Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 16 ஜூலை, 2007

என்னைப்போலவே தகனிக்கப்பட்டவர்கள்.

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________


நான் மரணத்தின் குறையிலிருந்து
மீண்டுகொண்டிருக்கிறேன்
கனவின் சுடுகாட்டின்
புதைகுழி ஒன்றிலிருந்து
அல்லது
சாம்பல் மேட்டில் இருந்து.

புதிய நாக்கு ஒன்றை சிருஷ்டித்து
பேசும் ஒரு பொழுதுக்காக.
மரணத்தில் அல்லது தகன வெளியில்
புரண்டு அவதிப்பட்டு
நித்திரை இல்லாமல் விழிகளைக் கசக்கி
உயிரின் இருள்வெளிக்குள்
திரிந்து அலைந்து இயலாமல்
எழும்பி வருகிறேன்
வலி கரையும் நினைவிற்காய்.

நிலவின் வெளிச்சத்தை
பார்த்துக்கொண்டிருக்க ஆசைப்பட்டேன்
இருட்டில் புதைகுழி தோண்டி
புதைக்கப்பட்டேன்
சூரியனின் ஒளியை
சுவாசிக்க ஆசைப்பட்டேன்
நெருப்பால் எரித்து வீசப்பட்டேன்
கடலின் ஈரத்தில்
உலவ ஆசைப்பட்டேன்
நீர் இன்றிய ஆழத்தின் உஷ்ணத்தில்
தகனமாக்கப்பட்டேன்.

தாகங்களின் நினைவை அழித்து
சவப்பெட்டி செய்து
என்னை நிரப்பிக்கொண்டார்கள்.

எனது வாயின் அசைவுகளை
எவரும் கண்டுகொள்ளவில்லை
பள்ளிக்கூடத்திற்கு அல்லது கடைத்தெருவுக்கு
போகும் சிறுவனின் அலம்பலைப்போல.

புற்களில் மேய்ந்து உலவிக்கொண்டிருந்த என்னை
பண்டிகை ஒன்றின் மதிய போசன விருந்திற்கான இறைச்சிக்கு
வளர்க்கப்பட்ட ஆட்டுக்கடாவைப்போல்
முடிவை எழுதி பிரகடனப்படுத்தினார்கள்.

இனந்தெரியாத சடலமாக
எறியப்பட்ட எனது தெருவில்
இராணுவ சப்பாத்துகளின் கீழே
அரசாங்க செலவில்
அடக்கம் செய்ய
ஜனாதிபதி உத்தரவிடட பொழுதில்
ஆட்சி
வருடத்தை பூர்த்தி செய்தது
ஆயிரத்துநானூற்று ஐம்பத்துநான்கு
புதைகுழிகளை அடைந்து.

ஒரு துப்பாக்கியையும் சைனைட்டையும்
அணைத்தபடிதான் கரைந்துபோக வேண்டும்.

புதைகுழியில் அல்லது சாம்பல் மேட்டில்
ஒன்று மட்டும் எஞ்சிக்கிடக்கிறது
எனது அப்பாவித்தனம் அல்லது
குழந்தை போன்ற சிரிப்பு.
----------0-------------------0------------------------
20.11.2006
_____________________________________
மீள்எழுத்து:நன்றி:எரிமலை.தினக்குரல்

அழிக்கப்பட்ட படகுத்துறை கிராமத்தின் கண்ணீர்வெறி.

------------------------------------------------
எழுதியவர்:தீபச்செல்வன்
--------------------------------------------------------------------இது தாக்குதல் நடந்த படகுத்துறை

-------------------------------------------------------------------

அதே குரூரப் பறவையின் வெறியில்
இன்னொரு கிராமமும் சிதறியது
இன்னும் கூச்சலிட்டு
அழுது அழைக்கிறது
படகுத்துறைக்கிராமம்.

அழுகை சலித்துப் போகிறது
எத்தனை சிதறிய கிராமங்களின்
கவிதைகளின் தலைகள்
உருண்டுகொண்டிருக்கின்றன
எதுவரை மரணத்தின் நாக்கு
விமான முகங்களில்
அசைந்தபடி
கிராமங்களை கிழித்துப்போகும்.

எந்தப்பதிலுமற்றுக்கிடக்கிறது
கிராமமும், அடுக்கப்பட்ட
பிணங்களும்
சிதறிய கிராமங்கள்
தெரிந்தே குரலிட்டன
அவர்கள் குண்டுகளால்
அரசியல் யாப்பு செய்தவர்கள்
நச்சு வாயுகளால்
இதயம் கொண்டவர்கள்.

இப்போதும் இதிலும்
இவைகளைப் பார்த்தும்
அவர்களால் மறுப்புக் கூற முடிகிறது
கண்ணைக் கட்டிக்கொண்டு
கோழை முகத்துடன்
அதே புன்னகையால்
குரலை உயர்த்தி
பதில் வாசிக்க முடிகிறது
கிராமங்களை விழுங்கிய திருப்தியுடன்.

அவர்களால் முடிவது
பிணங்களின் கண்காட்சியை
நடத்தவும்
சவப்பெட்டிகளை சமரசத்துடன்
வழங்கவும்
சுய உரிமையின் பெயரால்
சிதறிய எங்களைக் குவித்த
ஆட்சி பீடத்திலிருந்து
தங்களை இனம்காட்டியபடி.

படகுத்துறை கிராமத்தையும்
அமைதிப்படுத்தி
தீர்ப்பெழுதி குறிவைத்து
குற்றம் பூச முடிந்தது
அது பெண்களையும்
குழந்தைகளையும்
அதிகமாய் பலிகொடுத்த
பாரத்துடன் செய்திக்காக கிடக்கிறது.
__________________________________
02.01.2007 இந்த தாக்குதலில் பதினைந்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகினார்கள். சிறுவர்கள் கால் முதலிய அங்கங்களை இழந்தார்கள்.
___________________________________
மீள்எழுத்து:நன்றி:ஈழநாதம்


முகம் எரிந்துகொண்டிருக்கிறது

-----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
______________________________________
குரலைத்திருகியவர்கள்
இசைக்கருவிகளை உடைக்கவருகிறார்கள்
வார்த்தையை அடைத்தவர்கள்
நாவின்மீது
வாள்வீச வருகிறார்கள்
குழந்தைகளின்
புண்னகைச்சின்னங்களை
நெற்றியில் பொறித்துக்கொண்டு
பிணங்களை கணக்கெடுக்க
வண்டிகளில் வந்திறங்குகிறார்கள்.
புதைந்தவர்களின் வாக்கு மூலம்ங்கள்
தட்டிக்கழிக்கப்பட்டன

அமைதியைப்பற்றி
பிரசங்கம் செய்தவர்கள்
ஆயுதங்களை வழங்குகிறார்hகள்
அபிவிருத்தியைப்பற்றி
ஆய்வு நடத்தியவர்கள்
குண்டுகளை கையளிக்கிறார்கள்
பயங்கரவாதம் பற்றி
விளக்கமளித்தவர்கள்
அதிவேக விமானங்களை
பரிசளிக்கிறார்கள்.
சாகசங்களே பாராட்டப்படுகின்றன.

அவர்கள் யாரும்
எல்லைகளைப்பற்றி
ஏன் பேசாதிருக்கிறார்கள்?
எல்லை தான்டி வரும்
பயங்கரவாதத்தை எதிர்த்து
தீர்க்கப்புறப்படுபவர்கள்
சிதறிய ஊர்களின் தரிசனத்திற்கு
ஏன் எல்லை தாண்டிவரவில்லை?
பாராமுகங்களை படைத்து கைமாறினர்.

கல்லறை நிறம்பிய
ஊர்களின்பாடலிடம்
எதுவரை செவிடராயிருப்பர்?
குருதி பாய்ந்து கொண்டிருக்கும்
நதியிடம் கால்நனைத்தும்
எதுவரை உணராதிருப்பர்
அந்தரப்படும் அப்பாவிகளின்
ஆன்மாக்களின் மொழியிடம்
எதுவரை ஊமராயிருப்பர்
தமது வர்ணவண்டிகளை
மிக வேகப்படுத்தினர்.

வயிறுகளில் வெறுமை முட்டிய
பசியின்கேள்விகளிடம்
இறுக மூடிய தெருக்களிடம்
சிறைப்படுத்தப்பட்ட ஊர்களிடம்
சித்திரவதைக்கப்படும்
சிறைக்கூடங்களிடம்
பயணங்களை கைது செய்யும்
காவல் விதிகளிடம்
அடையாளத்தை அழிக்கும்
நிறைவேற்று அதிகாரத்திடம்
கண்ணாடிகளை அனிந்து
எதுவரை குருடராயிருப்பர்.
முகங்களை மாற்றி
வார்த்தைகளுக்கு நிறமணிந்து
மாளிகைகளுக்குள்
அடைந்து கொண்டனர்.
முகம் எரிந்துகொண்டிருக்கிறது.
_________________________________
மீள்எழுத்து:நன்றி:ஈழநாதம்.தினக்குரல்.தின்னை

சனி, 14 ஜூலை, 2007

யாழ்.நகரம்:கவிதை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்


------------------------------------------------------------------

ஒரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி:யாழ் நகரம்.

01
எனது சைக்கிள்
சந்தியில்
குருதி வழிய வழிய
உடைந்து கிடக்கிறது
நாட்குறிப்புக்களை
காற்று வலிமையாக
கிழித்து போகின்றன
எனது பேனா
சிவப்பாகி கரைகிறது.

மதிய உணவிற்கு
வாங்கப்பட்ட
அரை ராத்தல் பாணை
நாய்கள் அடிபட்டு
பிய்த்து தின்னுகின்றன
வாழைப்பழங்களை
காகங்கள்
கொத்தி தின்னுகின்றன.

எனது பிணம்
உரிமை கோரப்படாமல்
குருதியால் போர்க்கப்பட்டிருக்கிறது.

வீட்டின் கூரை
உக்கியிருக்கிறது
சுவர்கள் கரைந்து
சரிந்திருக்கின்றன
அம்மா அக்கா தம்பி தங்கைகள்
அழுகையில்
கூடியிருக்கிறார்கள்.

வீதி மயானமாகிறது
சீருடைகள் சவப்பெட்டியாகின்றன
மின் தூன்கள்
உயிரை குடிக்கின்றன.

யாரோ சாப்பிட வருகிறார்கள்
கொத்துரொட்டிக்கடை திறந்திருக்கிறது.

02

நான் யாரென்பதை
நீங்கள் அறியாதிருப்பீர்கள்
ஆவலற்றிருப்பீர்கள்
நீங்கள் சாப்பிடும்
கொத்துரெட்டி
மேசையில் பரவியிருக்க
எனது பிணம்
பின்னணியாய் தெரியும்.

இவன் ஏன் சுடப்பட்டான்
என்பது பற்றிக்கூட
நீங்கள் சிந்திக்கமாட்டமடீர்கள்
உங்களால்
தொடர்ந்து அமைதியாய்
சாப்பிட முடியும்
நாளைக்கு வெடிக்கப்போகிற
வன்முறைகளுக்கு
ஊரடங்கு அமுலுக்கு
நீங்கள் தயாராகுவீர்கள்.

03

கடையில் இருக்கும்
பொருட்களில்
சிலவற்றை முண்டியடித்து
வாங்கிவிட்டு
குறைந்த பொருட்களோடு
கூடிய பாரத்தோடு
வீட்டிற்கு வருவீர்கள்
பூட்டிய வீட்டுக்கதவை தட்டி
கூப்பிட்டு
அவதானமாக கதவை திறந்து
உள் நுழைவீர்கள்
கதவுகள ஜன்னல்களை
இறுக சாத்திக்கொள்வீர்கள்.

அவன் என்ன செய்திருப்பான்
என்ற கேள்வி
நீர் தீர்ந்து காற்று வரும்
குழாயை உலுப்புகையிலும்
எழாமலிருக்கும்.

ஒரு பக்கத்துடன் வெளிவரும்
நாளைய தினஇதழ்
அதில் அவன் சாவு
இனங்காணப்பட்டிருக்கும்
என்றுகூட எதிர்பார்க்கமாட்டீர்கள்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு
ஏழு மணியுடன்
கண்னை மூடிக்கொள்கையில்
இரவு பெரிதாக விரிகையில்
எதுவும் நினைவு வராது.

நாளை அந்த கொத்துரொட்டிக்கடை
பூட்டியிருக்கலாம்
வேறு எங்கேனும்
ஒரு கொத்துரொட்டிக்கடை
கொஞ்சரொட்டிகளுடன் திறந்நிருக்கும்.
கொஞ்ச பொருட்களுடன்
ஓரு பலசரக்குகடையும் திறந்திருக்கும்.


04

நான் என்ன செய்தேன்
எதை விரும்பினேன்
யாரை நேசித்தேன்
யாரை எதிர்த்தேன்?

எனது வீடு எந்த
கிராமத்திலிருக்கிறது
எனது பேஸில்
யாருடைய படம் இருந்தது
எந்த பிரதேச வாடையுடைய
உடைகளை
நான் அணிந்திருந்தேன்
எனது தலைமுடி
எப்படி சீவப்பட்டிருந்தது?

யார் என்னை கவனித்தார்கள்
எந்த முகாங்கள்
அமைந்திருக்கும் வீதியால்
நான் பயணிக்காதிருந்தேன்?

எந்த சீருடைகளுக்கு
நான் அச்சமாயிருந்தேன்
ஏன் பொது உடைகளுடன்
வந்தவர்களால்
நான் சுடப்பட்டேன்?

எனது பிணத்தில்
எத்தனை கேள்வியிருக்கிறது
எப்பொழுது நான்
இனங்காணப்படுவேன்?


05

நான் எந்தவகை அமைதியாயிருக்கிறேன்?
நீங்கள் எந்தவகை அமைதியாயிருக்கிறீர்கள்?
குறிப்பிட்ட நேரங்களுக்குள்
என்ன இருக்கிறது?
இயல்பு குழைந்த யாழ்.நகரத்தில்
என்ன நடக்கிறது?
______________________________________
05.09.2006.யாழ்.நகரம்.

வியாழன், 12 ஜூலை, 2007

சிறைச்சாலை அல்லது அகதிமுகாம் ஒன்றிலிருந்து..

எழுதியவர்___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------------------

உனக்கு கடிதம் எழுதும்
என் பேனாவுக்கு பக்கத்தில்
எல்லோரும் அழுதபடி
இருக்கிறார்கள்
நாங்கள் தங்கியிருப்பது
மாணவ விடுதியல்ல
சிறைச்சாலை அல்லது
அகதிமுகாமாக
இருக்கவேண்டும்.

இங்கிருக்கும்
சில சகோதரர்களின்
உறவுகள் அங்கு
விமானங்களால்
பலியெடுக்கப்பட்டடதாக
அழுதுகொண்டிருக்கிறார்கள்
யாருக்கும் யாரும்
ஆறுதல் சொல்ல முடியாது
மூலைகளில்
வைக்கப்பட்டிருக்கிறோம்.

நேற்று முன்னயை தினம்
எங்களோடிருந்த
மாணவர்கள் இருவர்
சுட்டுக்கால்லப்பட்டுவிட்டார்கள்
எங்களால் அவர்களுக்காக
சத்திமிட்டு
அழக்கூட முடியவில்லலை.

அகதி முகாமாயிருக்கும்
எங்கள் விடுதிமீது
கைக்குண்டுத்தாக்குதலும்
நடத்தப்பட்டது
சிலர் வைத்தியசாலையில்
மருந்துப்பொருட்கள் இன்றியும்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாங்கள் தங்கியிருக்கும்
மாணவ அகதிமுகாமிற்குள்
அச்சுறுத்தும்படி
ஆயுதங்களுடன் புகுந்து
சோதனையிடப்பட்டது
முகாம்களை தகர்ப்பதுபோல
முற்றுகையிடப்பட்ட
நாளின் அதிர்ச்சியில்
எல்லோரும் படுகொலைசெய்யப்பட்ட
புத்தகங்களாக பரவி இருக்கிறோம்.

எங்களில் சிலரை காணவில்லை?
ஊரடங்கு அமுலில் சிலர்
காணாமல் போகிறோம்?
ஊரடங்கு அமுலற்றபோது
பலியெடுக்கப்படுகிறோம்
எல்லோரும் வேண்டுமளவுக்கு
கெளரவமாக வருத்தப்படுகிறோம்.

எவ்வளவு வலிமையாயிருந்த
எங்கள் குரலின் நாடி
துப்பாக்கிகளின் முற்றுகையிலும்
பச்சை உடைகளின்நிழலிலும்
அன்றைக்கு
ஒடுக்கித்தான்போனது
அவர்களது துப்பாக்கிகளும்
வீடியோக்களும்
எங்கள் முகங்களை
பதிவுசெய்தபோது
உன் முகமும் அழைப்பும்
அவசரமாகவே ஞாபகமானது
--------------------------------------

புதன், 11 ஜூலை, 2007

மரணத்தோடு விளையாடிய குழந்தை


_______________
தீபம் : ஒளியாய் கசிகிறது எழுத்து.
_____________________________________________

ஊடகவியளாலர் எஸ்போஸ் அண்மையில் மர்ம ஆயுததாரிகளினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
இவர் கவிதைகளை கூடுதலாக எழுதிவந்தவர்.
கருணை.விடுதலை.சுயஉரிமை என்பன பற்றி குரலிட்டவர்.
நிலம் இதழின் ஆசிரியராக இயங்கியவர்.
மேலும் பலஇதழ்கள்.பத்திரிகைகளிலும் பணியாற்றியிருந்தார்.
அவருக்கு தீபம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.
அவரது இரண்டு கவிதைகளும் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.
_______________________________________________________

மரணத்தோடு விளையாடிய குழந்தை
---------------------------------------------
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

உனது ஒளி மிகுந்த கவிதைகளிடம்
அவர்கள் முழுமையாக
தோற்றுப்போனார்கள்
இருளை கொடடூர முகத்தில்
அப்பிக்கொண்ட அவர்கள்
வலிமை மிகுந்த
உனது குரலிடம்
சரணடைந்து போனார்கள்.

விழித்துக்கிடந்த
உனது சுதந்திரத்தின்
குழந்தைமீது
கூரிய கத்தியை வைத்து
குரலை நசித்துவிட்டு
சிரித்தபடி போகிறார்கள்.

நீ சுமந்துவந்த
தேன் நிரம்பிய மண்பாணை
உடைந்து போனதாய்
அவர்களுக்குள்
திருப்தி தலை தூக்க
வீதியை இருட்டாக்ககி
ஓடிக்காண்டிருக்கிறார்கள்.

இருப்பினும் உனது
எல்லா கவிதைகளும்
விழிகளில்
சூரியனை கொண்டு
பிரகாசிக்கின்றன
உனது எண்ணங்கள்
கடலிலும் வெளியிலும் புறப்படுகிறது.

நீ வாழ்ந்து வந்த
சோலைகளின் மீதும்
அவர்களின் கத்திகள் பதிந்தன
நீ வளர்த்த மரங்களின்மீதும்
அவர்களின் துப்பாக்கிகள்
பதிந்தன
உன்ன தூக்கிக்கொண்டு
கருகிய வனம் ஒன்றிறிகுள்
போகச்சொன்னார்கள்.


நீ கொண்டாடிய சிரிப்ப பலியெடுக்க
பின் தொடர்ந்து வந்தார்கள்
நீ எதிர்த்த பயங்கரத்த
உன் மீதே
பிரயோகிக்க திரிந்தார்கள்.

எப்போழுதும் போலவே
உனது வானம்
உனது நிறத்த அணிந்திருக்கிறது
எப்போழுதும் போலவே
உனது வழி உனது வெளிச்சத்தில்
மிகுந்திருக்கிறது
இன்னும்
உனது வார்த்தைகள்
உனது இசையால் நிறைந்நிருக்கின்றன
உனது கேள்வியும் போராட்டமும்
அதிகாரங்களுக்கு முன்னால்
முண்டியடிக்கிறது.

ஒரு குழந்தையை
படுக்கையின் மீது
படுகொலை செய்து விட்டு
எப்பொழுதும் விடுதலைக்காய்
அதிகாரத்தை எதிர்த்து
குரலிடும்
அதன் ஒளிமிகுந்த வார்த்தைகளை
எடுத்துப்போகிறார்கள்.
_____________________________________________
இதில் போஸ் நெருங்கிக்கையாலும் சில சொற்களும் இடங்களும் வருகின்றன.
தீபம் : ஒளியாய் கசிகிறது எழுத்து.
_____________________________________________

வெள்ளி, 6 ஜூலை, 2007

பதுங்கு குழி மடி


அறுக்கப்பட்ட முலைகளில்
பாலை ஊட்டப்பட்ட
எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில்
பிறந்து வளர்கிறார்கள்
அவதிப்படும் நகரத்தில்
அவர்களின் நித்திரை
குருதி பிரண்ட தோட்டாக்களை
வீதிகளில் பொறுக்கி
கணக்கிட்டு தங்கள் புலமையை
வளர்த்துக்கொள்கிறார்கள்
பீரங்கிகளின் முகங்களின் தேவைகளையும்
கவசவண்டிகளின் இரைச்சல்களின்
அதிகாரத்தையும்
அவர்கள் தினமும் பார்த்து நிற்கநேரிடும்
அடையாளங்களுக்கு கீழ்
அவர்களுக்கும் விசாரனைகள் நடக்கும்
சோதனைகள் நடக்கும்
தண்டனையும் உண்டு
புன்னகையிழந்த
எனது பிள்ளைகளின் உரிமை
துப்பாக்கிகளின் குறிக்குள்
சுருங்கிப்போயிருக்கும்
எப்போதும்போல்
பதுங்கு குழியின் மடியில்
எனது பிள்ளைகள்
கண்களை மறைத்திருக்கிறார்கள்
நாடொன்றின் தேசிய பாதுகாப்பின் பெயரில்.

2006

நன்றி -உயிர்எழுத்து  மற்றும் ஈழநாதம்

ஞாயிறு, 1 ஜூலை, 2007

பயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

வழிநெடுக அழிக்கப்பட்ட
கிராமத்தின் ஊமைத்துயரம்
கொட்டிக்கொண்டே போனது
துயரத்தை மணந்து கிராமமம்
அதை தூக்கியபடி பறவையும்
அடைபட்டுக்கொண்டிருந்தது

இனி எல்லோரும் ஊமைகள்

நிலங்களுக்காகவே
கொடுமைக்காட்சிகளைபேசியபடி
நிறம் பூசியது பறவையின்
ஊனமடைந்த கைகள்

அந்தப்பறவை
இன்னும் வட்டமிட்டு
கோரத்தை சுமந்து
எங்கள் திசைகள்மீது
சிறகுகளை அடித்தது

அதன்குணம் வீடுகளைச்சூழ
விசம்பரப்பும்
பார்வையை ஆழவிட்டு
மரங்களை அசைத்துதின்றது

பறவைகளே வேட்டையாடின
அதுவும்
மனிதர்களை சப்பியபடி
வீடுகளை காவிக்கொண்டு
கிராமத்தை பிரளயம்நோக்கிக்கொண்டுபோனது

சுவரில் மோதி
அடிபட்டு விழுந்தது பறவையும் கிராமமும்
சுவரடியில்
கிராமம் சிதறிக்கொட்டியது

அந்தப்பறவைக்குப்பிறகு

கோழிகள்கூட குஞ்சுகளுக்கு
பருந்தாயின
குஞ்சுகளும் பருந்தாகின
சிறகுகளை மணந்து
உணர்ந்துகொள்ளமுடியவில்லை?

சிறகுகள் பயங்கரம்கலந்து புயலாகின

மீண்டும் அந்தப்பறவை
நிறம் பூசிவரும்
நினைவிலிருக்கிறது
அந்தப்பறவையின் பயங்கரமான சிறகுகளும்
அது நிலத்தில் விழுத்தும் வட்டமும்
கொடூரம் தாங்கியசொண்டும்

நெருங்கிச்சேர்கிறது
பறவையால் அழிக்கப்பட்ட கிராமம்
-----------------------------------------------------------------------
நன்றி-உயிர்எழுத்து,ஈழநாதம்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...