_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________
எல்லோரும் சீருடைகளை
அணிந்துகொண்டார்கள்
கல்லறைகளின் முன்னே
இன்றைக்கு ஏற்றப்பட்ட
அந்த ஈகைச்சுடர்
அவசரமாகவே
தீர்ந்துபோனது
அந்தப்பெரிய அமைதி வணக்கம்
அவசரமாகவே
கலைந்து போனது.
அந்த நாளில்
அவர்கள் பழைய முகங்களை
தரித்தார்கள்
அதே மனிதர்கள்
அதே தெருக்கள்
அவர்களது கொள்கையில்
மனித நேசம்
அஞ்சலிக்கப்பட்டபடி.
பதுங்கு குழிக்காக
நிலத்தை அளவெடுத்தவர்கள்
சந்தன முகங்களுடன்
துப்பாக்கிகளை
திருத்தம் செய்யத்தொடங்கினார்கள்.
எல்லோரும் புன்னகைத்தார்கள்
நேற்று திரியப்பார்த்த
அழுகை முகங்களின்
புன்னகையல்ல அது.
அவர்களின் முகங்களில்
ஒரு பாடல்
ஒலித்தபடி இருந்தது
அந்தப்பாடலில்
ஒரு வலியும்
அவசரமான அழைப்பும்
இணைந்து
கம்பீரமாக வெளிப்பட்டது.
அவர்கள் எல்லோரும்
அந்த ஒரு வார்த்தையின்
பாடலுக்கு அணிவகுக்கவே
காத்திருந்தார்கள்.
ஒரே தெருவில்
இரத்தம் தோய்ந்த
முகங்களை நோக்கி
புதிய மொழியுடன்
புறப்படத் தொடங்கினார்கள்.
நெருப்பின்
கல்லறை வெளியில் இருந்து
அந்த உயரிய பாடல்
தொடர்ந்து அவர்களுக்காக
ஒலித்துக்கொண்டிருந்தது.
--------------------------------------------
Thursday, October 4, 2007
அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment