
படுவான்கரை:கவிதை
எழுதியவர்:பொன்.காந்தன்
________________________
ஒரு ஊரின் நாட்குறிப்பு
------------------------
ஏரிக்கரையில்
படுவான்கரையில்
சூரியன்
மொய்ப்பதாக
அங்கு
வேர் வாசம்கொண்ட மலர்கள்
நோவாவின் பேழைக்கு
விண்ணப்பித்தன
பி.பி.சி காற்றில்.
தூளிக்கும்
ஊஞ்சலுக்குமான கயிறுகள்
தூக்குக்கயிறாகிறது
மீன்பாடுகிறது
தேன் நாட்டில்.
அரிதாரத்தோடு
அதிகம் பழக்கப்பட்டவர்கள்முன்
ஒட்டுப்புன்னகைகள்
எப்படி செல்லுபடியாகும்.
கறவைகள்
மடிநொந்து அலறவும்
தேன் கூடுகள்
வீங்கிப்பெருத்து
நிலத்தில் விழுந்து சிதறவும்
வரம்புகள்
புற்களில் மறையவும்
வசந்தன் பாட்டுக்கள்
வாயிழந்து போகவும்
ஒரு
ஊரின் நாட்குறிப்பு
கனக்கிறது
செருகப்பட்ட வாசகங்களால்.
வர்ணக்கொடிகளோடு
முகவரி இழந்த ஊருக்கு
அணிவகுப்போரே
புண்ணிருக்கும் இடத்துக்கு
காகங்களாய்
போவதென்ன!
முகங்களொடு
பேசத்தெரிந்தவர்கள்தான்
முண்டியடிக்கின்றார்கள்
இதயங்களொடு
இரண்டறக் கலக்கத்தெரிந்தவர்கள்
உலக சிம்மாசனங்களில்
எங்கேனும்
எழுந்தருளியுள்ளாரா!
இதுவரை
கண்ணை மூடிக்கொண்டு
காடுகளில்
தேனெடுத்த தேவதை
நேற்று
தாந்தாமலையில்
உடலெல்லாம்
கண்திறந்து அழுதாள்
சிங்கத்துக்கு
அவர்கள் பிறந்த
உண்மையை
நகங்கள்
மகாவம்சமாய்
அவள் உடலில் எழுதியிருந்தன.
ஏரிக்கரையில்
வாகரையில்
நிலவு நித்தியமாவதாக
அங்கு
மெழுகுதிரிகள்
நோவாவின் பேழைக்கு
ஏங்கித் தவிக்கின்றன.
___________________________________________________
குறிப்பு:- ஏரிக்கரை - அரசின் அதிகாரபூர்வ ஊடக ஊதுகுழல்
_______________________________________
தீபம்:ஒளியாய் கசிகிறது எழுத்து
Saturday, July 14, 2007
யாழ்.நகரம்:கவிதை
--------------------------தீபச்செல்வன்
------------------------------------------------------------------
ஒரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி:யாழ் நகரம்.
01
எனது சைக்கிள்
சந்தியில்
குருதி வழிய வழிய
உடைந்து கிடக்கிறது
நாட்குறிப்புக்களை
காற்று வலிமையாக
கிழித்து போகின்றன
எனது பேனா
சிவப்பாகி கரைகிறது.
மதிய உணவிற்கு
வாங்கப்பட்ட
அரை ராத்தல் பாணை
நாய்கள் அடிபட்டு
பிய்த்து தின்னுகின்றன
வாழைப்பழங்களை
காகங்கள்
கொத்தி தின்னுகின்றன.
எனது பிணம்
உரிமை கோரப்படாமல்
குருதியால் போர்க்கப்பட்டிருக்கிறது.
வீட்டின் கூரை
உக்கியிருக்கிறது
சுவர்கள் கரைந்து
சரிந்திருக்கின்றன
அம்மா அக்கா தம்பி தங்கைகள்
அழுகையில்
கூடியிருக்கிறார்கள்.
வீதி மயானமாகிறது
சீருடைகள் சவப்பெட்டியாகின்றன
மின் தூன்கள்
உயிரை குடிக்கின்றன.
யாரோ சாப்பிட வருகிறார்கள்
கொத்துரொட்டிக்கடை திறந்திருக்கிறது.
02
நான் யாரென்பதை
நீங்கள் அறியாதிருப்பீர்கள்
ஆவலற்றிருப்பீர்கள்
நீங்கள் சாப்பிடும்
கொத்துரெட்டி
மேசையில் பரவியிருக்க
எனது பிணம்
பின்னணியாய் தெரியும்.
இவன் ஏன் சுடப்பட்டான்
என்பது பற்றிக்கூட
நீங்கள் சிந்திக்கமாட்டமடீர்கள்
உங்களால்
தொடர்ந்து அமைதியாய்
சாப்பிட முடியும்
நாளைக்கு வெடிக்கப்போகிற
வன்முறைகளுக்கு
ஊரடங்கு அமுலுக்கு
நீங்கள் தயாராகுவீர்கள்.
03
கடையில் இருக்கும்
பொருட்களில்
சிலவற்றை முண்டியடித்து
வாங்கிவிட்டு
குறைந்த பொருட்களோடு
கூடிய பாரத்தோடு
வீட்டிற்கு வருவீர்கள்
பூட்டிய வீட்டுக்கதவை தட்டி
கூப்பிட்டு
அவதானமாக கதவை திறந்து
உள் நுழைவீர்கள்
கதவுகள ஜன்னல்களை
இறுக சாத்திக்கொள்வீர்கள்.
அவன் என்ன செய்திருப்பான்
என்ற கேள்வி
நீர் தீர்ந்து காற்று வரும்
குழாயை உலுப்புகையிலும்
எழாமலிருக்கும்.
ஒரு பக்கத்துடன் வெளிவரும்
நாளைய தினஇதழ்
அதில் அவன் சாவு
இனங்காணப்பட்டிருக்கும்
என்றுகூட எதிர்பார்க்கமாட்டீர்கள்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு
ஏழு மணியுடன்
கண்னை மூடிக்கொள்கையில்
இரவு பெரிதாக விரிகையில்
எதுவும் நினைவு வராது.
நாளை அந்த கொத்துரொட்டிக்கடை
பூட்டியிருக்கலாம்
வேறு எங்கேனும்
ஒரு கொத்துரொட்டிக்கடை
கொஞ்சரொட்டிகளுடன் திறந்நிருக்கும்.
கொஞ்ச பொருட்களுடன்
ஓரு பலசரக்குகடையும் திறந்திருக்கும்.
04
நான் என்ன செய்தேன்
எதை விரும்பினேன்
யாரை நேசித்தேன்
யாரை எதிர்த்தேன்?
எனது வீடு எந்த
கிராமத்திலிருக்கிறது
எனது பேஸில்
யாருடைய படம் இருந்தது
எந்த பிரதேச வாடையுடைய
உடைகளை
நான் அணிந்திருந்தேன்
எனது தலைமுடி
எப்படி சீவப்பட்டிருந்தது?
யார் என்னை கவனித்தார்கள்
எந்த முகாங்கள்
அமைந்திருக்கும் வீதியால்
நான் பயணிக்காதிருந்தேன்?
எந்த சீருடைகளுக்கு
நான் அச்சமாயிருந்தேன்
ஏன் பொது உடைகளுடன்
வந்தவர்களால்
நான் சுடப்பட்டேன்?
எனது பிணத்தில்
எத்தனை கேள்வியிருக்கிறது
எப்பொழுது நான்
இனங்காணப்படுவேன்?
05
நான் எந்தவகை அமைதியாயிருக்கிறேன்?
நீங்கள் எந்தவகை அமைதியாயிருக்கிறீர்கள்?
குறிப்பிட்ட நேரங்களுக்குள்
என்ன இருக்கிறது?
இயல்பு குழைந்த யாழ்.நகரத்தில்
என்ன நடக்கிறது?
______________________________________
05.09.2006.யாழ்.நகரம்.
Friday, July 13, 2007
வேல்.லவன்கவிதைகள்
எழுதியவர்:வேல்.லவன்
_______________________
01:சாத்தானேறியகடல்
02:கடவுளின் வருகை
03:அன்பின்வலி
______________________
01:சாத்தானேறிய கடல்.
--------------------
என்றைக்கும்
சாத்தானிடம் தோற்றுப்போவதே
கடவுளுக்கு வழக்கமாகிவிட்டது.
ஆதிநாளில்
மானுடப்படைபபின்பொழுது
ஆதாம் ஏவாள் விடயத்தில்
சாத்தானிடம்
தோற்றுப்போனான் கடவுள்
அன்றிலிருந்து சாத்தானிடம்
சரணாகதியாகிப்போனது உலகம்.
இதோ இப்பொழுது மீண்டும் சாத்தான்
கடலேறி வந்திருக்கிறான்.
இத்தருணத்திலும் எங்கிருக்கிறாய் கடவுளே...
வானம் கிழித்து வெளியே வா...
தோழ்விகளால் துவண்டு துவண்டு
முகம் மோதுண்டு வீழ்ந்தவுன்
குரூபியான வதனமதை
நான் நன்றாக பார்க்கவேண்டும்.
இங்கே பார்..
என்னென்ன படையல்களை
நாமுனக்கு படைத்திருக்கிறோமென்பதை
மனித வர்க்கத்தின் மண்டையோடுகள்
எலும்புக்குவியல்கள் தசைத்துண்டங்கள்
குழந்தைகள் உடலில் குழம்புக்கறி
இடையிடையே ருசிக்கும் என்பதற்காய்
மிருகங்களின் நிணத்தில் வருவல்
எல்லாமுனக்கு மட்டுமே
நன்றாய் புசித்துப்பசியாறு.
படையலுக்கிடமுடியாது போனவற்றை
பூமியிலிட்டு புதைத்திருக்கிறோம்
வேண்டும் பொழுதெல்லாம் உண்டு மகிழ்
விக்கலெடுத்தால் அதோ பார்..
உதிரம் கலந்ததால் உப்புக் கூடியிருக்கிறது
சாத்தானேறி வந்த கடல் நீர்
அள்ளி தாகம் தீர அருந்து.
உனக்குரிய அர்ச்சனைக்காய்
கள்ளிமலர்களினாலும் எருக்கலம் பூக்களினாலும்
மாலைதொடுத்து வைத்திருக்கிறோம்
சூடிக்கொள்.
பிள்ளையிழந்தவனின் கூக்குரலும்
கணவனை இழந்தவள் ஒப்பாரியும்
உறவுகளை பறிகொடுத்தோன் புலம்புலும்தான்
உனக்கு நாம் பாடும் முகாரிப்பாசுரங்கள்
ஏற்றுக்காள்.
இதுகாறும் இவையனைத்தையும்
சாத்தானுக்கே நாம் படையலாக்கினோம்
இன்று முதல் சர்வமும்
உனக்கே சமர்ப்பணமாகட்டும்.
பஞ்சபூதங்களுக்கெல்லாம் பதியாய்
விளங்குபவன் நீதானாமே
என்ன மாயம் செய்தான் சாத்தான்
கடலினை உன்னிடமிருந்து கவர்ந்துகொள்ள.
சாத்தான் கடலேறிவரும்பொழுது
அலை நாக்குகளின் அளவில்லா நீளம்
யார் கொடுத்த கொடும் வரமோ
யார்தான் அறிதல் கூடும்.
கடவுளே...
முடிந்தால் தானை வெற்றிகொள்
புராணங்களில் மட்டும் புதையுண்டு கிடக்கும்
புதுமைகளுக்கு இந்நவயுகத்தில்
புனர்ஜென்மம் கொடு
வேண்டுமானால் என் கவிதையை
அன்றைக்கு மாற்றியெழுதுகிறேன்.
_____________________________________________________
03:கடவுளின் வருகை.
-----------------------
என் மாய மாளிகையில் நான் கொலுவீற்றிருக்கிறேன்
எனது மெளனங்களை மொழிபெயர்த்து ஒலியெலாமல்
வார்ததையாடிக்கொண்டிருக்கிறது என் தனிமை.
நான் கடவுளின வருகைக்காக காத்திருக்கிறேன்
இன்று என்னிடம் வருவதாக முன்பொருநாள்
கடவுள் சொல்லியிருந்தார்
துணைக்கு தனிமையைய அருகில் வைத்துக்கெகாண்டு
கடவுளுக்காக காத்திருக்கிறேன்.
இதோ...கடவுள் வந்துவிட்டார்
சாந்த சொரூபியாக பரம சாதுவாக
கொவ்வைச்செவ்வாயில் குமுண்சிரிப்புடன்
என்னருகமர்ந்தபடி திருவாய்மலர்ந்தார் கடவுள்.
மானிடா...
உனக்காக இரண்டு உலகங்களை படைத்திருக்கிறேன்
இந்த மாயமாளிகையை நீறாக்கிவிட்டு விரும்பிய உலகில்
வாழ்வாயாக என வரமளித்தார் கடவுள்.
இரண்டு உலகங்களிலும்
உன் வேண்டுகைகள் யாவும் நிறைவேறும்
அழகுகள் கொட்டிக்கிடக்கும்
அங்கு ஓடும் நீர்வீழ்சிகளில் நீந்தி
உன் பிறவித்தலைகளை அறுக்கலாம்
விளைகின்ற எதையும் உண்ணலாம்
உரிமையாக்கியும் கொள்ளலாம்
ஆனாலும் ஒரு விடயத்தில்
இரண்டு உலகங்களிடையில' வேறுபாடிருக்கும்.
கடவுள் பேச்ச நிறுத்திக்கொண்டார்
ஆர்வம் தாங்கொணாது என்ன வித்தியாசம் என்று கேட்டேன்
கூர்ந்து பார்த்த கடவுள் புன்முறுவலோடு சொன்னார்.
பூக்களில்லாத உலகம் பூக்களின் உலகம் ஆயுளின்தீர்மானம்
எதைப்பற்றியும் சிந்திக்காமல் கடவுளிடம் சொன்னேன்.
கடவுளே...
நீர் விண்மீன்கள் சூழ்ந்திருக்கும் பிரபஞ்சத்திலிருந்து
அண்டங்கள காக்கும் ஆண்டவர்
நான் மி்ன்மினிகள் சஞ்சரிக்கும் பூவுலகத்தை சேர்ந்த
உம்மால் பாதுகாக்கப்படும் ஒரு மானுடத்தேனி
உமது இரண்டு உலகிலும் என்னால் ஜீவிக்கமுடியாது
முடிந்தால் மூன்றாவது உலகமொன்றை
எனக்காக படைத்தருளும்.
நீர்தான் தூவென் மதிசூடிய உள்ளங்கவர் கள்வனாயிற்றே
என்னுள்ளளத்தில் நான் செதுக்கியிருக்கும் சித்திரப்பூவை
உமது ஞானப்பார்வைவயால் பிரதியெடுத்துக்கெகாள்ளும்.
அமைதியே அரசனாக கொலுவிருக்கும் கந்தகநெடியில்லாத
மூன்றாவது உலகத்தில் அச்சித்திரபூவிற்கு உயிர்கொடும்
அருகில் எனையமர்த்தி உமது அன்பின் அடையாளமாய்
ஒரேயொரு ஆயுள்நாளை எனக்குபரிசளிப்பீராயின்
இப்பொழுது என் கனவுமாளிகையைய நீறாக்கிவிடுகிறேன் என்றேன்.
கடவுள் திகைத்துப்போனார்
சில கணங்கள் இருவரும் மெளனிகளானோம்
தனது பரிவாரங்கள் புடைசூழ காலச்சிற்பியை அழைத்தவாறு
கடவுள் எழுந்து போய்விட்டார்.
மீண்டும் தனிமையை துனைக்கு வைத்துக்கொண்டு
மெளனங்களை வார்த்தையாடியவாறு
கடவுளின் மீண்டுமொரு வருகைக்காக நான் காத்திருக்கிறேன்.
_______________________________________________________________
02:அன்பின்வலி.
--------------------
நான் பாரொடு
விண்ணாய் பரந்தவன்
நீ இரண்டுக்குமே
தண்மையளிக்கும்
மழை முகிலானவள்
கலந்தனவாகிய
எமதன்புடை நெஞ்சம்
ஒரு மலைமுகட்டில்
வாழும் பறவைபோல்
கட்டுக்கடங்காது
இப்பூவுலகோர்.
அம்பும் வில்லுமாய்
அலையும் மலைவேடுவர்.
ஊழிப்பெருவெள்ளத்தில்
இம்மண்னுருன்டை
மூழ்குவதாய் நான் கற்பனிக்கயையில்
கர்ணப்பேழையாய் மிதந்து
என்ன மட்டும்
கரையேற்றிச்செசல்கிறாயே
ஏனடி என் கனவுத்தோழி.
நீ எனக்கு யாதுமாகி நின்றவள்
நான் காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கிறேன்
ஏதொன்றும் அறியார்போல்
வேடமணிந்த அயலும் சுற்றமும்
படகோட்டுகிறது என் கண்ணீரில்.
வேறொன்றும்மில்லையடி
தோழி அதன் காரணம்
இப்பூமியோர் எல்லாருக்கும்
ஞானக்கண் திறப்பதற்காய்
என்றோ ஒருநாள்
ஆதிபிதா ஆதாம்
புசித்த அப்பிளின்
வீரியத்தன்மை
விட்டொழிந்து போயிற்றடி.
இமைதிறந்திருக்க
கண் மூடிக்கிடக்கும்
இவர்களின் இயல்பொழிக்க
இன்னுமொர் ஆதாமுக்கும்
அவன் புசித்த அப்பிளுக்குமாய்
எங்குசென்றலைவோமடி
என் கனவுத்தோதழி.
___________________________________________________________
மீள்எழுத்து:நன்றி:ஈழநாதம்.நமதுஈழநாடு.
Thursday, July 12, 2007
சிறைச்சாலை அல்லது அகதிமுகாம் ஒன்றிலிருந்து..
--------------------------தீபச்செல்வன்
________________________________________
------------------------------------------------------------------------------
உனக்கு கடிதம் எழுதும்
என் பேனாவுக்கு பக்கத்தில்
எல்லோரும் அழுதபடி
இருக்கிறார்கள்
நாங்கள் தங்கியிருப்பது
மாணவ விடுதியல்ல
சிறைச்சாலை அல்லது
அகதிமுகாமாக
இருக்கவேண்டும்.
இங்கிருக்கும்
சில சகோதரர்களின்
உறவுகள் அங்கு
விமானங்களால்
பலியெடுக்கப்பட்டடதாக
அழுதுகொண்டிருக்கிறார்கள்
யாருக்கும் யாரும்
ஆறுதல் சொல்ல முடியாது
மூலைகளில்
வைக்கப்பட்டிருக்கிறோம்.
நேற்று முன்னயை தினம்
எங்களோடிருந்த
மாணவர்கள் இருவர்
சுட்டுக்கால்லப்பட்டுவிட்டார்கள்
எங்களால் அவர்களுக்காக
சத்திமிட்டு
அழக்கூட முடியவில்லலை.
அகதி முகாமாயிருக்கும்
எங்கள் விடுதிமீது
கைக்குண்டுத்தாக்குதலும்
நடத்தப்பட்டது
சிலர் வைத்தியசாலையில்
மருந்துப்பொருட்கள் இன்றியும்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாங்கள் தங்கியிருக்கும்
மாணவ அகதிமுகாமிற்குள்
அச்சுறுத்தும்படி
ஆயுதங்களுடன் புகுந்து
சோதனையிடப்பட்டது
முகாம்களை தகர்ப்பதுபோல
முற்றுகையிடப்பட்ட
நாளின் அதிர்ச்சியில்
எல்லோரும் படுகொலைசெய்யப்பட்ட
புத்தகங்களாக பரவி இருக்கிறோம்.
எங்களில் சிலரை காணவில்லை?
ஊரடங்கு அமுலில் சிலர்
காணாமல் போகிறோம்?
ஊரடங்கு அமுலற்றபோது
பலியெடுக்கப்படுகிறோம்
எல்லோரும் வேண்டுமளவுக்கு
கெளரவமாக வருத்தப்படுகிறோம்.
எவ்வளவு வலிமையாயிருந்த
எங்கள் குரலின் நாடி
துப்பாக்கிகளின் முற்றுகையிலும்
பச்சை உடைகளின்நிழலிலும்
அன்றைக்கு
ஒடுக்கித்தான்போனது
அவர்களது துப்பாக்கிகளும்
வீடியோக்களும்
எங்கள் முகங்களை
பதிவுசெய்தபோது
உன் முகமும் அழைப்பும்
அவசரமாகவே ஞாபகமானது
--------------------------------------
Wednesday, July 11, 2007
த.அகிலன்கவிதை
எழுதியவர்:த.அகிலன்
_________________________
என்னிடம்
மகிழ்ச்சியின்
சொற்கள் தானுமில்லை..
--------------------------------------------
என்னால்
உலர்ந்துபோன
இரத்தத்தின்
அடியில்
ரோஜாவின் இதழ்களை
கற்பனை செய்ய
முடிகிறது.
பூக்களிடம் தொலைந்துபோன
இயல்பைப்போல்
நேற்றுப்பிடுங்கியெறியப்பட்ட
பெருமரத்தின்
மொட்டுக்களையும்
பிஞ்சுகளையும் குறித்த
துயர்மிகும்
சொற்கள் மட்டுமே
இப்போது
என்னிடமுண்டு.
அழகுதிர்ந்த கவிதை
துயரமும்
பிணமும் நாறிக்கிடக்கும்
தெருவழியே
அழுதலைகிறது.
குருதியூறிய சிங்கத்தின்
வேட்டைப்பல்லிடுக்கில்
அழுகிநாறும்
எம் குழந்தைகளின்
இளந்தசை.
கேள்விகளற்ற
நிலத்தில்
துயர்மிகும்
சொற்களைத்தவிரவும்
வேறென்னதான்
இருக்கமுடியும்.
______________________________________
நன்றி:எரிமலை
பஹீமாஜஹான் கவிதை
எழுதியவர்:பஹீமாஜஹான்
____________________________
ஒரு கடல் நீருற்றி
-----------------------
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது
வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவி வழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !
சந்தடி ஓய்ந்த தெரு வழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் !
இப்படியே
எத்தனையோ இரவுகளில்
விவாதிப்போம் நெடு நேரம்
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்
பிரிந்து செல்வோம் !
பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் !
பரணி...
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை
மாரி கால அந்திப் பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட
மீளவும் நீ வந்தாய் !
அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !
திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !
இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?
___________________________________________________
மீள்எழுத்து:நன்றி:கனவுகளின் தொலைவு
எஸ்போஸ்:நினைவு

தீபம் : ஒளியாய் கசிகிறது எழுத்து.
_____________________________________________
ஊடகவியளாலர் எஸ்போஸ் அண்மையில் மர்ம ஆயுததாரிகளினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
இவர் கவிதைகளை கூடுதலாக எழுதிவந்தவர்.
கருணை.விடுதலை.சுயஉரிமை என்பன பற்றி குரலிட்டவர்.
நிலம் இதழின் ஆசிரியராக இயங்கியவர்.
மேலும் பலஇதழ்கள்.பத்திரிகைகளிலும் பணியாற்றியிருந்தார்.
அவருக்கு தீபம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.
அவரது இரண்டு கவிதைகளும் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.
_______________________________________________________
மரணத்தோடு விளையாடிய குழந்தை
---------------------------------------------
--------------------------தீபச்செல்வன்
________________________________________
------------------------------------------------------------------
உனது ஒளி மிகுந்த கவிதைகளிடம்
அவர்கள் முழுமையாக
தோற்றுப்போனார்கள்
இருளை கொடடூர முகத்தில்
அப்பிக்கொண்ட அவர்கள்
வலிமை மிகுந்த
உனது குரலிடம்
சரணடைந்து போனார்கள்.
விழித்துக்கிடந்த
உனது சுதந்திரத்தின்
குழந்தைமீது
கூரிய கத்தியை வைத்து
குரலை நசித்துவிட்டு
சிரித்தபடி போகிறார்கள்.
நீ சுமந்துவந்த
தேன் நிரம்பிய மண்பாணை
உடைந்து போனதாய்
அவர்களுக்குள்
திருப்தி தலை தூக்க
வீதியை இருட்டாக்ககி
ஓடிக்காண்டிருக்கிறார்கள்.
இருப்பினும் உனது
எல்லா கவிதைகளும்
விழிகளில்
சூரியனை கொண்டு
பிரகாசிக்கின்றன
உனது எண்ணங்கள்
கடலிலும் வெளியிலும் புறப்படுகிறது.
நீ வாழ்ந்து வந்த
சோலைகளின் மீதும்
அவர்களின் கத்திகள் பதிந்தன
நீ வளர்த்த மரங்களின்மீதும்
அவர்களின் துப்பாக்கிகள்
பதிந்தன
உன்ன தூக்கிக்கொண்டு
கருகிய வனம் ஒன்றிறிகுள்
போகச்சொன்னார்கள்.
நீ கொண்டாடிய சிரிப்ப பலியெடுக்க
பின் தொடர்ந்து வந்தார்கள்
நீ எதிர்த்த பயங்கரத்த
உன் மீதே
பிரயோகிக்க திரிந்தார்கள்.
எப்போழுதும் போலவே
உனது வானம்
உனது நிறத்த அணிந்திருக்கிறது
எப்போழுதும் போலவே
உனது வழி உனது வெளிச்சத்தில்
மிகுந்திருக்கிறது
இன்னும்
உனது வார்த்தைகள்
உனது இசையால் நிறைந்நிருக்கின்றன
உனது கேள்வியும் போராட்டமும்
அதிகாரங்களுக்கு முன்னால்
முண்டியடிக்கிறது.
ஒரு குழந்தையை
படுக்கையின் மீது
படுகொலை செய்து விட்டு
எப்பொழுதும் விடுதலைக்காய்
அதிகாரத்தை எதிர்த்து
குரலிடும்
அதன் ஒளிமிகுந்த வார்த்தைகளை
எடுத்துப்போகிறார்கள்.
_____________________________________________
இதில் போஸ் நெருங்கிக்கையாலும் சில சொற்களும் இடங்களும் வருகின்றன.
தீபம் : ஒளியாய் கசிகிறது எழுத்து.
_____________________________________________
எஸ்போஸ்:கவிதைகள்
_____________________________
01:கனவுகளின் அழுகையொலி.
-----------------------------
மரணம் தூங்கும் சுவர்களில்
இன்னும் விழித்துக்கொண்டிருக்கிறது
காலப்பேய்நிழல்.
அந்தரத்தில் உதிர்ந்து போகும் சிறகுகள் பற்றிய துயரத்தை
இடிபாடுகளுக்கு மேலாக பாடிப்போகின்றன பறவைகள்
நாட்செல்ல நாட்செல்ல
மரங்களில் எழுதப்பட்ட அவற்றின் வாழ்வு
சாம்பல் பூத்து சாம்பல் பூத்து நிழலழிந்து போகிறது.
பறவைகள் கலைந்து போகின்றன கூடுகளைவிட்டு
பிணமெரிந்த புகையாய் நிலமெங்கும் படர்கிறது
காலப்போய்நிழல்.
நந்தவனங்களுக்கு மேலாய் பறந்துபோகின்றன வெளவால்கள்
கனிகளை புசித்து புசித்து
சாபத்தின் சிறகுகளை பறவைகளின் சிறகுகளில் வீசிச்செல்கின்றன
வெறுமையும் சாவின் அமைதியும் மிகப்பழைய கூடுகளில் உறைகிறது
அதே துயரம்
அதே வலிகள்.
பறவைகள் வாழ்ந்த கொடிகளில்
வனப்பும் வாசமும்
நள்ளிராக்கருகாமையில் வழி தவறிப்போயிற்று.
இருள் தந்த மகிழ்ச்சியின் வெறியில்
ஆடைகளை அவிழ்த்துதெறிந்து நிர்வாணிகளாயின வெளவால்கள்.
அழியுண்ட கனவுகுகளின் அழுகைச் சகதிக்குள் போய்விழுகிறது
சிறகிழந்த பறவைகளின் வாழ்வு.
____________________________________________________
02:சூரியனை கவர்ந்து சென்ற மிருகம்
-----------------------------------
என் அன்புக்கினிய தோழர்களே
எனது காதலியிடம் சொல்லுங்கள்
ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த
வனாந்தரத்திலிருந்து
ஒரு மிருகம் என்ன இழுத்துச்சென்றுவிட்டது
கடைசியாக நான் அவழுக்கு முத்தமிடவில்லை
அவளது கண்களின் வழமையாயிருக்கும் ஒளியை நான் காணவில்லை
கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது
கடைசிவரை நட்சத்திரங்களையோ புறாக்களையோ
எதிர்பார்த்த அவளுக்கு சொல்லுங்கள்
எனது காலத்திலும் எனது காலமாயிருந்த
அவளது காலத்திலும் நான் அவற்றை காணவில்லை
என்ன ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.
நான்.
இனிமேல்
எனது சித்திரவதை காலங்களை
அவளுக்கு ஞாபகப்படுத்த முடியாது
எனவே தோழர்களே
நான் திரும்ப மாட்டேன் என்றோ அல்லது
மண்டையினுள் குருதிக்கசிவாலோ
இரத்தம் கக்கியோ
சூரியன் வெளிவா அஞ்சிய ஒருகாலத்தில்
நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்கள்.
நம்பிக்கயைற்ற இந்த வார்த்தைகள்
நான் அவளுக்கு பரிசளிப்பது
இதுவே முதற்தடவை எனினும் அவளிடம் சொல்லுங்கள்
அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டர்கள்
மூளைய நசுக்கிவிட்டார்கள்
என்னால் காற்றை உணரமுடியவில்லலை.
_________________________________________
பொன்.காந்தன்கவிதைகள்
எழுதியவர்:பொன்.காந்தன்
________________________
01:உனது வரவுக்குறிப்பு
---------------------
ஏது மற்றதில் நீ துணிந்து மலர்ந்தாய்
நம்பிக்கையோடு
உன்னிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம்
எல்லாப்பின்னணியிலும் நீஅழகாகவே இருப்பாய்
இதுவரை வெளிகளில் ஒளி நிரம்பியிருந்தது
காற்று நிரம்பியிருந்தது
யாரும் கண்டிலர்.
எல்லார் கண்களிலும்
வெளி நிரம்பியிருந்தது ஏதுமற்று
உனது வரவிற்கு நன்றி
இப்போது கனவு காண்பதற்கு
ஏதுமில்லாமல் போய்கொண்டிருக்கிறது
நீ அருளுமல்ல
மந்திரமுமல்ல
பூச்சியமுமல்ல
ஆச்சரியமுமல்ல
நீ விரலும் விரலும்
பாதமும் பாதமும்
கண்களும் கண்களும்
தெரியாமல் கரையும் புரிதல்
நிரம்பி வழியும் நிசம்
எப்போதும் ஒரு வெற்றிடத்தோடு
உனதருகில் வருகிறேன்
நீ நிரப்புவதில்தான் அழகு அர்த்தம்
இப்போது தண்ணீருமுண்டு தாகமுமுண்டு
தண்ணீருமில்லை தாகமுமில்லை
உனது வரவால் வாசல்கள் அழகுபெற்றன
ஓ வரவே கவிதையற்ற மனசில் சாய்கிறாய்
எங்கிருந்தோ தொடங்கி
எங்கேயோ முடிக்கப்போகிறேன்
அந்தக் கண்ணீரையும்
இந்த இன்பங்களையும்.
_________________________________________
02:காத்திருப்பின் கடைசிக்காலம்
-----------------------------
வரவேண்டிய பொழுதில் வா
நீயாக வா
அப்பெரும் இரைச்சலுக்குள் இல்லாத
எனது குரலும்
உன்னை அழைக்கிறது
இப்பெரும் அமைதிக்குள் இல்லாத
என் மெளனமும்
உன்னை அழைக்கிறது
உன் முதல் பார்வைவயில்
எல்லாம் விழித்துக்கொள்ளவா
அப்போது புயலை பிடித்துலுப்பி
நிறுத்திற நிறுத்தில்
எனது கிளைகள் நிரம்பிய வெற்றியிடம்
அழகிய கண்களாகலாம்
எனக்குள் இருக்கும் உன்னை பற்றியவை
என்னை மீறியவை
காற்றில் அடித்துச்செல்லப்பட்டும் இருக்கிறது
இந்தப்பறவை சிலவேளை
எனினும் பறவைக்கென்று சிலதுண்டு
அது எப்போதும் பறவையோடு பறந்து வரும்
பறக்காதபோதும் பறந்துகொண்டிருக்கும்
சிறகுகளுக்குள் சிக்காமலும் காத்திருக்கும் அது
பார்த்தீர்களா
இப்போது எங்கேயோ எதிலோ
குந்தியிருக்கிறேன் நான்
புரிந்துகொள்க
எதையோ புரிந்துகொள்க
வா வரவேண்டிய பொழுதில் வா
பச்சைக்குள் பச்சையாக
கறுப்புக்குள் கறுப்பாக
வர்ணங்களின் வேடமின்றி வா
குளத்தில் புளுதி பறக்கிறது
மரத்தில் கிளைகள் ஒடிகிறது
வந்து பார்த்துவிட்டு
ஏமாந்து ஏமாந்து போகின்றன
எல்லாவற்றிலும் மேலாக
மிக மிகப் பசுமையாக
காத்திருப்பு மட்டும்
அது முற்றிப்பழுத்து
நீயும் முற்றிப்பழுத்து
நடக்கிற சந்திப்பில்
கனி கனியை உண்ணுமெனில்
இன்றைய பல என்னவாகும்
_______________________________________
தீபம்:ஒளியாய் கசிகிறது எழுத்து.