Thursday, October 4, 2007

ஆதிவிடாய்:பொன்காந்தன்

________________________
எழுதியவர்:பொன்காந்தன்
________________________

ஒரு முறையல்ல
பல முறையும்
திரும்பிப் பார்த்தேன்
அது
நான் வந்த பாதைதான்.

ஒரு முறையல்ல
பல முறையும்
தூங்கிப் பார்த்தேன்
முடிவுறாப் பயணங்கள் தான் முன்னே.

இம்முறை
காலடியில் கிடக்கிற
உண்மைகளை
பத்திரப்படுத்துகிறேன்.

வானவில்
வந்துவிட்டுப்போகட்டும்
நட்சத்திரங்கள்
மின்னிக்கொண்டே இருக்கட்டும்
எனக்கு
மின்மினிகள்
நேற்றைய திருவிழாவின்
முட்டாசுத் தாள்கள்
தவறிவிடப்பட்ட
குழந்தையின் அழுகுரல்கள்
இவைதான் முக்கியம்.

மீண்டும் ஒரு முறை
அரக்கனாக
நான் தயாரில்லை.

என் காலடியே
சரணமப்பா
பூமியின் அடிவயிற்றில்
பாதங்களை பதித்து
செல்கிறபோது
எனது முகம்
சடைத்த இலைகளோடும்
பூக்களோடும்
பழங்களோடும்
அறிமுகமாகக்கூடும்.


சாமகானத்தை
மீட்டுகின்றேன்
குறுக்கே படுத்திருக்கிற
எல்லாமும்
விலகிப் போய்விடட்டும்.

எங்கணும் சூரியனாய்
எங்கணும் பனித்துளியாய்
எங்கணும்மலர்வாசமாய்
தவிர்க்க முடியாததாய் வாழும்
எனது ஆதியின்
பிரமாண்டம் விடாய் கொண்ட
இந் நாட்களில்.

பொத்தினால் முத்தாய்
திறந்தால் வானமாய்
துரத்தினால் நதியாய்
மிடுக்கொடு
தவிர்க்க முடியாததாய்
எனது நிரந்தரம்.

அடிக்கு அடி
எனது நடையில்
இராவணத்தை
வேரூன்றிச் செல்வேன்.

நிலமதிர நிலமதிர
யாரும் தூங்கிவிடாதபடியும்
யாரும் கனவு காணாதபடியும்.

மீண்டும் ஒரு முறை
அரக்கனாக
நான் தயாரில்லை.
----------------------------------

0 கருத்துகள்: