Thursday, October 11, 2007

த.மலர்ச்செல்வன்:கவிதைகள்

எழுதியவர்___________________________
--------------------------த.மலர்ச்செல்வன்

------------------------------------------------------------------


இலைகளும் கிளைகளும்
வாய்பொத்திய இரவில்

______________________

ஒரு சனமும் இல்லை
தெருவில்
தூரத்தில் இரண்டு மூன்று கட்டாக்காலிநாய்கள்
மாடுகளைதவிர.
எங்கும் நிலா ஒளயைப் பாய்ச்சுகிறது
குண்டூசி விழுந்தாலும் எடுக்கலாம்.
நாய்கள் மட்டும் உறைந்துபோன மெளனத்தினை
துயில் எழுப்பின.

எப்படியிருந்த ஊர்தெரியுமா?
நேற்றிலிருந்து இதன்முகம் வேறு
இலைகளும் கிளைகளும் வாய்பொத்திய
ஒரு பூனையும் மியாவ் என
அஞ்சுகிற இரவிது.

ஆறு மணிக்குப்பின்
வெளியில் வருவது பூச்சியாயினும்
அது சுடப்படும்.

எனக்கின்று நித்திரை வரவில்லை
புழுக்கமும் அவிச்சலும்
நேற்றைக்கு முன்பு என்றால்
கண்ணகி அம்மன்
வம்மிமர குருத்து மணலில்
அலுப்புப் போக படுத்துறங்கி
புழுக்கமும் அவிச்சலும் விலக வீடு செல்வேன்.

நானும் மதியும்
இருட்டுப்பட்ட பின்
காளிகோவில் றோட்டால்
சைக்கிளை உருட்டி உருட்டி
கதைத்துச் சிரி்த்து வருவது
இனி எப்ப?


___________________________

அழாத பின்னேரம்
_______________________

அழப்போவதில்லை
நேற்றுச்செத்த நண்பனுக்காய்
இன்று நான் அழப்போவதில்லை.

தொண்டையடைக்க
துயர்கொண்டெழ
ஆடுமாடாய் அடைபடப்போவதுமில்லை

இனி என் தருணம் வந்துவிட்டது
எத்தனை நாளைக்கு ஆமை வாழ்வு?
சொல்லுங்கள்.

போகிறேன்
என் ஊர்
என் உறவு
என் பாசம்
நான் வளர்த்த மரங்கள்
யாவற்றையும் விட்டு
......மீட்புக்காய்
நான் போகிறேன்
அம்மா?
என்னை தேடி தெருத்தெருவாய்
அலையவேண்டாம்.

அப்பாச்சி
உணர்ச்சி பொங்கி
உளற வேண்டாம்.

தம்பி தங்கைகளே
பாசம் கொண்டு
கதறியழவேண்டாம்
அண்ணன் வருவான்
ஒருகால்
கங்கச்சிக்குத் தாவனியும் பாவாடையும்
தம்பிக்கு
பச்சைப்புள்ளி போட்ட ரீசேட்டும்
கறுத்தக் காற்சட்டையும் வாங்கி
அண்ணன் ஒருகால் வருவான்.

நான் போகிறேன்
யாரும் தேடவேண்டாம்
மஞ்சந்தொடுவாய் சோதனைச் சாவடியில்
நேற்றுச்செத்துப்போன நண்பனாய்
நானும் மாள விரும்பவில்லை.

என் தேசம்
என் இனம் நோக்கிப்போகிறேன்
யாரும் தேடவேண்டாம்
_________________________________________
மலர்ச்செல்வன்:ஈழத்தின் மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்தவர்
கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறார்
தனித்துத் திரிதல் என்ற கவிதைத்தொகுதியை வெளியிட்டுள்ளார்
மறுகா என்ற இதழை இயக்குகிறார்
_____________________________________________________
நன்றி:தனித்துத் திரிதல்:த.மலர்ச்செல்வன்கவிதைகள்
_________________________________________________________

0 கருத்துகள்: